ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா

சமூக கருத்தாக்கங்கள் நிரம்பிய படங்களை கமர்சியலாக கொடுத்துவரும் இயக்குநரான எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துவரும் படம் ‘லாபம்’. இப்படத்தை விஜய் சேதுபதி புரொடக்‌ஷனும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.

இப்படம் தொடர்பான முக்கிய புதிய செய்தி என்னவென்றால் நடிகை சாய் தன்ஷிகா இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது தான். அவரது கதாபாத்திரமும்  தோற்றமும் இப்படத்தில் புதுமையாக இருக்குமாம். இப்படி ஒரு மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துகொண்ட தன்ஷிகா படம் பற்றி மேலும் கூறியதாவது:-

ஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடுவதில்லை. அதைத் தாண்டிய சமூக சிந்தனை அவரது படத்தில் இருக்கும். லாபமும் அப்படியான படம் தான். விவசாயிகளின் வாழ்நிலையை பேசுவதோடு வெள்ளையர்கள் காலத்தில் இருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை படம் அழுத்தமாகப் பேசுகிறது. அன்று விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்று வரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசும்.

இப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஜனநாதன் சார் சொல்லவும், கதையே சொல்ல வேண்டாம் சார் என்றேன். ஏனென்றால் அவர் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை. நான் சினிமாவிற்கான அரிச்சுவடியைக் கற்றுக்கொண்டதே அவரிடம் இருந்து தான். பேராண்மை படத்தில் எப்படி ஒரு மாணவி போல அவரிடம் கற்றுக்கொண்டேனோ அதேபோல் இந்த லாபம் படத்திலும் கற்று வருகிறேன். பேராண்மைப் படத்தில் நான் நடித்ததற்கும் இப்படத்தில் நடிப்பதற்கும் இடையில் எனக்குள்ள கான்பிடண்ட் லெவல் கூடி இருப்பதை உணர முடிகிறது. இப்போதெல்லாம் என்னுடைய சினிமா பார்வையை ஸ்பாட்டில் சொல்லும் தைரியம் எனக்குள் வந்திருக்கிறது. அதற்கான காரணம் ஜனநாதன் சார் தரும் உற்சாகம். அவர் நம்மிடையே நிறைய விசயங்களை ஷேர் பண்ணுவார். அதேபோல் நாம் சொல்லும் விசயங்களை கவனமாக கேட்பார். சரியாக இருந்தால் அதை கன்சிடர் பண்ணுவார்.

அவர் இயக்கிய எல்லா படங்களும் எனக்கு விருப்பமான படங்கள். குறிப்பாக ஈ, இயற்கை இரண்டும் மிகவும் பிடிக்கும். இப்படத்தில் விஜய் சேதுபதியை மக்களுக்கு ரொம்ப  பிடிக்கும். அவர் ஒவ்வொரு படத்திலும் தனது வெவ்வேறு பரிணாமங்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். மக்களும் ரசிக்கிறார்கள். லாபம் படத்தில் தயாரிப்பாளராகவும் சிறப்பாக நடந்து கொள்கிறார். எனக்கு எது சரின்னு படுகிறதோ  அதைச் செய்து வருகிறேன்  என்று வெளிப்படையாகச் சொல்லும் நேர்மையாளர் அவர்.

இப்படத்தில் என் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. காரணம் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை விட கதைக்கான முக்கியத்துவம் கொடுப்பவர்  ஜனநாதன் சார். அப்படி கதைக்கு முக்கியத்துவம் உள்ள அவரது  படத்தில் நாம் இருந்தால் நிச்சயம் நம் கதாபாத்திரம் முக்கியமானதாகத் தான் இருக்கும்.

இப்போது பெண்கள் முதன்மை பாத்திரம் ஏற்று நடிக்கும் படங்கள் அதிகமாக வருகிறது. மக்களும் அதைக் கொண்டாடி வருகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லாபம் படத்தை  தியேட்டரில் வந்து பார்க்கும்போது உங்கள் மனதில்  தோன்றும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். “இப்படம் சமூகத்திற்கான லாபம்”

இவ்வாறு தன்ஷிகா கூறினார்.

Read previous post:
0a1b
Mission Mangal opens to the biggest advance booking of this year

Akshay Kumar, Fox Star Studios’ and Hope Productions Mission Mangal is racing towards a bumper advance booking from audiences across

Close