மாஸ்க் – விமர்சனம்

நடிப்பு: கவின், ஆண்ட்ரியா ஜெரெமையா, ருஹானி ஷர்மா, சார்லி, பவன் கிருஷ்ணா, கல்லூரி வினோத், ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா சந்தோக், சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், அருள்தாஸ், வெங்கட், மகாலட்சுமி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: வி.கர்ணன் அசோக்

ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்

படத்தொகுப்பு: ஆர்.ராமர்

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

ஸ்டண்ட்: பீட்டர் ஹெய்ன், விக்கி

நடனம்: அசார், விஜி

கலை: ஜாக்கி, அய்யப்பன்

தயாரிப்பு: ’தி ஷோ மஸ்ட் கோ ஆன்’ & பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ்’ – எஸ்.பி/சொக்கலிங்கம் & ஆண்ட்ரியா ஜெரெமையா

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹமத் & பாரஸ் ரியாஸ்

‘ஸ்பை & டிடெக்டிவ்’ என்ற பெயரில் பிரைவேட் துப்பறிவாளனாக இயங்குபவர் நாயகன் வேலு (கவின்). தனது சேவையை நாடி வரும் பெரும் புள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலு, அதே பெரும் புள்ளிகளை பிளாக் மெயில் செய்து பணம் கறந்துவிடுவார். காரணம், பணம் மட்டும் தான் இந்த உலகத்தின் தேவை என்ற புரிதலுடன் வாழ்ந்து வருபவர் அவர்.

ஏற்கெனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழும் வேலுவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அது வேலுவுடனே, வேலுவின் தந்தையின் (ஜி.கே.ரெட்டி) பராமரிப்பில் இருக்கிறது. இந்நிலையில், ரதியை (ருஹானி ஷர்மா) பார்த்து பாலியல் ஈர்ப்புக்கொள்ளும் வேலு, அவருடன் பேசிப் பழகுகிறார். ரதிக்கும் ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது; என்ற போதிலும், விருப்பமில்லாமல் அந்த திருமண பந்தத்தில் இருப்பதாக அவர் கூற, இருவரும் நெருங்கிப் பழகுகிறார்கள்.

பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியில் நடக்கும் தவறுகளை எதிர்த்துப் போராடி, அவர்களை மீட்டு, நல்வாழ்வு அமைத்து தரும் தன்னார்வலராகத் திகழ்பவர் பூமி (ஆண்ட்ரியா ஜெரெமையா). அவர்களை நன்றாக படிக்கவும் வைக்கிறார். வெளியே இவருக்கு இப்படி ஒரு முகம் இருந்தாலும், இவருக்கு வேறொரு முகமும் உள்ளது. தன்னிடம் உள்ள பெண்களை வைத்து அரசியல்வாதிகளின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்கிறார் பூமி. அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொள்கிறார்.

தன் கட்சியை தேர்தல் களத்தில் இறக்கும் அரசியல்வாதியான மணிவண்ணன் (பவன் கிருஷ்ணா), பூமியிடம் ரூ. 440 கோடியை கொடுத்து, வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் அனுப்ப வேண்டும் என கூறுகிறார். பணத்தை தனது சூப்பர் மார்க்கெட்டில் பூமி பதுக்கி வைக்க, அந்த சூப்பர் மார்க்கெட்டை எம்.ஆர்.ராதாவின் முகம் கொண்ட மாஸ்க் போட்டுக்கொண்டு ஒரு கும்பல் கொள்ளை அடிக்கிறது. இது தெரியாமல், கொள்ளை அடிக்கும் இடத்திற்கு வேலு வந்துவிடுகிறார். பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பலில் இருந்த அனைவரும் வெளியேற, அங்கிருந்து ரதியின் வீட்டிற்கு வேலு வருகிறார்.

அதே நேரத்தில் ரதியின் கணவரும் வீட்டிற்கு வர, தனது கணவருக்கு தெரியாமல் வேலுவை வீட்டைவிட்டு அனுப்ப ரதி முயற்சி செய்யும் போது, ரதியின் கணவரின் பேக்கில் எம்.ஆர்.ராதா மாஸ்க் இருப்பதை கவின் பார்த்து, சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையடித்தது இவன் தானா என அதிர்ச்சியில் உறைந்து போகிறார். இதன்பின் என்ன நடந்தது? ரூ. 440 கோடியை கொள்ளையடிக்க என்ன காரணம்? இதிலிருந்து கவின் தப்பித்தாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘மாஸ்க்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

வழக்கமான காதல் கொண்டாட்டம் என்றில்லாமல் அறிமுகமாகும்போதே திருமணமானவராகவும் அதன்பின் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுபவராகவும் வருகிறார் கவின். எதிர்மறை நாயகன் போன்ற தோற்றம் நடை உடை வசனங்கள் என்று போய்க் கொண்டிருக்கிறது. எல்லவாற்றையும் மிக இலகுவாகக் கையாண்டு நற்பெயர் பெறுகிறார்.

அப்பாவித்தனமான முகம் அடப்பாவித்தனமான செயல் ஆகியனவற்றால் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார் ருஹானி சர்மா.

எதிர்மறை நாயகியாக வரும் ஆண்ட்ரியா மிக கனமான கதாபாத்திரத்தை அலட்சியமாக எதிர்கொண்டு ரசிக்க வைத்திருக்கிறார். சில இடங்களில் அவருடைய பேரிளமை தெரிவது பலவீனம்.

அரசியல்வாதியாக நடித்திருக்கும் பவன், அதற்குத் தக்க நடித்து பாராட்டுப் பெறுகிறார்.

சார்லி, வெங்கட் செங்குட்டுவன், கல்லூரி வினோத், ரமேஷ் திலக், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா, ஜார்ஜ் மரியன், ரெடின் கிங்ஸ்லி உட்பட படத்தில் நிறைய நடிகர்கள். ஒவ்வொருவரும் தங்களைக் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

ஜாக்கி, எம்.விஜய் அய்யப்பன் ஆகியோரின் கலை இயக்கம் படத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

வெறுமனே காட்சிகளாகக் கடந்து போகாமல் எல்லாவற்றையும் ரசித்துப் பார்க்கும்படி ஒளியமைப்புகள் மற்றும் கோணங்களை வைத்து படத்துக்குப் பெரும்பலமாக இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.

படத்தொகுப்பாளர் ஆர்.ராமருக்குக் கூடுதல் பணிச்சுமை கொடுத்திருக்கிறது படம்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில்,கண்ணுமுழி,வெற்றி வீரனே உள்ளிட்ட பாடல்கள் திரைக்கதைக்கு உதவியிருக்கின்றன. பின்னணி இசையால் படத்துக்கு உரமேறியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் விகர்ணன் அசோக். இயக்குநர் நெல்சனின் குரலில் படத்தை நகர்த்திச் செல்வது உள்ளிட்ட உத்திகளால் பலவீனங்களை மறைக்க முயன்றிருக்கிறார். இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் பழைய இலக்கணத்தைத் தாண்டி கொஞ்சம் மாற்றிச் சிந்தித்திருக்கிறார். நடுத்தர மக்களுக்குக் கோபம் வந்தால் நாடு தாங்காது என்கிற கருத்தைச் சொல்ல விழைந்திருக்கிறார்.

’மாஸ்க்’ – ஒரு கதை, அதைச் சரியாக எடுத்துச் செல்ல கவின், ஆண்ட்ரியா போன்ற நடிகர்கள், வலிமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் என எல்லாம் இருப்பதால், பார்த்து ரசிக்கலாம்

ரேட்டிங்: 3/5