பீனிக்ஸ் – விமர்சனம்

நடிப்பு: சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துகுமார், திலீபன், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன், மூணார் ரமேஷ், ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நட்சத்திரா, வர்ஷா விஸ்வநாத், நவீன், ரோகித், மது வசந்த், கிஷோர், ரிஹான், பிரசாந்த், ரிஷி, நந்தா சரவணன், ஆடுகளம் முருகதாஸ், ஆடுகளம் நரேன், ஸ்ரீஜித் ரவி மற்றும் பலர்
கதை, திரைக்கதை, வசனம், சண்டைப்பயிற்சி & இயக்கம்: அனல் அரசு
ஒளிப்பதிவு: வேல்ராஜ் ஆர்
படத்தொகுப்பு: பிரவீன் கே.எல்
இசை: சாம் சிஎஸ்
தயாரிப்பு: ’ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ்’ ராஜலட்சுமி அனல் அரசு
பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்
எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே திரையில் வாழ்ந்துகாட்டி, பாராட்டுகளைக் குவிக்கும் பிரபல பான் – இந்திய முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம்; பல அதிரடி ஆக்சன் ஹீரோக்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக சிறப்பாகப் பணியாற்றி, இந்தியத் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து தக்க வைத்திருக்கும் அனல் அரசு முதன்முதலாக இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம்; டீசர், டிரைலர் வெளியாகி, ஆரம்ப நிலையிலேயே கவனம் ஈர்த்த திரைப்படம்… போன்ற பல காரணங்களால் திரைத்துறையினர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பீனிக்ஸ்’. தற்போது திரைக்கு வந்திருக்கும் அத்திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…
‘பீனிக்ஸ்’ என்பது ஒரு பறவை. பண்டைய கிரேக்கப் புராணங்களில் வரும் கற்பனைப் பறவை. மெகா சைஸ் கழுகு போன்ற தோற்றம் கொண்ட இந்த பறவை, தன்னைத் தானே எரித்து, அந்த சாம்பலிலிருந்து மீண்டும் பிறக்கும் ஆற்றல் கொண்டது என்பதும், இதனால் அதற்கு மரணமே இல்லை என்பதும் தொன்மம். இக்கருத்துக்கு இணங்க, வாழ்க்கை நெருக்கடிக்குள் சிக்கி அமிழும் ஒரு நபர், அதிலிருந்து மீண்டெழுந்துவிட்டால் அவரை ‘பீனிக்ஸ் பறவை’ என்று பாராட்டுவது இலக்கிய மரபு. அதுபோல, இப்படத்தில், தீயவர்களின் கொலைச்சதி திட்டங்களால் கதையின் நாயகன் மரணவிளிம்பை நெருங்கிய போதிலும், வீழ்ந்துவிடாமல் மீண்டும் மீண்டும் வீறுகொண்டு எழுந்து நிற்கிறார் என்பதால், இப்படத்துக்குப் பொருத்தமாகவே ‘பீனிக்ஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இப்படக்கதை வடசென்னையில் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான கரிகாலனுக்கும் (சம்பத்ராஜ்), அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கும் (முத்துக்குமார்) இடையே கடும் போட்டாபோட்டி நிலவி வருகிறது. ஒருநாள், கட்சிக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ கரிகாலனை அவமானப்படுத்தி விடுகிறார்கள். மறுநாள் அவர்களை எரித்துக்கொன்று, அஞ்சலியும் செலுத்துகிறார் கரிகாலன்.
இந்நிலையில், எம்.எல். ஏ, கரிகாலனை பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், 26 முறை கொடூரமாக வெட்டி, படுகொலை செய்கிறார், 17 வயது நிரம்பிய பதின்ம வயது (டீன் ஏஜ்) சிறுவனும், கதை நாயகனுமான சூர்யா (சூர்யா சேதுபதி). அவரை கைது செய்யும் காவல்துறை, நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின், ’சிறார் கூர்நோக்கு இல்லம்’ எனப்படும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கிறது.
கொலையுண்ட எம்.எல்.ஏ. கரிகாலனின் மனைவி மாயா (வரலட்சுமி சரத்குமார்), தன் கணவனைக் கொன்ற சூர்யாவை பழி வாங்கத் துடிக்கிறார். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஏற்கெனவே அடைக்கப்பட்டிருக்கும் ரவுடித்தனமான கூலிப்படை சிறார்களை ஏவி, சூர்யாவைத் தீர்த்துக்கட்ட ஏற்பாடு செய்கிறார் மாயா. இந்த கொலை முயற்சியை அதிரடி ஆக்சன் மூலம் வெற்றிகரமாக முறியடிக்கிறார் சூர்யா.
இதனால் மேலும் ஆவேசம் அடையும் மாயா, வடநாட்டு கூலிப்படை சிறார்களை வரவழைத்து, அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கத் தோதாக அவர்களைக் கொண்டு முன்னாள் எம்.எல்.ஏ.வை படுகொலை செய்யும்படி செய்கிறார். இதனால் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படும் அக்கொலையாளிகள், சூர்யாவை படுகொலை செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த கொலை முயற்சியையும் அதிரடி ஆக்சன் மூலம் தவிடுபொடி ஆக்குகிறார் சூர்யா.
இதற்குப்பின், மாயாவின் அப்பாவான அமைச்சர் (அஜய்கோஷ்), மற்றொரு கொலைச்சதி திட்டம் தீட்டுகிறார். இதிலிருந்து சூர்யா தப்பித்தாரா, இல்லையா? தவிர, ஒரு எம்.எல்.ஏ.வை கொலை செய்யும் அளவுக்கு அவர் மீது சூர்யாவுக்கு என்ன கோபம்? முன்கதை என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் விடை அளிக்கிறது ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, 17 வயது பதின்ம வயது சூர்யாவாக சூர்யா சேதுபதி நடித்திருக்கிறார். தனது வயதுக்கேற்ற, அதே நேரத்தில், நாயகனாக நடிக்கும் முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில், தனது வயதுக்கும் மீறிய சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஒரு ஆக்சன் ஹீரோவுக்குத் தேவையான உடலமைப்பு மற்றும் துடிப்பான நடிப்புடன், அறிமுக நாயகன் போல் இல்லாமல், அனுபவம் வாய்ந்த நாயகன் போல் கெத்தாக, அசால்டாக நடித்திருக்கிறார். ரத்தம் தெறிக்க எதிரிகளைப் பந்தாடும் ஆக்சன் காட்சிகளில் அட்டகாசமாக தூள் கிளப்பியிருக்கிறார். ரசிகர்கள் விரும்பும் மாஸான காட்சிகளில் ரொம்ப இயல்பாக மிரட்டி கைதட்டல் பெறுகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஒரு புதிய அதிரடி ஆக்சன் ஹீரோ கிடைத்திருக்கிறார். வரவேற்கிறோம். வாழ்த்துகள் சூர்யா சேதுபதி.
வில்லனாக, எம்.எல்.ஏ. கரிகாலனாக சம்பத்ராஜும், வில்லியாக, எம்.எல்.ஏ.வின் மனைவி மாயாவாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்திருக்கிறார்கள். கொடுத்த வேலையை இருவரும் சிறப்பாகச் செய்துள்ளனர்.
நாயகனின் அம்மாவாக தேவதர்ஷினி நடித்திருக்கிறார். ஒரு மகன் கொல்லப்பட்டு விட, இன்னொரு மகன் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட, இருவரையும் நினைத்து பரிதவிக்கும் பாசமான அம்மாவாக அருமையாக நடித்திருக்கிறார்.
நாயகனின் அண்ணனாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.வாக முத்துக்குமார், நாயகனின் பயிற்றுநராக வத்திக்குச்சி திலீபன், காவல்துறை உயரதிகாரி அறநெறியனாக ஆடுகளம் நரேன், அமைச்சராக அஜய் கோஷ், மற்றும் அபி நட்சத்திரா, ஹரீஷ் உத்தமன், மூணார் ரமேஷ், வர்ஷா விஸ்வநாத், நவீன், ரோகித், மது வசந்த், கிஷோர், ரிஹான், பிரசாந்த், ரிஷி, நந்தா சரவணன், ஆடுகளம் முருகதாஸ், ஸ்ரீஜித் ரவி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குநராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு. சூர்யா சேதுபதியை ஆக்சன் ஹீரோவாக அறிமுகம் செய்யப் பொருத்தமான நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கு அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடன் விறுவிறுப்பாக நகரக் கூடிய திரைக்கதை அமைத்து, வழவழவென இல்லாமல் சுருக்கமாகப் பேசும் விதமாக வசனம் எழுதி, சூர்யா சேதுபதி உள்ளிட்ட நடிப்புக் கலைஞர்களிடமும், தொழில்நுட்ப கலைஞர்களிடமும் திறமையாக வேலை வாங்கி, சுவாரஸ்யமாக படத்தை இயக்கியிருக்கிறார் அனல் அரசு. மேலும், இப்படத்தை எல்லோரும் கொண்டாடும் பக்கா கமர்ஷியல் எண்டர்டெயினராகவும் வழங்கியிருக்கிறார். அவரே ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால், சூர்யா சேதுபதியை அனைவரும் ஏகமனதாக ஆக்சன் ஹீரோவாக ஏற்கத் தக்க வகையில் திரையில் தனித்துவத்துடன் காட்டியிருக்கிறார். பாராட்டுகள் அனல் அரசு.
சாம் சி.எஸ்ஸின் இசை, வேல்ராஜின் ஒளிப்பதிவு, பிரவீன் கே.எல்லின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், படத்தின் உயர்ந்த தரத்துக்கும், நேர்த்திக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.
’பீனிக்ஸ்’ – அதிரடி ஆக்சன் பிரியர்களுக்கு மாஸான செம விருந்து! உண்டு களிக்கலாம்!
ரேட்டிங்: 3.8/5.