டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாடல் வெளியிடும் குரு கல்யாண்!

தற்போது டெல்லியில் நடந்துவரும் தமிழக விவசாயிகளின் தொடர் அறப்போராட்டத்தை ஆதரித்தும், இயற்கை நம்மை கைவிடாது என்ற நம்பிக்கையை வலியுறுத்தியும் “விவசாயிகள்… விவசாயிகள்” எனும் பாடலை இசையமைத்து வெளியிடுகிறார் இசையமைப்பாளர் குரு கல்யாண். அவரை சந்தித்தபோது…

“மாத்தியோசி’, ‘குகன்’, ‘கோட்டி’ போன்ற படங்களில் இசை அமைப்பாளராக பணி புரிந்துள்ளேன். கடந்த சில மாதங்களாக இறைவன் அருளால் யூடியூபில் எனது  இணையதளமான  ‘குருகல்யாண்ம்யூசிக்’ மூலம் தனிப்பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.

‘குழந்தைகள் தின’ பாடல், ‘வீரத்தமிழன்’ எனும் ஜல்லிக்கட்டு பாடல், ‘பாடலாசிரியர் அண்ணாமலை’ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் பாடல், விவசாயம் தொடர்பான ‘வதுவை நன்மணம்’ எனும் தனிக்கவிதை பாடல் போன்றவை வெளியிட்டு வந்தேன். இதற்கு, இணையத்தளம் வாயிலாக சிறந்த வரவேற்பை பெற்றேன்.

அப்படியாக வெளிவந்த பாடலில் ஒன்றான “வதுவை நன்மணம்” எனும் பாடலை, நடிகர் விஜயின் ஆஸ்தான பாடலாசிரியரான பழநிபாரதி எழுதியிருந்ததால் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் இப்பாடல் கூடுதல் வரவேற்பை பெற்றது.

நடிகர் விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் இருக்கும் தனிச்சிறப்பை கண்டு வியந்து, அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும், நெகிழ்ச்சியான தொடர்பை சொல்லும் வகையிலும் ‘இளையதளபதி ரசிகன் டா’ எனும் பாடலை உருவாக்க எண்ணினேன். மெட்டமைத்தவுடன் கவிஞர் பழநிபாரதி அவர்களையே இதற்கு பாடல் எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்தார். ‘கில்லி  நாங்கடா சொல்லி அடிப்போம்’ எனும் இந்த பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் ‘பெர்பெக்ட் விஜய் ஆன்தம்’ என்று ரசிக்கப்பட்டு வருகிறது.

தற்போது டெல்லியில் நடந்துவரும் தமிழக விவசாயிகளின் தொடர் அறப்போராட்டத்தை ஆதரித்தும், இயற்கை நம்மை கைவிடாது என்ற நம்பிக்கையை வலியுறுத்தியும் “விவசாயிகள்… விவசாயிகள்” எனும் பாடலை இசையமைத்து வெளியிடுகிறேன் இப்பாடலுக்கு “உமா ஷங்கர்’ எனும் புதுமுக இயக்குனர் காணொளி அமைத்துள்ளார். கவிஞர் பழநிபாரதி பாடல் எழுதியுள்ளார்.

உமா ஷங்கருடன் ‘ஈஷா’ எனும் குறும்படத்தில் பணியாற்றினேன். திருக்குறள் 146ன் பொருட்கருவை கொண்ட இந்த குறும்படம் ‘தாதா சாஹேப் பால்கே’ எனும் குறும்பட விருது விழாவிற்கு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உமா ஷங்கருடன் இணைந்து “ஸ்ரீ சாயி பிலிம்ஸ்’ தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் விரைவில் பணியாற்ற உள்ளேன். இந்த இசைக்கு அமெரிக்காவில் வசித்து வரும் எனது அண்ணன்  ‘கல்யாண்’, மேற்கத்திய இசைக்கோர்ப்புக்கும், இசை தொழில்நுட்ப நுணுக்கங்களுக்கும் முக்கிய பங்காற்றி வருகிறார்” என்றார் குரு கல்யாண்.