“கோட்சேவின் வாரிசுகளுக்கு தக்க பாடம் புகட்டி காந்தி பிறந்த மண்ணை காத்திடுவோம்!” – முதல்வர் ஸ்டாலின்
மகாத்மா காந்தியின் 79ஆவது நினைவு தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 79 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
முதல்வரைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: ”அமைதி வழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள், ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார். மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
