‘லோகா, சேப்டர் 1: சந்திரா’ – விமர்சனம்

நடிப்பு: கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் கே கஃபூர், சந்து சலீம்குமார், அருண் குரியன், சாண்டி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: டொமினிக் அருண்

ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி

படத்தொகுப்பு: சாமன் சாக்கோ

இசை: ஜேக்ஸ் பிஜாய்

தயாரிப்பு: ’வேஃபேரர் ஃபிலிம்ஸ்’ துல்கர் சல்மான்

தமிழ்நாடு வெளியீடு: ஏஜிஎஸ் சினிமாஸ்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

‘Vampire’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘ரத்தக் காட்டேரி’ அல்லது ‘ரத்தம் குடிக்கும் பேய்’ என்பது பொருளாகும். மேற்கத்திய நாட்டுப்புறக் கதைகளில், இரவு நேரங்களில் தூங்கும் மனிதர்கள் அல்லது கால்நடைகளின் ரத்தத்தை உறிஞ்சும் ஓர் இறந்த மனிதரின் புத்துயிர் பெற்ற வடிவமாக ‘வாம்பயர்’ எனும் ’ரத்தக் காட்டேரி’ குறிப்பிடப்படுகிறது. ஹாலிவுட் உள்ளிட்ட மேற்கத்திய திரைப்படவுலகில், ‘வாம்பயர்’ ஜானரில் எக்கச்சக்கமாக திரைப்படங்கள் விதவிதமாக எடுக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்திய சினிமாவில், குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இந்த ‘வாம்பயர்’ ஜானரை மையமாக வைத்து யாரும் படம் பண்ணுவதில்லை; அல்லது அப்படி படம் பண்ணியவர்கள் மிக மிகக் குறைவு. அந்த வகையில், அபூர்வமான ‘வாம்பயர்’ அல்லது ‘ரத்தக் காட்டேரி’ அல்லது ‘ரத்தம் குடிக்கும் பேய்’ ஜானரில், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது தயாரிப்பு நிறுவனமான ‘’வேஃபேரர் ஃபிலிம்ஸ்’ மூலம் மலையாளத்தில் தயாரித்து, தமிழில் ‘டப்’ செய்து வெளியிட்டிருக்கும் படம் தான் ‘லோகா, சேப்டர் 1: சந்திரா’ திரைப்படம். தற்போது திரைக்கு வந்திருக்கும் இத்திரைப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

இனம் புரியாத ஒரு பயங்கர தாக்குதல் காட்சியுடன் படம் தொடங்குகிறது. இத்தாக்குதல் காட்சியில் கதையின் நாயகி சந்திராவை (கல்யாணி பிரியதர்ஷன்) அழிக்க சில புதிரான சக்திகள் முயலுகின்றன. அந்த சக்திகளை எதிர்த்து, ’சூப்பர் ஹீரோ’ பாணியில், தீரத்துடன் சமர் புரியும் சந்திரா, ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பித்து பெங்களூரு வருகிறார். அங்கு அவரது ஆதரவு சக்தி, அவரை அமைதியாக இருக்குமாறு கூறுகிறது. அதனால், தன் சூப்பர் பவரை மறைத்து, ஒரு சாதாரணப் பெண் போல் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார் சந்திரா.

அவர் குடியேறியுள்ள அடுக்குமாடி வீட்டுக்கு நேர் எதிரே உள்ள மாடி வீட்டில் சன்னி (நஸ்லென்), வேணு (சந்து சலீம்குமார்), நைஜில் (அருண் குரியன்) ஆகிய மூன்று கட்டை பிரம்மச்சாரி இளைஞர்கள் குடியிருக்கிறார்கள். ஒரு காதல் தோல்வியிலிருந்து அப்போது தான் மீண்டு கொண்டிருக்கும் சன்னி, எதிர் வீட்டில் தென்படும் சந்திராவை தற்செயலாகப் பார்த்து, அவரது அழகால் கவரப்படுகிறார். காதலுடன் அவரைப் பின்தொடர்ந்த வண்ணம் இருக்கிறார். அவ்வப்போது சந்திராவின் செயல்பாடுகளில் சில அமானுஷ்ய அடையாளங்கள் மின்னலெனத் தோன்றி மறைவதையும் கவனிக்கிறார். உண்மையில் அவர் யார்? பெண் தானா? என்ற குழப்பத்துடன், அவர் பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலுடன் பின்தொடர்ந்தபடி இருக்கிறார்.

ஓரிரவு. தனியே வரும் சந்திரா, மனிதர்களைக் கடத்தி அவர்களது உடலுறுப்புகளைத் திருடி விற்கும் ‘ஆர்கன் திருட்டு கும்பலிடம்’ சிக்கிக் கொள்வதை சன்னி பார்க்கிறார். சந்திராவின் உயிருக்கு ஆபத்து என்ற பதைபதைப்பில், அவரை கடத்திச் செல்லும் கும்பலை துரத்திக்கொண்டு ஓடுகிறார். அவர் நினைத்ததற்கு மாறாக ஓரிடத்தில் சந்திரா, தனது சூப்பர் பவரைக் கொண்டு அந்த கும்பலைப் புரட்டியெடுத்து பேயாட்டம் ஆடுவதைப் பார்த்து, சன்னி மிரண்டு மயங்கி விழுகிறார்.

உண்மையில் சந்திரா யார்? அவருக்கு எப்படி சூப்பர் பவர் வந்தது? அவரது அதீத இயல்புகள் என்ன? அவரது குறிக்கோள் என்ன? அவரது பலம் என்ன, பலவீனம் என்ன? அவர் ரத்தம் குடிக்கும் காட்டேரி என்பதை சன்னி எப்போது, எப்படி தெரிந்துகொள்கிறார்? அவர் சந்திரா மீது கொண்ட காதல் என்ன தான் ஆனது? என்பன போன்ற பல கேள்விகளுக்கு திகில் கலந்த அதிரடி ஆக்‌ஷனுடன் விடை அளிக்கிறது ‘லோகா, சேப்டர் 1: சந்திரா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகி சந்திராவாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். சிக்கலான பாத்திர வடிவமைப்பை தெளிவாகப் புரிந்துகொண்டு, அதில் தன்னை கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் தன் சூப்பர் பவர் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அதை மறைத்து சாதாரணப் பெண்ணாக இயங்கும் அவர், ஒரு கட்டத்தில் தனது சூப்பர் பவரை வெளிக்கொண்டுவரும் இடம் செம மாஸ். இடைவேளைக்கு முன், சந்திராவுக்கு சூப்பர் பவர் எப்படி வந்தது என்பதை அவரது சிறுவயதுக் கதையையும், தற்போது வாம்பயராக மாறி ஆர்கன் திருட்டுக் கும்பலின் ரத்தம் குடிக்கும் காட்சியையும் இண்டர்கட்டில் காட்டியிருப்பது மிரட்டல். அதுபோல் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் கல்யாணி பிரியதர்ஷின் கலக்கியிருக்கிறார். அவரது நடிப்புக்கு வாழ்நாள் முழுக்க பெயர் சொல்லும் படமாக இது இருக்கும் என்பது நிச்சயம்.

நாயகி சந்திராவை காதலிக்கும் நாயகன் சன்னியாக நஸ்லென் நடித்திருக்கிறார். அவரை நாயகன் என்று சொல்வதை விட ‘காமெடி ஹீரோ’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஆரம்பத்தில் காட்டேரி என்று தெரியாமல் அதன் மனம் கவர அவர் செய்யும் ரொமாண்டிக் சமாச்சாரங்களும், அது காட்டேரி என்று தெரிந்ததும் அலறி நடுங்கும் காட்சிகளும், “என்னை நீ கொன்ருவியா?” என்று பரிதாபமாக காட்டேரியிடம் கேட்கும் இடத்திலும் நஸ்லெனின் நடிப்பு பார்வையாளர்களை ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.

நாயகன் சன்னியோடு அறையில் தங்கியிருக்கும் வேணுவாக வரும் சந்து சலீம்குமார், நைஜிலாக வரும் அருண் குரியன் ஆகிய இருவரும் படம் முழுக்கப் பண்ணும் சிச்சுவேஷன் காமெடியைப் பார்த்து திரையரங்கமே கைதட்டி சிரித்து மகிழ்கிறது.

போலீஸ் அதிகாரி நாச்சியப்ப கௌடாவாக சாண்டி மாஸ்டர் வருகிறார். ஏறக்குறைய வில்லன் போல் வரும் அவர், நாயகியையும், நாயகனையும் பார்க்கும் பார்வையாலேயே பார்வையாளர்களைக் குலை நடுங்க வைக்கிறார். யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அவரும் ரத்தக் காட்டேரியாக மாறி, கதையின் போக்கை மாற்றி நிகழ்த்தும் கொடூரம் பயங்கரம்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டொமினிக் அருண். அதிகம் தொடப்படாத ‘வாம்பயர்’ ஜானரை துணிச்சலுடன் தொட்டதற்காக அவருக்கு நமது பாராட்டுகள். ரத்தக் காட்டேரியின் சூப்பர் பவரை நம்ம ஊர் நாட்டுப்புற பெண் தெய்வத் தொன்மத்துடன் சேர்த்து முன்வைத்திருப்பது அழகான கற்பனை. நாயகி உண்மையில் யார் என்று தெரியாததால் ’அடுத்து என்ன’ என்ற ஆர்வம் தூண்டப்படுவதாலும், இடைவேளைக்குமுன் நாயகியின் சுயரூபம் வெளிப்படுவதாலும் படத்தின் முதல் பாதி படுசுவாரஸ்யமாக ஜெட் வேகத்தில் பறக்கிறது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்துக்கு மேல் திடுக்கிடச் செய்யும் பெரிய திருப்பம் இல்லாமல் ‘பெண் ஜேம்ஸ்பாண்டு’ பாணியில் காட்சிகள் நகர்வதால், சுவாரஸ்யம் சற்று குறைகிறது. இரண்டாம் பாதி திரைக்கதைக்கு கூடுதல் சிரத்தை எடுத்திருந்தால், இன்னும் கூட கூடுதலாக ரசித்திருக்க முடியும்.

திகிலூட்டும் ‘வாம்பயர்’ ஜானர் படத்துக்குத் தேவையான பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாயும், ஒளிப்பதிவை நிமிஷ் ரவியும், படத்தொகுப்பை சாமன் சாக்கோவும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை யானிக் பென்னும், ஏஐ விஷுவலைசேஷனை அஜ்மல் ஹனீஃபும், ஏனைய தொழில்நுட்ப நேர்த்திகளை இதர தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக வழங்கி இப்படம் மற்றும் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

படத்தின் இறுதியில் திகிலூட்டும் வண்ணம் நடிகர் துல்கர் சல்மானைக் காட்டி முடித்திருப்பதன் மூலம், ‘லோகா, சேப்டர் 2’ திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பை இப்போதே எகிறச் செய்திருக்கிறார்கள்.

’லோகா, சேப்டர் 1: சந்திரா’ – அமானுஷ்யங்கள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமின்றி, நம்பிக்கை இல்லாதவர்களும் கண்டு ரசிக்கத் தக்க சுவாரஸ்யமான படம்!

ரேட்டிங்: 3.5/5.