“மேற்கு தொடர்ச்சி மலை’ என்னும் மக்கள் சினிமாவை கொண்டாடுவோம்!” – இயக்குனர் பா.ரஞ்சித்

நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில், லெனின் பாரதி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மேற்கு தொடர்ச்சி மலை’. ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலை ரத்தமும் சதையுமாய் பதிவு செய்திருக்கும் இப்படம், பல பன்னாட்டு படவிழாக்களில் பங்கேற்று பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. இன்று (24-08-2018) திரைக்கு வரும் இப்படத்தை பாராட்டி இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட் செய்துள்ளார்.“போலித்தனம் அல்லாத, எளிமை மிக்க வாழ்க்கையை நிலத்தோடும், காற்றோடும், மொழியோடும் – அதிகாரத்தால் சுரண்டப்படுகிற மனித முகங்களின் சுருக்கத்தில் வழிந்தோடும் எளிமையின் பேரனுபவத்தை  ‘மேற்கு   தொடர்ச்சி மலை’ என்னும் மக்களின் சினிமாவில் கொடுத்த இயக்குனர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், தயாரிப்பாளர் விஜய் சேதுபதி மற்றும் இத்திரைப்படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் பெரும் பாராட்டுகளும் பெரும் மகிழ்ச்சியும்.

எப்போதும் நல்ல தரமான சினிமாவை ஊக்குவிக்கும் அன்பிற்கினிய தமிழ்த் திரைப்பட ரசிகர்களே, வாருங்கள்… ‘மேற்கு   தொடர்ச்சி மலை’ என்னும் மக்களின் சினிமாவை கொண்டாடுவோம். மகிழ்ச்சி.

எளிதில் நெருங்கிட முடியவே முடியாத “எளிமை”யை அனாயசமாக கலை என்னும் பேரனுபவத்தை திரைவழியே கடத்திய இயக்குனர் லெனின் பாரதி மற்றும் இசைவழியே உணர்வுகளை சிலுப்பிய “முன்னத்தி ஏர்” இளையராஜா ஆகியோருக்கு நன்றியும், மகிழ்ச்சியும்.

ஆம்! ”எளிமை”யை காட்சிப்படுத்துதல் என்பது ஆகப்பெரும் போர்” என்று பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.