மாமன் – விமர்சனம்

நடிப்பு: சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பாபா பாஸ்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் (அறிமுகம்), பாலசரவணன், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயாதேவி, நிகிலா சங்கர் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: பிரசாந்த் பாண்டியராஜ்
கதை: சூரி
ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்
படத்தொகுப்பு: கணேஷ் சிவா
இசை: ஹெஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு: ‘லார்க் ஸ்டூடியோஸ்’ கே.குமார்
தமிழ்நாடு வெளியீடு: ஸ்ரீகுமரன் ஃபிலிம்ஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
பண்டைக் காலம் முதலே, தமிழ் இனக்குழுவில் பிறந்த ஒவ்வொரு குழந்தை மீதும், அதன் தாய்க்கு அடுத்தபடியாக – தந்தைக்கும் மேலாக – தாய்மாமனுக்கு உரிமையும் கடமையும் பாத்தியதையும் உண்டு என்பது தமிழ் சமூகத்தின் போற்றுதலுக்கு உரிய சமூகவியல் வரலாறு. இதை தெரிந்துகொள்ள நீங்கள் மானிடவியல் ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மரபைப் பேணிக் காக்கும் இன்றைய தமிழ் குடும்பங்களில் ஒரு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரை நடைபெறும் – காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற – அனைத்து விழாக்களை / நிகழ்வுகளை உற்று நோக்கினாலே, தாய்மாமனுக்கான முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ள முடியும். ஒரு குழந்தைக்கும், அதன் தாய்மாமனுக்கும் இடையிலான இத்தகைய சிறப்பு வாய்ந்த உறவு பற்றி நடிகர் சூரி தன் அனுபவத்தில் படித்து, அமர்க்களமாக எழுதியுள்ள கதை தான் தற்போது ‘மாமன்’ திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. காமெடி நடிகராக திரை வாழ்க்கையைத் தொடங்கி, கதாநாயகனாக வளர்ந்து, கதாசிரியராக உயர்ந்திருக்கும் சூரியின் ‘மாமன்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

நாயகன் இன்பா (சூரி) இனிப்புப் பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தந்தையை இழந்த அவர், ஆசிரியையாகப் பணிபுரியும் தன் அக்கா கிரிஜாவை (சுவாசிகா) – தன் தாய்க்கும் (கீதா கைலாசம்) மேலாக வைத்து – உயிருக்கு உயிராக நேசித்து வருகிறார். அதுபோல், கிரிஜா தன் தம்பி இன்பாவை தனது ’அப்பா’வாகப் பாவித்து அன்பு செலுத்தி வருகிறார்.
கிரிஜாவுக்கும், அவரது கணவர் ரவிக்கும் (பாபா பாஸ்கர்) திருமணம் ஆகி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், குழந்தை இல்லாததால், குடும்பத்தாரும் சுற்றத்தாரும் கிரிஜாவின் மனதைக் காயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இது இன்பாவுக்கும் மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
இந்நிலையில், நல்வாய்ப்பாக கருவுறும் கிரிஜா, ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கிறார். நிலன் (மாஸ்டர் பிரகீத் சிவன்) என்ற அக்குழந்தை மீது அதீத பாசத்தைப் பொழிந்து வளர்க்கிறார் தாய்மாமன் இன்பா. நிலனும் தன் பெற்றோரை விட தாய்மாமன் இன்பாவிடம் அளவுக்கு அதிகமான அன்புடன் ஒட்டிக்கொண்டு, பாசமாக வளர்கிறான். அவனது அப்பாவாக அன்பு செலுத்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ரவி வேதனைப்படுகிறார்.
இதனிடையே, இன்பாவுக்கும், அவரது காதலியும் நாயகியுமான டாக்டர் ரேகாவுக்கும் (ஐஸ்வர்யா லட்சுமி) திருமணம் நடந்தேறுகிறது. இந்த திருமணத்திற்குப் பின்னும் சிறுவன் நிலன் அடம் பிடித்து இன்பாவுடனே படுத்துத் தூங்குகிறான். இதனால் கணவனிடமிருந்து விலகிப் படுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகும் புது மனைவி ரேகா மிகுந்த ஏமாற்றம் அடைகிறார். விளைவாக, இன்பா – ரேகா தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை சூறாவளியாக சுழன்றடிக்கத் தொடங்குகிறது.
இந்த பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, ரேகாவுக்கும் கிரிஜாவுக்கும் இடையிலான சண்டையாக விரிவடைந்து, ஒட்டுமொத்த குடும்பச் சண்டையாக விஸ்வரூபம் எடுக்கிறது. இதனால் பிரிந்துபோகும் இன்பாவும் ரேகாவும் நிரந்தரமாகப் பிரிந்துவிடுவது என்று முடிவெடுக்கும்போது, உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம் என்ன? நிலன் விவகாரம் முடிவுக்கு வந்ததா? அல்லது தீவிரம் அடைந்ததா? இன்பாவும் ரேகாவும் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு உள்ளத்தைத் தொடும் வகையில் எமோஷனலாக விடை அளிக்கிறது சூரியின் ‘மாமன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, மாமன் இன்பாவாக சூரி நடித்திருக்கிறார். எப்படிப்பட்ட நாயகப் பாத்திரமாக இருந்தாலும், அதற்குள் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை மீண்டும் இந்த படம் மூலம் அவர் நிரூபித்திருக்கிறார். அக்கா மீதும், அக்கா மகன் மீதும் பாசத்தைக் கொட்டி நடித்து ரசிக்க வைத்துள்ளார். காதல், ரொமான்ஸ் காட்சிகளில் மென்மையாக உணர்வுகளை வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் இதயங்களில் பச்சக்கென ஒட்டிக்கொள்கிறார். உருக்கமான காட்சிகளில் கண் கலங்கச் செய்துவிடுகிறார். மொத்தத்தில், இப்படம் மூலம் பெண்களுக்கு மிகவும் பிடித்த நாயகனாக சூரி உயர்ந்துவிட்டார். பாராட்டுகள் சூரி!
நாயகனுக்கு ஏற்ற நாயகியாக, டாக்டர் ரேகாவாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். அக்காவையும், அக்கா மகனையும் இத்தனை பாசமாக பார்த்துக்கொள்ளுபவர் தன்னையும் அக்கறையுடன் கவனித்துக்கொள்வார் என்ற நினைப்பில் நாயகன் மீது காதல் கொள்வது, பின்னர் அந்த நினைப்பே பொய்த்து விடுவதால் நொறுங்கிப் போவது என்ற தன் கதாபாத்திரம் கோரும் நடிப்பை குறைவில்லாமல் நிறைவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் அக்கா கிரிஜாவாக சுவாசிகா நடித்திருக்கிறார். தம்பி மீது அதீத அன்பு செலுத்துவது, பின்னர் தான், பெற்ற மகனுக்காக அந்த தம்பியோடும் தம்பி மனைவியோடும் மல்லுக்கு நிற்பது என்ற கதாபாத்திரத்தில் சுவாசிகா கலக்கியிருக்கிறார்.
சிறுவன் நிலனாக மாஸ்டர் பிரகீத் சிவன் நடித்திருக்கிறார். தன்னைச் சுற்றி என்ன குழப்பம் நிலவுகிறது என்ற யதார்த்தம் புரியாமல், சுட்டித்தனமும், துடுக்குத்தனமும் நிறைந்த நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.
நாயகனின் அம்மாவாக வரும் கீதா கைலாசம், அக்காவின் கணவர் ரவியாக வரும் பாபா பாஸ்கர், நாயகியின் அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ், பெரியவர் சிங்கராயராக வரும் ராஜ்கிரண், அவரது மனைவி பவுனாக வரும் விஜி சந்திரசேகர், நாயகனின் நண்பன் பூங்காவனமாக வரும் பாலசரவணன், நாயகனின் முன்னாள் காதலியாக வரும் சாயாதேவி, அகிலாவாக வரும் நிகிலாசங்கர் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சூரியின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். குடும்ப உறவுகளின் யதார்த்த நிலைமையையும், மேன்மைகளையும் காட்சிகளில் கொண்டு வந்து, குடும்ப விழாக்கள் மற்றும் சிறு சிறு குடும்பப் பிரச்சனைகள் மூலம் சுவாரஸ்யத்தைக் கூட்டி குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இதை படைத்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களையும் அவ்வப்போது ஓவர்-ஆக்ட்டிங் செய்ய வைத்திருப்பது, சோகத்தை மிகையாகப் பிழிந்தெடுத்திருப்பது, தொலைக்காட்சி தொடர் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பது ஆகிய குறைகளை இயக்குநர் தவிர்த்திருந்தால், படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.
குடும்பக் கதைக்குத் தேவையான யதார்த்தமான ஒளிப்பதிவை சிறப்பாகச் செய்திருக்கிறார் தினேஷ் புருஷோத்தமன். சோர்வை ஏற்படுத்தும் சில காட்சிகளின் நீளத்தை படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா குறைத்திருக்கலாம். ஹெஷாம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை.
‘மாமன்’ – தமிழ் குடும்ப உறவுகளின் மேன்மையைச் சொல்லும் அபூர்வமான திரைப்படம்; குடும்பத்துடன் அவசியம் பார்த்து மகிழலாம்!
ரேட்டிங்: 3.5/5