விமர்சன விவகாரம்: விஷால் கோரிக்கைக்கு ஆதரவாக ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதை!

புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நெருப்புடா’. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாவுள்ளார்.

‘நெருப்புடா’ இசை வெளியீட்டு விழா அன்னை இல்லத்தில் நடைபெற்றது. இதில் ரஜினி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், கார்த்தி, லாரன்ஸ், விவேக் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ரஜினி பேசும்போது, “இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும், முதல் படம் தயாரித்திருக்கும் விக்ரம் பிரபு வெற்றியடைய வேண்டும். இந்நேரம் சிவாஜி சார் இருந்திருந்தால் என்னுடைய தாடியைப் பார்த்து, “என்னடா எனக்கு போட்டியா?” என்று கேட்டிருப்பார். அவருக்கு போட்டி யாருமே இல்லை. இனிமேல் பிறக்கப் போவதுமில்லை.

பிரபு 100% அதிர்ஷ்டசாலி என்று சொல்கிறார்கள். அவருக்கு பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. கண்டிப்பாக இந்த பாரம்பரியம் தொடரும். ‘கும்கி’ படத்துக்காக விக்ரம் பிரபு பட்ட கஷ்டத்தை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாத்தா பெயரையும், அப்பா பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அல்லவா. அதுவே கண்டிப்பாக உங்களை நல்ல இடத்துக்குக் கொண்டு போகும்.

விஷால் இங்கு ஒரு கோரிக்கை வைத்தார். அது ஒரு நல்ல கோரிக்கை. அதை நான் ஆமோதிக்கிறேன். பத்திரிகையாளர்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நினைக்கிறேன். சாப்பிட அழைத்துவிட்டு பரிமாறும்போது ‘சாப்பிடுங்கள்’ என்று சொல்வதற்கும் ‘சாப்பிடு சாப்பிடு.. நல்லா சாப்பிடு’ என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விமர்சனம் பண்ணுங்கள், ஆனால் அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு ராஜா இருந்தார். அவருக்கு பிள்ளையே பிறக்கவில்லை. அவர் போகாத கோயில் கிடையாது, வணங்காத கடவுள் இல்லை. அவருக்கு 20, 30 வருடங்கள் கழித்து ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதனால் ரொம்ப சந்தோஷப்பட்ட ராஜா, எல்லோரையும் அழைத்து குழந்தையின் எதிர்காலம் குறித்து ஜோசியம் பார்க்கச் சொன்னார்.

‘நிச்சயம் உங்கள் மகனால்தான் உங்களுக்கு மரணம் நிகழப் போகிறது’ என்று ஜோசியம் பார்த்த பலரும் சொன்னார்கள். ‘இவன் உங்களை கொல்வான்’ என்று எல்லோரும் ஒரே மாதிரி சொன்னார்கள்.

இதனால் கோபப்பட்ட ராஜா, ஜோசியம் சொன்ன அத்தனை பேரையும் சிறையில் தள்ளி, ’10 நாட்களில் இவர்களின் தலையை எடுத்து விடுங்கள்’ என்று கட்டளையிட்டார்.

இவர்களைத் தவிர்த்து, இன்னொரு ஜோசியக்காரர் வந்தார். பெரிய ஜோசியக்காரர் என்பதால் ஏற்கெனவே நடந்ததைத் தெரிந்துகொண்டு தான் வந்தார். குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்தார். ‘நீயெல்லாம் பெரிய ராஜாவே கிடையாது. உன் குழந்தைதான் உன்னைவிட 10 மடங்கு பெரிய ராஜாவா இருப்பான். பேர், புகழ்ல உன்னை விட 100 மடங்கு இருப்பான். இந்த மாதிரி ஒரு ஜாதகத்தைப் பார்த்ததே கிடையாது.’ என்றார்.

ராஜா மிகவும் மகிழ்ச்சியில், என்ன வேண்டுமானாலும் கேள் என்றார். சிறையில் இருக்கும் ஜோசியக்காரர்களை விடுவிக்க வேண்டும் என்றார் அந்த ஜோசியக்காரர்.

எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு உங்கள் மகன் தான் மரணத்துக்குக் காரணமாக அமைவான் என்று சொல்லக் கூடாது. ஆன்லைன் விமர்சகர்களும் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்ல வேண்டும்.

தயாரிப்பாளரும் அனைவருமே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை விற்க வேண்டும். நாம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தயாரிப்பாளர்கள் அவர்களுடைய பொருளை விற்பதற்கு பல்வேறு வகையில் ஷோ காட்டுவார்களை. அதை நம்பி வாங்கிவிட்டு நஷ்டம் அடைந்துவிட்டேன் என்று கூறுவதும் தப்பு. விநியோகஸ்தர்கள் இந்தப் படம் இவ்வளவு வசூல் செய்யுமா என்று முன்னணி விநியோகஸ்தர்களிடம் ஆலோசனை கேட்டு வாங்க வேண்டும். திரையுலகினர் அனைவருமே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல வேண்டும்” என்றார் ரஜினி.