ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு: 8 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை

குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. அடுத்த 8 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?’’ என்று லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

இது தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி,சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இந்தியக் குற்றவியல் சட்டம் 499,500 ஆகிய பிரிவுகளின்படி ராகுல்காந்தி குற்றவாளி என்றது தீர்ப்பு. அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சூரத் நீதிமன்றம் வழங்கிய 168 பக்கத் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரை ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள, மோடி குடும்பப் பெயர் கொண்ட 13 கோடி மக்களை அவர் அவமதித்து உள்ளார். அவர் பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பான மின்னணு ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. அவரது பேச்சை நேரில் கேட்ட சாட்சிகளும், ராகுல் காந்திக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். மோடி என்ற பெயரை அவர் வேண்டுமென்றே குறிப்பிட்டு, அவமரியாதை செய்துள்ளார்.

மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, எம்.பி. என்ற வகையில் பொதுக்கூட்டத்தில் பேசுவது, மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு எம்.பி. தவறு இழைக்கிறார் என்பது, மிகப்பெரிய தவறாகும். அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கினால், சமுதாயத்துக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி. பதவி பறிப்பு

குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ-க்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இதன் அடிப்படையில், குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அறிவுரையின்படி, ராகுல் காந்தியின்எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இது தொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘‘சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்படுகிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் நகல், தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

மக்களவை கூட்டத் தொடரில் இன்று காலை ராகுல் காந்தி பங்கேற்ற நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ட்விட்டரில் ராகுல் வெளியிட்ட பதிவில், “இந்தியாவுக்காக குரல் எழுப்பி, போராடி வருகிறேன். அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளர்.

சட்ட நிபுணர்கள் கருத்து

ராகுல் காந்தியின் பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் கூறியதாவது:

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டுள்ளார். குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் ஜாமீன் வழங்கியுள்ளது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் பதவி நீக்க நடவடிக்கையை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய முடியும்.

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தால், ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. பதவியைப் பெறுவார். ஒருவேளை இடைக்காலத் தடை விதிக்கப்படாவிட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் வயநாடு மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

சூரத் நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு ஆகிய இரு விவகாரங்களுக்கு எதிராக ராகுல் காந்தி சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலில் இருக்கிறார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை அவரால் மேல்முறையீடு செய்ய முடியும்.

உச்ச நீதிமன்றத்திலும் அவரால் நிவாரணம் பெற முடியவில்லை என்றால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும். அதற்குப் பிறகு அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஒட்டுமொத்தமாக 8 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட தடை ஏற்படும்.

இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும் 4 வழக்குகள்

மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் சங் பரிவார் அமைப்புகளை குற்றம் சாட்டியது தொடர்பாக, மகாராஷ்டிராவின் பிவண்டி நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல, மகாராஷ்டிராவின் ஷிவ்டி, அசாமின் குவாஹாட்டி, ஜார்க்கண்டின் ராஞ்சி நீதிமன்றங்களிலும் ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்குகள், நிலுவையில் உள்ளன. இந்த 4 வழக்குகளிலும் விரைவில் தீர்ப்பு வெளியாகக்கூடும் என்று தெரிகிறது.

 

Read previous post:
0a1a
‘கேடி-தி டெவில்’ பான் இந்திய திரைப்படத்தில் இணைந்தார் ஷில்பா ஷெட்டி

நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில்,  பிரமாண்டமான பான் - இந்திய ஆக்சன் படமாக உருவாகும்   ‘கேடி-தி டெவில்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்டை  தயாரிப்பாளர்கள்  வெளியிட்டுள்ளனர்.

Close