மார்கழி திங்கள் – விமர்சனம்
நடிப்பு: பாரதிராஜா, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண், சுசீந்திரன், அப்புக்குட்டி, ஜார்ஜ் விஜய், சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர்
இயக்கம்: மனோஜ் பாரதிராஜா
ஒளிப்பதிவு: வாஞ்சிநாதன் முருகேசன்
படத்தொகுப்பு: தியாகு
இசை: இளையராஜா
தயாரிப்பு: ‘வெண்ணிலா புரொடக்ஷன்ஸ்’ சுசீந்திரன்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
பல திரைப்படங்களில் காதலை, காதலர்களை வாழ வைத்தவர் இயக்குனர் பாரதிராஜா. அவர் நடிப்பில், அவரது மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கியிருக்கும் காதல் கதை என்பதாலும், பிரபல இயக்குனர் சுசீந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்திருப்பதோடு, நடிக்கவும் செய்திருக்கிறார் என்பதாலும், அததற்கு உரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படம் ‘மார்கழி திங்கள்’. அந்த எதிர்பார்ப்புகளை இது பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்…
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் இருக்கும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி கவிதா (ரக்ஷனா). ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளித் தேர்வுகளில் முதல் ரேங்க் வாங்கிய அவர், பத்தாம் வகுப்பில் இரண்டாவது ரேங்க்குக்குத் தள்ளப்படுகிறார். காரணம், புதிதாக பத்தாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர் வினோத் (ஷியாம் செல்வன்), முதல் ரேங்க்கைத் தட்டிச்சென்று விடுவது தான். இதனால் வருந்தும் கவிதாவுக்கு வினோத்தைக் கண்டாலே பிடிப்பதில்லை. அவரோடு போட்டி போட்டு படித்தபோதிலும், அவரை கவிதாவால் முந்த முடியவில்லை.
இந்நிலையில், பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர் அல்லது மாணவிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவிக்கிறது பள்ளி நிர்வாகம். பரிசு வினோத்துக்குத் தான் கிடைக்கும் என்று பார்த்தால், கவிதா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பரிசை தட்டிச் செல்கிறார். இது எப்படி நிகழ்ந்தது எனில், கவிதாவை ஒருதலையாய் காதலிக்கும் வினோத், கணக்குப் பாட தேர்வில் ஒரு கேள்விக்கு வேண்டுமென்றே தவறான விடை எழுதி விட்டுக்கொடுத்ததால் தான் கவிதா வெற்றிபெற முடிந்தது. இதை தெரிந்து கொண்டவுடன் கவிதாவுக்கும் வினோத் மீது காதல் ஏற்படுகிறது. இந்த காதல் ஜோடி ஊருக்கு வெளியே உள்ள வயல்வெளிகளில் ஓடிப்பிடித்து விளையாடி ஒருபுறம் காதலை வளர்க்கும் அதேவேளை, பிளஸ்-2 படிப்பையும் முடிக்கிறது.
மேற்படிப்புக்காக கவிதா கோவை கல்லூரியிலும், வினோத் சென்னை கல்லூரியிலும் சேர வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. காலம் தங்களை நிரந்தரமாக பிரித்துவிடுமோ என்று அஞ்சுகிறார் கவிதா. கல்லூரியில் சேருவதற்குமுன் தங்களுக்கு நிச்சயதார்த்தம் மட்டும் முடிந்துவிட்டால், அதன்பின் பயமின்றி படிப்பைத் தொடரலாம் என்று எண்ணுகிறார்.
குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர்களை இழந்த கவிதாவுக்கு ராமய்யா தாத்தா (பாரதிராஜா) தான் உலகம். அவரிடம் எந்த ஒளிவு மறைவுமின்றி எல்லாவற்றையும் மனம் திறந்து பேசும் சுதந்திரம் கவிதாவுக்கு உண்டு. அதனால் தனது காதலைப் பற்றியும், நிச்சயதார்த்த திட்டம் பற்றியும் தாத்தாவிடம் கூறுகிறார். பேத்தியை தனது குலசாமியாகவும், அவரது நல்வாழ்வு ஒன்றை மட்டுமே தனது குறிக்கோளாகவும் பாவிக்கும் ராமையா தாத்தா, கவிதாவை அழைத்துக்கொண்டு வினோத் வீட்டுக்குப் போகிறார். அங்கு வினோத்தின் பெற்றோர்களிடம், வினோத் – கவிதா காதலைச் சொல்லி, தனது சம்மதத்தையும் தெரிவிக்கிறார். காதலர்கள் மட்டுமல்ல, வினோத்தின் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். “மேற்படிப்பு முடித்ததும் கல்யாணம். இப்போது படிப்பு தான் முக்கியம். ஆகவே படிப்பை முடிக்கிற வரை நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல், பேசாமல் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்” என்று நிபந்தனை விதிக்கிறார் ராமையா தாத்தா. அதை காதலர்கள் இருவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
கோவை கல்லூரிக்குச் செல்லும் கவிதா, படிப்பும் வினோத் பற்றிய நினைப்புமாக இருக்கிறார். தனக்கு வரும் காதல் புரபோசல்களை எல்லாம் நிராகரிக்கிறார். படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் அவர், வினோத்தை சந்திக்க ஆவலுடன் போகிறார். அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன அதிர்ச்சி? அதை தொடர்ந்து வந்து திடுக்கிடச் செய்யும் விஷயங்கள் என்ன? அவற்றை எல்லாம் கவிதா எப்படி எதிர்கொள்கிறார்? முடிவு என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு பரபரப்பான திருப்பங்களுடன் விடை அளிக்கிறது “மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் மீதிக்கதை
மாணவர் வினோத்தாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஷ்யாம் செல்வன், பார்ப்பதற்கு ‘பாய் நெக்ஸ்ட் டோர்’ போல மிகவும் எளிமையாக இருக்கிறார். இயல்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். என்றாலும், இன்னும் கொஞ்சம் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டால், தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வரலாம்.
மாணவி கவிதாவாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரக்ஷனா, மொத்தப் படச் சுமையும் தனது கதாபாத்திரத்தின் மீது சுமத்தப்பட்டிருப்பதை நன்கு உணர்ந்து, பொறுப்பாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். நாயகனுடனான காதல் காட்சிகளிலும், தாத்தாவுடனான பாசக் காட்சிகளிலும் அழகாய், மிருதுவாய் நடித்திருப்பவர், படத்தின் கடைசி பதினைந்து நிமிட காட்சிகளில் பத்ரகாளியாக மாறி, ஆவேச நடிப்பை வெளிப்படுத்தி, தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
நாயகியின் தாத்தா ராமையாவாக நடித்திருக்கும் பாரதிராஜா, குரலும் உடலும் நடையும் தளர்ந்து, ஒரு பன்மவயது பேத்தியின் நிஜ தாத்தாவாகவே திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் போனில் சொல்லும் ஓரிரு வார்த்தைகள் மூலம் கதையில் அவர் ஏற்படுத்தும் திருப்பம்… மிகப்பெரிய சர்ப்ரைஸ்!
நாயகியின் தாய்மாமன் தர்மனாக வரும் சுசீந்திரன், நாயகியின் தோழி ஹேமாவாக வரும் நக்ஷா சரண், ராமையா தாத்தாவின் உதவியாளர் ராசுவாக வரும் அப்புக்குட்டி உள்ளிட்ட ஏனையோர் தத்தமது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சுசீந்திரன் தனது எளிமையான காதல் கதைக்குள் அளவாக சாதிவெறியையும், அதற்கு வலிமையான புதுவித தண்டனையையும் புகுத்தியதற்காகவும், படத்தின் கடைசி பதினைந்து நிமிட திரைக்கதையை பரபரப்பாக அமைத்ததற்காகவும் பாராட்டலாம். அதே நேரத்தில், இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான படத்தில் முதல் ஒண்ணே முக்கால் மணி நேர திரைக்கதையை – காட்சியமைப்பை – ரொம்பவும் தட்டையாக அமைத்ததற்கு பதிலாக கொஞ்சம் மெனக்கெட்டு சுவாரஸ்யமாக அமைத்திருந்தால் இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இளையராஜாவின் பாடலிசையும், பின்னணி இசையும் சுமார். வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.
அறிமுக இயக்குனர் மனோஜ் பாரதிராஜா இப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் நடிகர்களை தேர்வு செய்த விதமும், அவர்களை வேலை வாங்கிய விதமும் சிறப்பு. ஆனால், கதை சொன்ன விதம் பழசாக இருக்கிறது. ’அவுட் டேட்டட்’ ஃபிலிம் மேக்கிங். இதில் அவர் கவனம் செலுத்தி, ’அப் டேட்’ ஆகிக்கொண்டால், சிறந்த இயக்குனராக தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்கலாம். வாழ்த்துகள்.
‘மார்கழி திங்கள்’ – காதலித்தவர்களும், காதலிப்பவர்களும் கண்டு களிக்கலாம்! சாதிவெறியர்கள் பார்த்து பயந்து திருந்தலாம்!