சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தனது 23-வது படமாக நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘மதராஸி’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யுத் ஜம்வால், பிஜுமேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீலட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இதற்கு இசையமைத்து உள்ளார்.

வருகிற (செப்டம்பர்) 5ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாவதையொட்டி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்வில் நடிகை ருக்மிணி வசந்த் பேசும்போது, “மதராஸி எல்லோருக்கும் ஸ்பெஷலான திரைப்படம். எனக்கு ரொம்ப நெருக்கமான படம் இது. என் மேல நம்பிக்கை வச்சு இந்த கதாபத்திரத்தைக் கொடுத்த முருகதாஸ் சாருக்கு நன்றி. சினிமாவுக்கு தொடர்ந்து அவர் கொடுக்கும் உழைப்பு ஆச்சர்யமாக இருக்கு. நான் எஸ்.கே-வின் certified பேன் கேர்ள்! தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. என்னுடைய தொடக்க காலத்திலேயே இப்படியான ஒரு அன்பை எனக்கு கொடுத்திருக்கீங்க” என்று கூறினார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது, “நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன்னா, அதுக்கு காரணம் சிவகார்த்திகேயன் தான். என்னுடைய முதல் பிளாக்பஸ்டர் படம் ‘எதிர்நீச்சல்’. அது சிவகார்த்திகேயன் நடித்த படம். இப்போது அவர் ₹50, ₹100, ₹300 கோடி என வசூல் அடித்துவிட்டார். ‘மதராஸி’ டிரெய்லரில், ‘இது என் ஊருடா, நான் நிப்பேன்’னு சொல்வார். அதுமாதிரி, இது என்னுடைய எஸ்.கே, நான் வந்து நிப்பேன். “ஒரு நாள் நான் ஃபீல்ட் அவுட் ஆவேன். அப்போது என் மனம் சிவகார்த்திகேயன் ஜெயிக்கிறதை பார்த்து, நான் ஜெயித்ததாக நினைத்து சந்தோஷப்படும்” என்று உருக்கமாக பேசினார்.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். “கஜினி’ படம் போலவே, ‘மதராஸி’யும் ஒரு பழிவாங்கும் கதை. ஆனால், காதல் தான் இதன் மையப் புள்ளியாக இருக்கும். ’துப்பாக்கி’ நடிகர் வித்யுத் ஜம்வாலுக்கு இதில் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் உள்ளது” என்று அவர் கூறினார். மேலும், சிவகார்த்திகேயனின் கடின உழைப்பையும், படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பாராட்டினார்.

இப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் பேசும்போது, “அனிருத் ஃபீல்ட் அவுட் எல்லாம் ஆக மாட்டார். ஷாருக்கான் தொடங்கி எல்லாரையும் பார்த்துவிட்டார். ஆயிரம், ரெண்டாயிரம், மூவாயிரம் கோடி என பல சாதனைகளை அவர் இன்னும் செய்ய வேண்டியிருக்கு. அனிருத்துடன் நான் எந்த அளவுக்கு நெருக்கம் என்றால், நான் எந்த படத்துக்குக் கேட்டாலும் உடனே ஓ.கே சொல்லிவிடுவார். ஆனால் அப்படி நான் போய் கேட்கவே மாட்டேன். அதுதான் அவருக்கு நான் கொடுக்கிற மரியாதை. ஒருவேளை கேட்கப்போனால், அவருக்கு ஏற்ற மாதிரி சரியான படத்துடன் தான் போய் கேட்பேன். வெற்றியை எப்படி கையாளுவது என்பதற்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.

விஜய் சார் கூட நான் நடித்ததற்குப் பிறகு எல்லோருக்கும் சந்தோஷம். சிலர், இவர் அடுத்த தளபதி, குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் பண்ணாங்க. விஜய் சார் அப்படி நினைத்திருந்தால் துப்பாக்கியை என்னிடம் கொடுத்திருக்க மாட்டார், நானும் வாங்கியிருக்க மாட்டேன். நான் அவருடைய ரசிகர்களை பிடிக்கப் பார்க்கிறேன்னு சொன்னாங்க, ரசிகர்களை அப்படி யாராலும் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது ஒரு பவர். அண்ணன் அண்ணன்தான்; தம்பி தம்பிதான்”’ என்று பேசினார்.

‘மதராஸி’ படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்: