பாரம் – விமர்சனம்
படுத்த படுக்கையாகக் கிடக்கும் தந்தையைக் கவனித்துக் கொள்ளாமல், அவரைப் பாரமாக நினைக்கும் குடும்பத்தின் கதைதான் ‘பாரம்’
மகன், மருமகள், பேத்தி மூவரும் கிராமத்தில் வசிக்க, நகரத்தில் உள்ள தன் தங்கையின் வீட்டில் இருந்துகொண்டு இரவுநேர வாட்ச்மேனாகப் பணியாற்றி வருகிறார் கருப்பசாமி. அவருடைய தங்கை மட்டுமின்றி, தங்கையின் மகன்கள் முருகன், மணி, வீரா மூவரும் கூட அவரிடம் மிகப் பாசமாக உள்ளனர்.
அதுவும், வீராவுக்கு கருப்பசாமி மாமா மீது தனிப் பிரியம். ‘இந்த வயசுல உன்ன யாரு வேலைக்குப் போகச்சொன்னா? நாங்க மூணு பேரும் உன்னைப் பார்த்துக்க மாட்டோமா?’ என்று அன்புடன் கோபித்துக் கொள்கிறார் வீரா. ‘விட்டில் பூச்சிதான்டா விளக்கைத் தேடிப்போகும். நான் மின்மினிப் பூச்சிடா’ எனத் தத்துவம் சொல்கிறார் கருப்பசாமி.
ஒருநாள், இரவுப் பணி முடித்துத் திரும்பும்போது, கருப்பசாமிக்கு விபத்து நேர்கிறது. விஷயம் அவருடைய தங்கை மகன்களுக்குத் தெரியவர, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், இடுப்பு எலும்பு முறிந்துவிட்டதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். இல்லையென்றால், கடைசி வரை அவரால் எழுந்து நடமாட முடியாது என்றும் கூறுகிறார்.
எனவே, விஷயத்தைக் கருப்பசாமியின் மகன் செந்திலுக்குச் சொல்கின்றனர். ஆனால், தான் வேலையில் இருப்பதாகவும், கிராமத்திலேயே வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவரை கிராமத்துக்கு தூக்கிவரச் சொல்கிறார் செந்தில். எனவே, ஒரு குட்டி யானை வண்டியில் கருப்பசாமியை ஏற்றிச் செல்கின்றனர் தங்கை மகன்கள்.
கருப்பசாமியைக் கிராமத்தில் விட்டுவந்த சில நாட்களில், அவர் இறந்துவிட்டார் எனத் தங்கை மகன்களுக்கு போன் வருகிறது. கருப்பசாமி தானாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? அதன் பிறகு நடந்தது என்ன? என்பது மீதிக் கதை.
66-வது தேசிய விருது விழாவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப் பெற்ற படம் இது. ஆனால், ஆவணப் படத்துக்கான கூறுகள்தான் அதிக அளவில் இருந்தன.
படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர்கள். பெரும்பாலும் புதுமுக நடிகர்கள். எனவே, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை, நேரடியாகப் பார்ப்பது போல் உணர முடிகிறது. குறிப்பாக, கருப்பசாமி, அவருடைய தங்கை, மீனா ஆகிய 3 கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக எதார்த்தம். அதேபோல், வசனங்களும். இதுதான் வசனம் எனச் சொல்லி, அவர்களை ஒப்புவிக்கச் சொல்லாமல், பெரும்பாலும் சூழ்நிலையைச் சொல்லி, நடிகர்களையே பேச வைத்தது போல் அவ்வளவு இயல்பாக உள்ளது. அதேசமயம், ஆவணப்படமாக நினைக்கத் தோன்றுவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.
மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால், தனியாக டப்பிங் பேசாமல், லைவ் டப்பிங்கைப் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல், ஒளிப்பதிவிலும் பெரிதும் மெனக்கெடாமல், இயல்பாகக் கிடைத்த வெளிச்சத்தையே பயன்படுத்தி எடுத்துள்ளனர். இவையும் இதுவொரு ஆவணப்படம் என்ற கருத்தையே நம்முள் தொடர்ந்து வலியுறுத்துவது போல் அமைந்துள்ளது.
தமிழகக் கிராமங்களில் சில தலைமுறைகளாக இருந்து வந்த/வரும் ‘தலைக்கூத்தல்’ முறையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி. ஆனால், ஊர்ப் பெயரைச் சொன்னால் பிரச்சினையாகும் என்பதால், படத்தில் எந்த ஊர் எனக் குறிப்பிடவில்லை.
அதுபோல், 26 வகையான ‘தலைக்கூத்தல்’ முறை இருக்கிறது என்று தான் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலமாகப் படத்தில் வசனம் வைத்துள்ளார். அதில், ஏதாவது ஒரு முறையைப் படத்தில் கையாண்டிருந்தாலும், அதை வைத்தே எந்த ஊர் எனக் கண்டுபிடித்து விடலாம் என்பதால், அதை அறவே தவிர்த்து, தன்னுடைய புத்திசாலித்தனத்தைக் காட்டியுள்ளார். அதற்காக, விஷ ஊசி போட்டுக் கொல்வது என்பது எப்படி ‘தலைக்கூத்தல்’ முறைக்குள் வரும் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
அதேசமயம், தாத்தா – பேத்திக்கான உறவு இடைவெளி, மாமா – தங்கை மகன் உறவின் பிணைப்பு போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சின்ன வயதில், திருவிழாவில் பீப்பீ வாங்கி ஊதுவதை அண்ணனும் தங்கையும் சிரித்துப் பேசும் காட்சி, அழகியல். அதேசமயம், சில மிகை எதார்த்தக் காட்சிகளும் படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.
மிகப்பெரிய உணர்வு குறித்துப் பேசியிருக்கும் படம், அந்த உணர்வைப் பார்வையாளனுக்கும் கடத்த வேண்டியது அவசியம். அப்போதுதான் அந்தப் படம் எடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை அடைய முடியும். ஆனால், அப்படி ஒரு உணர்வை இந்தப் படம் உண்டாக்கவில்லை.