மாரீசன் – விமர்சனம்

நடிப்பு: வடிவேலு, ஃபகத் ஃபாசில், கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா, ஹரிதா முத்தரசன் மற்றும் பலர்
இயக்கம்: சுதீஷ் சங்கர்
கதை, திரைக்கதை, வசனம் & கிரியேட்டிவ் இயக்குநர்: வி.கிருஷ்ணமூர்த்தி
ஒளிப்பதிவு: கலைச்செல்வன் சிவாஜி
படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரி
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் & ரியாஸ் கே அஹமத்
மாரி செல்வராஜின் ’மாமன்னன்’ வெற்றிப்படத்துக்குப் பிறகு வடிவேலுவும் ஃபகத் ஃபாசிலும் மீண்டும் இணைத்திருக்கும் திரைப்படம்; பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ள 98-வது திரைப்படம், மிகவும் கவனம் ஈர்த்த டிரெய்லரைக் கொண்ட திரைப்படம் என்பன போன்ற காரணங்களால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘திரைப்படம் ‘மாரீசன்’. தற்போது திரைக்கு வந்திருக்கும் இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…
சின்னச் சின்ன திருட்டுகள் செய்து பிழைக்கும் திருடரான தயாளன் (ஃபகத் ஃபாசில்), தண்டனை அனுபவித்துவிட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து விடுலையாகி வெளியே வருகிறார். அப்படி வெளியே வந்ததும் உடனே திருடத் தொடங்கி விடுகிறார். குளித்துக்கொண்டிருக்கும் ஒருவரது செல்போன், திரையரங்குக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை களவாடுகிறார்.
நாகர்கோயிலுக்கு வரும் அவர், திருடுவதற்காக ஒரு வீட்டுக்குள் நுழைகிறார். அங்கே ஓர் அறையில், கை-கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், கட்டிலில் அமர்ந்திருக்கிறார் வேலாயுதம் பிள்ளை (வடிவேலு). “வா குமாரு… என்ன இவ்வளவு நேரம்?” என்று தயாளனை வேலாயுதம் வரவேற்க, எதுவும் புரியாமல் தயாளன் விழிக்க, “ஓ… நீ குமார் இல்லையா…? வேற ஆளா…? நான் என் மகன் குமார் தான் வந்துட்டானோனு நெனைச்சேன்” என்கிறார். பின்னர், தனக்கு ‘அல்சைமர்’ எனப்படும் நினைவை இழக்கும் ’மறதிநோய்’ இருப்பதாகவும், தான் தொலைந்து போய்விடக் கூடாது என்பதற்காக தன் மகன் குமார் தன்னை இப்படி கட்டிப்போட்டுவிட்டு வேலைக்குப் போயிருப்பதாகவும் சொல்லும் வேலாயுதம், தன்னை இந்த நரகத்திலிருந்து விடுவித்து வெளியே அழைத்துச் சென்றால், அதற்கு பரிசாக ஏடிஎம்மில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் எடுத்துத் தருவதாகவும் சொல்கிறார்.
இந்த டீலை ஏற்றுக்கொள்ளும் தயாளன், வேலாயுதத்தை விடுவித்து வெளியே அழைத்துச் செல்கிறார். அவருக்குத் தர வேண்டிய ரூ.25 ஆயிரத்தைக் கொடுப்பதற்காக வேலாயுதம் ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, அவருடைய கணக்கில் ரூ.25 லட்சம் இருப்பு இருப்பதை ஏடிஎம் மிஷினின் டிஸ்ப்ளேவில் பார்த்துவிடுகிறார் தயாளன்.
அந்த ரூ.25 லட்சத்தை எப்படியாவது முழுசாக அபகரித்துவிட வேண்டும் என்று திட்டம் போடும் தயாளன், ஏ.டி.எம் பின்நம்பரைத் தெரிந்து கொள்வதற்காக, வேலாயுதம் எங்கெங்கு, எந்தெந்த நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறாரோ, அங்கெல்லாம் அவரை மோட்டார் சைக்கிளிலேயே அழைத்துச் செல்கிறார்.
ஆனால், வேலாயுதம் யார் யாரையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னாரோ அவர்களெல்லாம் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது.
எனில், வேலாயுதம் யார்? அவரது பின்னணி என்ன? அவருக்கு உண்மையிலேயே மறதிநோய் இருக்கிறதா, இல்லையா? அவரிடமிருந்து ரூ.25 லட்சத்தை அபகரிக்க நினைத்த தயாளன், அதை வெற்றிகரமாக அபேஸ் பண்ணினாரா, இல்லையா? தயாளனின் பின்னணி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘மாரீசன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

வேலாயுதம் பிள்ளையாக வடிவேலு நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்பதைவிட பிய்த்து உதறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் முற்றிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பிரமிக்க வைத்திருக்கிறார். காமெடியனுக்கான உடல்மொழி எந்த இடத்திலும் வெளிப்பட்டு விடாமல், அடக்கமான ஹியூமர் காட்சிகளிலும், அழுத்தமான எமோஷனல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாராட்டுகள். எதிர்காலத்தில் இயக்குநர்கள் இதுபோல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் வடிவேலுவை நடிக்க வைத்து, இதுவரை வெளியே வராமல் அவருக்குள் இருக்கும் பன்முகத் திறமைகளை வெளிக்கொணர்ந்து, பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.
தயாளனாக ஃபகத் ஃபாசில் நடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதை அநாயசமாக செய்து ஆச்சரியப்படுத்தும் அவருக்கு, ‘திருடர்’ கதாபாத்திரம் புதிது அல்ல என்பதால், இந்தப் படத்திலும் அசால்டாக நடித்து பாராட்டுப் பெறுகிறார்.
வேலாயுதம்பிள்ளையின் மனைவி மீனாட்சியாக வரும் சித்தாரா, அவரது நண்பர் சாரியாக வரும் லிவிங்ஸ்டன், தயாளனின் அம்மா சாந்தியாக வரும் ரேணுகா, அவரது நண்பர் நெட்வொர்க் கணேஷாக வரும் விவேக் பிரசன்னா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஃபிரீதா பேகமாக வரும் கோவை சரளா, சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜாக வரும் பி.எல்.தேனப்பன், மற்றும் சிவசெல்வமாக வரும் ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா, சங்கீதாவாக வரும் ஹரிதா முத்தரசன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக கொடுத்திருக்கிறார்.
இப்படத்துக்கு கதை – திரைக்கதை -வசனம் எழுதி, கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்றியுள்ளார் வி.கிருஷ்ணமூர்த்தி. கருத்துள்ள கதை, மறைக்க வேண்டிய செய்திகளை மறைத்து, அவற்றை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் வெளிப்படுத்தும் சுவாரஸ்யமான திரைக்கதை, கதை – கதாபாத்திரம் – காட்சி ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட வசனங்கள் என தன் கடமையை புத்திசாலித்தனமாக செய்திருக்கிறார் வி.கிருஷ்ணமூர்த்தி. இந்த புத்திசாலித்தனத்துக்கு முரணாக பல லாஜிக் மீறல்களை அனுமதித்திருப்பது, இன்றைய சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் ‘குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை’ எனும் மிக முக்கியப் பிரச்சனையை ரொம்ப மேலோட்டமாக அணுகியிருப்பது போன்றவை எழுத்தாளர் கவனிக்கத் தவறிய குறைகள். தவிர்த்திருக்கலாம்.
இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிப்புக் கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களிடம் திறமையாக நடிப்பை வாங்கி, தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்து தரமான உழைப்பை நேர்த்தியாகப் பெற்று, படத்தை துளியும் போரடிக்காமல் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் சுதீஷ் சங்கர்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். கிரைம் சஸ்பென்ஸ் திரில்லருக்குப் பொருத்தமான பின்னணி இசையை சிறப்பாக வழங்கியிருக்கிறார். “நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்…” என்ற இளையராஜாவின் பாடலை சாமர்த்தியமாக சொருகியிருப்பது அருமையோ அருமை.
கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பும் இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
’மாரீசன்’ – மறக்க இயலாத, அழகான பயணம்!
ரேட்டிங்: 3/5.