லவ் மேரேஜ் – விமர்சனம்

நடிப்பு: விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ், சத்யராஜ் (சிறப்பு தோற்றம்), ரியோராஜ் (சிறப்பு தோற்றம்) மற்றும் பலர்

இயக்கம்: சண்முகபிரியன்

ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர்

படத்தொகுப்பு: பரத் விக்ரமன்

இசை: ஷான் ரோல்டன்

தயாரிப்பு: அஷூயர் ஃபிலிம்ஸ் & ரைஸ் ஈஸ்ட்

தயாரிப்பாளர்கள்: டாக்டர் ஸ்வேதாஸ்ரீ & ஸ்ரீநிதி சாகர்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘அசோக வனமுலு அர்ஜுன கல்யாணம்’ என்ற திரைப்படத்தை, தமிழர்களின் ரசனைக்கேற்ப சிற்சில மாற்றங்களுடன் காமெடி குறையாமல் உருவாக்கி, வெளியிட்டிருக்கும் தமிழ் திரைப்படம் ‘லவ் மேரேஜ்’

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் நாயகன் ராமச்சந்திரன் (விக்ரம் பிரபு). ஜவுளிக்கடை வைத்து நடத்தி வரும் அவருக்கு 33 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. சொந்த ஊரில், சொந்த சாதியில் அவருக்காகப் பார்க்கும் பெண்கள் எல்லாம் அவரது வயதைக் காரணம் காட்டி நிராகரித்து விடுகிறார்கள். இதனால் சுற்றத்தாரின் கேலி – கிண்டலுக்கு ஆளாகும் ராமச்சந்திரன், எந்த ஊரிலாவது, ஏதாவதொரு பெண் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்.

இறுதியாக கல்யாணத் தரகர் மூலம் அவருக்கு ஒரு வரன் அமைகிறது. கோவை மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த வேறு சாதி வரனுக்கு அவரும் சம்மதிக்கிறார். அம்பிகா (சுஷ்மிதா பட்) என்ற அந்த பெண்ணை நிச்சயம் செய்ய, ராமச்சந்திரனின் குடும்பத்தினர், ஒரு பஸ்ஸை ஏற்பாடு செய்து, நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்துக்கொண்டு கோபிசெட்டிபாளையம் செல்கிறார்கள்.

அங்கு பெண் வீட்டில் ராமச்சந்திரனுக்கும் அம்பிகாவுக்கும் நல்லபடியாக நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது. மாப்பிள்ளை வீட்டார் உசிலம்பட்டிக்குக் கிளம்பத் தயாராகும்போது, பஸ், மேஜர் கோளாறு காரணமாக ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. அதை சரி செய்ய நகரத்திலிருந்து மெக்கானிக் வர வேண்டும் என்பதால், அன்றிரவு மாப்பிள்ளையும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் பெண் வீட்டிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி, கொரோனா பரவல் அபாயம் அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ‘முழு ஊரடங்கு (லாக்- டௌன்)’ பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கிறார். இதனால் மேலும் சில நாட்கள் பெண் வீட்டிலேயே மாப்பிள்ளை வகையறாக்கள் தங்க வேண்டியதாகி விடுகிறது.

அப்படி தங்கியிருக்கும்போது, சொந்த பந்தங்களுக்குள் குழப்பங்களும் சிக்கல்களும் ஏற்பட்டு, ராமச்சந்திரனின் திருமணக் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும் அபாயம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் இக்காலகட்டத்தில், மணப்பெண்ணான அம்பிகாவுடன் பேசிப் பழக மாப்பிள்ளை ராமச்சந்திரன் முயற்சிக்கிறார். ஆனால் அம்பிகாவோ, ராமச்சந்திரனின் முகம் பார்த்துக்கூட பேச மனமில்லாமல் தவிர்ப்பதோடு, ஒருநாள் தன் காதலரோடு (ரியோராஜ்) வீட்டைவிட்டு ஓடிப்போகிறார். இது தெரிந்து, அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுகிறார் ராமச்சந்திரன்

அதன்பிறகு என்ன நடந்தது? ராமச்சந்திரனுக்கு திருமணம் நடந்ததா, இல்லையா? நடந்தது எனில் யாருடன்? என்பன போன்ற கேள்விகளுக்கு காமெடியாகவும் கலகலப்பாகவும் விடை அளிக்கிறது ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, 33 வயது ராமச்சந்திரனாக விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் இடையில் கல்யாணம் ஆகாத சோகத்துடன் வலம் வந்தாலும், அதை முகத்தில் காட்டாமல் சமாளிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கல்யாணக் கனவுகளுடன் மணமகளிடம் பேச முயற்சிக்கும் காட்சிகளில் மனதை ஈர்க்கிறார். இறுதியில் உறுதியான முடிவுடன் பொங்கி எழும் காட்சியிலும் அளவாக நடித்து பார்வையாளர்களைக் கவருகிறார். சுருக்கமாகச் சொல்வதென்றால், இதுவரை பார்த்திராத வித்தியாசமான விக்ரம் பிரபுவை இப்படத்தில் பார்த்து ரசிக்கலாம்.

நாயகியாக, மணப்பெண் அம்பிகாவாக சுஷ்மிதா பட் நடித்திருக்கிறார். அதிகம் பேசாமல் அமைதியாகவும், இறுக்கமான முகத்துடனும் தோன்றி தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். அவரது தங்கை ராதாவாக மீனாட்சி தினேஷ் நடித்திருக்கிறார். அக்காவின் கதாபாத்திரத்துக்கு நேர்மாறாக நிறையப் பேசுகிற, துறுதுறுவென கலகலப்பாக இருக்கிற கதாபாத்திரத்தை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.

நாயகனின் அப்பாவாக வரும் கஜராஜ், மாமாவாக வரும் அருள்தாஸ், நண்பர் குருவாக வரும் ரமேஷ் திலக், எம்.எல்.ஏ.வாக சிறப்புத் தோற்றத்தில் வரும் சத்யராஜ், நாயகியின் காதலராக சிறப்புத் தோற்றத்தில் வரும் ரியோராஜ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கிறார் சண்முகபிரியன். சுவாரஸ்யமான ஒருவரிக் கதையை எடுத்துக்கொண்டு, அதை காதல் மற்றும் குடும்பக் கதையாய் வளர்த்தெடுத்து, யதார்த்தம் மீறாமல், அதே நேரத்தில் காமெடி கலந்து, நல்லதொரு ‘ஃபீல்குட்’ பொழுதுபோக்குத் திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சண்முகபிரியன்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு காட்சிகளை வண்ணமயமாகப் படமாக்கியிருக்கிறது. பரத் விக்ரமனின் படத்தொகுப்பிலும் குறையில்லை.

‘லவ் மேரேஜ்’ – கலகலப்பான பொழுதுபோக்குத் திரைப்படம்; குடும்பத்தோடு ஜாலியாகப் பார்த்து மகிழலாம்!

ரேட்டிங்: 3/5.