மருதம் – விமர்சனம்

நடிப்பு: விதார்த், ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ், சரவண சுப்பையா, மாஸ்டர் கார்த்திக் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: வி.கஜேந்திரன்
ஒளிப்பதிவு: அருள் கே சோமசுந்தரம்
படத்தொகுப்பு: பி.சந்துரு
கலை: தாமு எம்எஃப்ஏ
இசை: என்.ஆர்.ரகுநாதன்
தயாரிப்பு: ’அருவர் பிரைவேட் லிமிடெட்’ சி.வெங்கடேசன்
பத்திரிகை தொடர்பு: ஏ.ராஜா
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைத் தமிழர்கள், தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளை, அவற்றின் இயற்கை அமைப்பு அடிப்படையில் குறிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்), நெய்தல் (கடல்), பாலை (மணல்வெளி) என ஐந்து வகையாக – ஐந்திணைகளாக – பகுத்திருந்தனர். இவற்றில் ‘மருதம்’ என்பது நெல் விளைவிக்கும் உழவுத்தொழிலுக்கு ஏற்ற மண்வளம் மற்றும் நீர்வளம் மிகுந்த வயல் மற்றும் வயல் சார்ந்த இடத்தைக் குறிப்பதாகும். வேளாண் தொழில் செய்யும் நாயகன், சதிவலைக்குள் சிக்கிக்கொண்ட தனது விளைநிலத்தைக் காப்பாற்ற நடத்தும் தீவிரப் போராட்டத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் என்பதால், இப்படத்துக்கு ‘மருதம்’ என்று பொருத்தமாக பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
வடசென்னை, மதுரை போலல்லாது, திரைப்படங்களில் அதிகம் காட்டப்படாத ராணிப்பேட்டை மாவட்டத்தில் இப்படக்கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டிருப்பது இத்திரைப்படத்தின் தனித்தன்மை என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஆரம்பத்தில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் காரில் வந்து இறங்குகிறார் ஆட்சியர். அவரிடம் ஒரு சாமானியர் தன் மனக்குறையைச் சொல்ல முயலுகையில், ஆட்சியர் அதை காதில் வாங்காமல் சென்றுவிடுகிறார். இதனால் மனமொடிந்துபோகும் அந்த சாமானியர் தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளுகிறார்.
இதனையடுத்து, அதே மாவட்டத்தைச் சேர்ந்த கல்புதூர் என்ற வேளாண் கிராமத்துக்கு கதை நகருகிறது. இங்கு கன்னியப்பன் (விதார்த்) என்ற சிறு விவசாயி, இறந்துபோன தன் தந்தையின் வழியில் தனக்குக் கிடைத்த பூர்விக நிலத்தில் இயற்கை விவசாயம் செய்துகொண்டு, மனைவி சிந்தாமல்லி (ரக்ஷனா) மற்றும் மகனுடன் (மாஸ்டர் கார்த்திக்) வாழ்ந்து வருகிறார்.

ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் சாதாரண அரசுப் பள்ளியில் அல்லாமல், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் உயர்தர தனியார் பள்ளியில் தன் மகனை படிக்க வைக்க ஆசைப்படுகிறார் கன்னியப்பன். ஆனால், அப்பள்ளியில் சீட் கொடுப்பதற்கே ரூ.3 லட்சம் டொனேஷன் கேட்கிறார்கள்.
அவ்வளவு பெரிய தொகை கையில் இல்லாததால், தனக்குத் தெரிந்த காய்கறி மொத்த வியாபாரியான கதிர்வேலிடம் (அருள்தாஸ்) தனது தந்தையின் பெயரிலிருக்கும் தனது நிலப்பத்திரத்தைக் கொடுத்து – நிலத்தை அடகு வைத்து – ரூ.3 லட்சம் கடன் பெற்று, டொனேஷன் கொடுத்து, மகனுக்கு அப்பள்ளியில் சீட் வாங்கி விடுகிறார் கன்னியப்பன். இது இல்லாமல் அட்மிஷன் ஃபீஸ் என்ற பெயரில் ஒரு பெரிய தொகை கேட்கிறது பள்ளி நிர்வாகம். இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கன்னியப்பன் தவிக்கிறார்.
இந்த நிலையில், கன்னியப்பனின் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நோக்கத்துடன் வேலி போட ஆட்களுடன் வந்து இறங்குகிறார் ஒருவர். இதனால் அதிர்ச்சி அடையும் கன்னியப்பன், அவரைப் பிடித்து அடித்து விசாரிக்க, வாங்கிய கடனைக் கட்டாததால் தனியார் வங்கி இந்த நிலத்தை ஏலம் விட்டதாகவும், அந்த ஏலத்தில் இதை எடுத்ததாகவும் அவர் சொல்ல, கன்னியப்பன் மேலும் அதிர்ச்சி அடைகிறார். ’நான் வாங்காத கடனுக்கு என் நிலத்தை எப்படி ஏலம் விடலாம்’ என்று கேட்பதற்காக அவர் வங்கிக்கு விரைகிறார். ஆனால் அங்குள்ள வங்கி மேனேஜரோ, ஆறு ஆண்டுகளுக்கு முன் கன்னியப்பனின் தந்தை நெல் அறுக்கும் இயந்திரம் வாங்குவதற்காக வங்கியில் இந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியதாகவும், அதன்பின் ஆறு மாதங்கள் மட்டும் கடன் தவணை செலுத்தியதாகவும், அதற்குப்பிறகு எதுவும் செலுத்தாததாலும், நினைவூட்டும் கடிதங்கள் பல அனுப்பியும் பலன் இல்லாததாலும், கடன் தொகையை மீட்க நிலத்தை ஏலத்தில் விட்டதாகவும் கூறுகிறார்.
தனது தந்தை வங்கிக் கடனோ, நெல் அறுக்கும் இயந்திரமோ வாங்கியதே இல்லை என்பதை உறுதியாக அறிந்திருக்கும் கன்னியப்பன், இந்த விவகாரத்தில் மிகப் பெரிய மோசடி நடந்திருக்கிறது என்பதை உணருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்து இறந்த ஏழை விவசாயியும் இதே மோசடியால் பாதிக்கப்பட்டவர் தான் என்பதை அறிகிறார்.
பார்கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் தொழில் செய்ய இயலாமல் இருக்கும் வழக்கறிஞர் கந்தனை (தினந்தோறும் நாகராஜ்), மொத்த காய்கறி வியாபாரியான கதிர்வேல் பரிந்துரையின் பேரில் சந்தித்து தன் பிரச்சனையை எடுத்துக் கூறுகிறார் கன்னியப்பன். அவருக்கு உதவ முன்வரும் வழக்கறிஞர் கந்தன், சில ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்து, கன்னியப்பனைப் போலவே வங்கி மோசடியால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகள் சிலரது துணையுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, வக்கீல் வைக்காமல் கன்னியப்பனையே வாதாடச் சொல்லுகிறார்.
கன்னியப்பன் வழக்குத் தொடுத்தாரா? நீதிபதி முன் எளிய விவசாயியான கன்னியப்பனே வாதாடினாரா? வங்கி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி மேனேஜர் யார்? அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டாரா? கன்னியப்பன் தன் நிலத்தை மீட்டாரா? மகனை இறுதியில் எந்த பள்ளியில் சேர்த்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு, விறுவிறுப்புடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘மருதம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
‘இவர் நடித்துள்ள படம் என்றால், அந்த படம் வித்தியாசமானதாகவும், கருத்துச் செறிவு உள்ளதாகவும் இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்’ எனும் அளவுக்கு பெயர் பெற்றிருக்கும் விதார்த், இந்த ‘மருதம்’ திரைப்படத்தின் கதை நாயகன் கன்னியப்பனாக நடித்திருக்கிறார். இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் கிராமத்து சிறு விவசாயி கதாபாத்திரத்தில், யதார்த்தமான நடிப்பு, வசன உச்சரிப்பு, நடை, உடை, பாவனை மூலம் அச்சு அசலாய் அந்த கதாபாத்திரமாகவே திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். மனைவி, மகனை நேசிக்கும் குடும்பத் தலைவராகவும், நிலம் அநியாயமாக பறிபோகப் போகிறதே என்று பதைபதைக்கும் வேளாண்குடி மகனாகவும், நியாயத்துக்காக நீதிமன்றத்தில் வாதாடும் – சட்டம் படிக்காத – வழக்கறிஞராகவும் திறமையாக நடித்து, தனது கதாபாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் நியாயம் செய்திருக்கிறார். பாராட்டுகள் விதார்த்.
நாயகனின் மனைவி சிந்தாமல்லியாக ரக்ஷனா நடித்திருக்கிறார். கணவரின் கஷ்டத்திலும், இஷ்டத்திலும் உறுதுணையாக இருக்கும் அன்பான குடும்பத் தலைவி கதாபாத்திரத்தில் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, குறை சொல்ல முடியாத அளவுக்கு நிறைவாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் மகனாக மாஸ்டர் கார்த்திக் நடிக்கிறார். வெகுளியாய் சிரித்த முகத்துடன் வரும் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
நாயகனின் நண்பன் பழனியாக மாறன் நடித்திருக்கிறார். தான் வரும் காட்சிகளில் எல்லாம் காமெடி வசனத்தால் கலகலப்பூட்டியவர், இறுதியில் நீதிமன்றத்துக்கு வராததும், அதற்கான காரணமும் மனதை கனக்கச் செய்கிறது.
மொத்த காய்கறி வியாபாரி கதிர்வேலாக அருள்தாஸ் நடித்திருக்கிறார். நாயகனுக்கு கடன் கொடுத்து உதவுகிறவராகவும், நாயகனின் சிக்கலான பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய நல்ல வழக்கறிஞரை அடையாளம் காட்டுபவராகவும் வந்து நல்ல மனிதராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
பார்கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர் கந்தனாக தினந்தோறும் நாகராஜ் நடித்திருக்கிறார். படத்தில் குறைந்த நேரமே வந்தாலும், கதையின் முக்கியமான கட்டத்தில் வந்து, கதையை உந்தித்தள்ளும் கதாபாத்திரத்தை செம்மையாகச் செய்திருக்கிறார்.
முன்னாள் வங்கி மேனேஜர் ராஜசேகராக சரவண சுப்பையா நடித்திருக்கிறார். வில்லன் என்பதற்காக காட்டுமிராண்டி போல் கத்தாமல், ஓர் ஒயிட்காலர் கிரிமினலாக அமைதியாக வங்கி மோசடியில் ஈடுபட்டு, வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் வி கஜேந்திரன். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இதுவரை திரைக்கு வராத நூதனமான வங்கி மோசடியை கதையாகக் கட்டமைத்து, போரடிக்காமலும், அதே நேரத்தில் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் வி கஜேந்திரன். சமீபநாட்களாக நிஜ வாழ்க்கையில் வங்கி மோசடிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற திரைப்படங்களை படைத்தளிப்பது அவசியம்; அவசரமும் கூட. பாராட்டுகள் வி கஜேந்திரன்.
என்.ஆர்.ரகுநாதனின் இசை, அருள் கே சோமசுந்தரத்தின் ஒளிப்பதிவு, பி.சந்துருவின் படத்தொகுப்பு, தாமுவின் கலை இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் சிறப்பான கதை சொல்லலுக்கும், படத்தின் தரம் மற்றும் நேர்த்திக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.
‘மருதம்’ – அனைத்து தரப்பினரும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம்!
ரேட்டிங்: 4/5.