பறந்து போ – விமர்சனம்

நடிப்பு: மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, சிறுவன் மிதுல் ரியான், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, தேஜாஸ்வினி, அஜூ வர்கீஸ், பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ராம்
ஒளிப்பதிவு: என்.கே.ஏகாம்பரம்
படத்தொகுப்பு: மதி வி.எஸ்.
பாடலிசை: சந்தோஷ் தயாநிதி
பின்னணி இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: செவன் சீஸ் அண்டு செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரோஸ் புரோடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள்: ராம், வி.குணசேகரன், வி.கருப்புசாமி, வி.ஷங்கர், சஜித் சிவானந்தன், கே.மாதவன்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்
ராம் – தமிழ் திரைத்துறையில் தனித்துவமான இயக்குநர். தமிழ் திரையுலக வரலாற்றில் தவிர்க்க இயலாத இயக்குநர். அவர் எடுத்துக்கொள்ளும் கதைகளின் கருப்பொருளும், கதை சொல்லும் விதமும் தனித்தன்மை வாய்ந்தவை. கடந்த பதினெட்டு ஆண்டுகளில், ’கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘ஏழு கடல் ஏழு மலை’, தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘பறந்து போ’ என மொத்தம் ஆறே ஆறு படங்கள் தான் அவர் இயக்கியிருக்கிறார். ஆனால், இவை தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும், புகழையும் அவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. இந்த விருதுகளை விட, மேற்கண்ட ஒவ்வொரு படமும் வெளிவந்தவுடன், விமர்சகர்களால் கொண்டாடப்பட்டு, பெரும் விவாதங்களுக்கும், பொருள் பொதிந்த உரையாடல்களுக்கும் இடம் அளித்திருக்கின்றன என்பது தான் இவரது படைப்புகளின் சிறப்பு. தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படமும் அத்தகைய சிறப்பு வாய்ந்ததே.
பணமின்றி ஓர் அணுவும் அசையாது என்றாகிவிட்ட இன்றைய கார்ப்பரேட் முதலாளித்துவ உலகில், அந்த பணத்தைப் பிடிக்க பெற்றோர்கள் ஓய்வில்லாமல் அரக்கப் பரக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில், தங்கள் குழந்தைகளின் ‘குழந்தைத்தனமான’ விருப்பங்கள் என்ன என்பதை கவனிக்கவும், அவற்றை நிறைவேற்றவும் மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கு அவற்றை ஞாபகப்படுத்தி, குழந்தையோடு குழந்தையாய் மாறி, குதூகலமாய் ஒரு ’ரோடு ட்ரிப்’ போய் வரலாமே என்று நகைச்சுவை மற்றும் கரிசனம் கலந்து பரிந்துரைப்பது தான் இந்த ‘பறந்து போ’ திரைப்படத்தின் ஜாலியான மையக்கரு.
கதை என்னவென்றால், சென்னை புறநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இளம் தம்பதியரான கோகுல் (மிர்ச்சி சிவா) – குளோரி (கிரேஸ் ஆண்டனி) வசித்து வருகிறார்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு எட்டு வயதில் – மூன்றாம் வகுப்பு படிக்கும் – ஒரு மகன். பெயர் அன்பு (மிதுல் ரியான்). அவனை கோகுலும், குளோரியும் தங்கள் சக்திக்கு மீறிய வகையில் உயர்தரமான தனியார் பள்ளிக்கூடப் படிப்பு, விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்கள், காஸ்ட்லியான உடைகள் மற்றும் காலணிகள் என வசதியாக வளர்த்து வருகிறார்கள்.

படம் தொடங்கும்போது, பள்ளிக்கூட விடுமுறை நாள்; ஆதலால், மகன் அன்புவை பாதுகாப்பாக (!) வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, ஆர்கானிக் பொருட்களை விற்கும் வேலை நிமித்தம் அப்பா கோகுல் வெளியே போயிருக்கிறார். அம்மா குளோரி, கோவையில் நடக்கும் கண்காட்சியில் புடவை விற்பனை ஸ்டால் போட்டிருப்பதால், கோயம்புத்தூருக்கு சென்றிருக்கிறார். பூட்டப்பட்ட வீட்டுக்குள் தனியே மன அழுத்தத்தில் இருக்கும் அன்பு, தன் தனிமையை விரட்ட, ’ஸ்கேட்டிங் போர்டில்’ ஏறி வீட்டுக்குள் தாறுமாறாக வலம் வருவது உட்பட ஏகப்பட்ட சேட்டைகள் செய்கிறான். ஸ்கேட்டிங் போர்டு எண்ணெய் டின்னில் மோதி பதம் பார்க்க, எண்ணெய் ஒழுகி, தரையில் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பது உட்பட நிறைய அழிச்சாட்டியங்கள் செய்து, வீட்டையே இரண்டாக்கிக் கொண்டிருக்கிறான்.
இந்தச்சூழலில் வீட்டுக்கு வரும் அப்பா கோகுலிடம், தன்னை டூ வீலரில் வெளியே அழைத்துச் செல்லுமாறு அடம் பிடிக்கிறான் அன்பு. முதலில் மறுக்கும் கோகுல், பிறகு அன்புவின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் சம்மதம் தெரிவிக்கிறார்.
அப்பாவும், மகனும் டூ வீலரில் ‘ரோடு ட்ரிப்’ கிளம்புகிறார்கள். இந்த நீண்ட பயணத்தின்போது, தன் மகனின் மனவெளியில், குழந்தைத்தனமான விருப்பங்கள் சார்ந்த ஓர் உலகம் இருக்கிறது என்பதையும், நமது வாழ்வியல் நெருக்கடி மற்றும் எந்திரத்தனமான அன்றாட வாழ்க்கை ஓட்டம் காரணமாக அதை நாம் கவனிக்கவே இல்லை என்பதையும் உணர ஆரம்பிக்கிறார் கோகுல்.
அதன்பிறகு என்ன நடந்தது? சிறுவன் அன்புவின் மனவெளி உலகில் உள்ள விருப்பங்கள் என்னென்ன? அவற்றை அவன் பூர்த்தி செய்ய கோகுல் உதவினாரா? இப்பயணத்தில் அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள்? அந்த மனிதர்கள் இவர்களுக்கு எத்தகைய அனுபவத்தை, படிப்பினையைக் கொடுத்தார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு காமெடியும் கருத்தும் கலந்து சிரிக்கச் சிரிக்க விடை அளிக்கிறது ‘பறந்து போ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இக்கதைப்படி, நாயகன் யார் என்று பார்த்தால், அது சிறுவன் அன்பு தான். ’சுட்டிப்பையன்’, ’வாலுப்பையன்’, ’அதிகப்பிரசங்கி’, ’அடங்காப்பிடாரி’, ’வெகுளி’ என்று என்ன பெயர் வைத்தாலும் அத்தனைக்கும் பொருத்தமானது அந்த அன்பு கதாபாத்திரம். அத்தகைய ஜனரஞ்சகமான, அதே நேரத்தில் மிகவும் சிக்கலான கதாபாத்திரத்தை ஏற்று, ரசிக்கத்தக்க விதத்தில், மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறான் சிறுவன் மிதுல் ரியான். இந்த வயதில் இத்தனை இயல்பாகவும், அனைவரையும் எளிதில் ஈர்க்கும் வகையிலும் நடிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பது வரம். படம் பார்த்த எல்லாப் பார்வையாளர்களின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டான். வாழ்த்துகள் மிதுல் ரியான்.
சிறுவன் அன்புவின் அப்பா கோகுலாக மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார். அவரது திரையுலக வாழ்க்கையில் என்றென்றும் நினைவில் நிற்கும் படமாக இந்த ‘பறந்து போ’ இருக்கும் என்பதில் மிகை இல்லை. அவருக்கே கூட இதில் நடித்தது புது அனுபவமாக இருந்திருக்கும். தனது வழக்கமான காமெடி கவுண்ட்டர்களுடன், முதிர்ச்சியான நடிப்பையும் சேர்த்து வழங்கி, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார். மகனை அடக்க இயலாமல், அவன் இழுத்த இழுவைக்கெல்லாம் போகிற ஏராளமான தந்தைமார்களை அவர் தத்ரூபமாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.
சிறுவன் அன்புவின் அம்மா குளோரியாக கிரேஸ் ஆண்டனி நடித்திருக்கிறார். கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். ஆரம்பத்தில் குடும்பம், வேலை ஆகியவற்றில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கும் அம்மாஞ்சிப் பெண் போல் தோன்றிய இவர், பின்னர் காமெடியிலும் கலக்க ஆரம்பித்துவிட்டது படத்துக்குப் பெரிய பிளஸ்.
கோகுலின் சிறுவயது கிரஷ் வனிதாவாக அஞ்சலியும், அவரது கணவர் குமரனாக அஜு வர்கீஸும் நடித்திருக்கிறார்கள். இருவரும் குறைந்த நேரமே வந்தாலும், காட்சி அமைப்பு காரணமாக கலகலப்பூட்டி, சிரிப்புக் காட்டி, நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, தேஜாஸ்வினி உட்பட படத்தில் நடித்த ஏனையோர் அனைவருமே தத்தமது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து அதற்குத் தேவையான நடிப்பை சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் ராம். தனது வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக் கதையையும் – நிமிடத்துக்கு நிமிடம் பார்வையாளர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கும் வண்ணம் – நகைச்சுவை இழையோட இப்படத்தைக் கொடுத்திருக்கும் ராம், தனது முயற்சியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். அப்பா, அம்மா, மகன் ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றிச் சுழலும் கதையில், குழந்தைகளோடு சேர்ந்து செலவழிக்க பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும், குழந்தைகளின் ‘குழந்தைத்தனமான’ விருப்பங்களை பெற்றோர் புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்ற உதவ வேண்டும், இயற்கையோடு இயைந்து வாழ முயல வேண்டும் என்பன போன்ற ஏராளமான நற்கருத்துகளை – போதனையாக இல்லாமல் – போகிற போக்கில் இயக்குநர் சொல்லிச் செல்வதை பாராட்ட வேண்டும். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் எளிமையான – ஆனால் கூர்மையான – வசனங்கள் படம் முழுவதும் நிரவியிருப்பது அற்புதம். உதாரணமாக, “கிராமத்துக்குப் போனா சாதி கேப்பாங்க. வடநாட்டுக்குப் போனா சாதியோடு மதத்தையும் சேத்து கேப்பாங்க” என்ற இரண்டு வரி வசனம், இன்றைய இந்தியாவின் அவல நிலையை பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டுகிறது. இயக்குநர் ராம், வரும் காலங்களில் ‘பறந்து போ’ போன்ற வெகுமக்களை ஈர்க்கும் அருமையான படங்களை ஆண்டுக்கு ஒன்றாவது கொடுக்க வேண்டும் என்பதும், அவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் மாநில – ஒன்றிய அரசுகள் ‘பறந்து போ’ படத்துக்கு விருதுகளை வாரி வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பதும் நமது தாழ்மையான வேண்டுகோள்.
சந்தோஷ் தயாநிதியின் இசையில், மதன் கார்க்கியின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் அருமை. பாடல்கள் ஆக்கிரமிக்காத காட்சிகளுக்கு யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பலம் சேர்க்கிறது.
என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவும், மதி வி.எஸ் படத்தொகுப்பும் படத்தின் நேர்த்திக்கும், இயக்குநரின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.
‘பறந்து போ’ – ’முன்னாள் குழந்தை’களான பெற்றோர்கள், தங்களது இந்நாள் குழந்தைகளுடன் குடும்பமாய் சென்று, குதூகலமாய் பார்த்து ரசிக்கலாம்; படிப்பினை கற்கலாம்; பிரசித்தி பெற்ற ‘குட்டி இளவரசன்’ கதையைப் படித்தது போன்றதொரு இனிய அனுபவம் பெறலாம்!
ரேட்டிங்: 4/5.