கும்கி 2 – விமர்சனம்
நடிப்பு: மதி, ஷ்ரிதா ராவ், ஆண்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பெராடி, சூசன் ஜார்ஜ், ஸ்ரீநாத் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: பிரபு சாலமன்
ஒளிப்பதிவு: எம்.சுகுமார்
படத்தொகுப்பு: புவன்
இசை: நிவாஸ் கே பிரசன்னா
கலை: விஜய் தென்னரசு
ஸ்டண்ட்: ஸ்டண் சிவா
தயாரிப்பு: தவல் காடா
வழங்கல்: ஜெயந்திலால் காடா
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
2012ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில், டி.இமான் இசையமைப்பில், எம்.சுகுமார் ஒளிப்பதிவில் வெளியானது ‘கும்கி’ திரைப்படம். ஒரு யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான பாசத்தைச் சித்தரித்த அந்த படம், காதல், பாடல்கள், நகைச்சுவை, எமோஷன் ஆகிய சிறந்த அம்சங்களை சரிவிகிதத்தில் கலந்து அருமையான கமர்ஷியல் கலைப்படமாக உருவாகி, ரசிகர்கள், விமர்சகர்கள், திரைத்துறையினர் என அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்பட்டு, மாபெரும் வெற்றிப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. அந்த சாதனை அளித்த ஊக்கத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ‘கும்கி 2’ திரைப்படத்தை படைத்தளித்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். இந்த ‘கும்கி 2’ எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

மலை கிராமம் ஒன்றில் சாராயம் காய்ச்சிப் பிழைக்கும் ஒரு பெண்மணியின் (சூசன் ஜார்ஜ்) மகன் பூமி. ஒருநாள் வழி தவறி வந்து, பள்ளத்துக்குள் விழுந்து, மேலே வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்த ஒரு யானைக்குட்டியைக் காப்பாற்றுகிறார் சிறுவன் பூமி. இதனால் அந்த யானைக்குட்டி சிறுவன் பூமி மீது அளவற்ற பிரியம் கொண்டு அவரையே சுற்றிச் சுற்றி வருகிறது. சிறுவன் பூமியும் அந்த யானைக்குட்டிக்கு ‘நீலா’ என்று பெயர் சூட்டி, அதனை தன் சகோதரன் போலவே பாவித்து அன்பு காட்டி வளர்த்து வருகிறார். நாளடைவில் நீலா பெரிய யானையாக வளர்ந்துவிட, சிறுவன் பூமியும் இளைஞராக (மதி) வளர்ந்து விடுகிறார்.
இந்நிலையில், நீலாவுக்கு பல லட்சங்களில் விலை பேசப்படுவதை அறிந்த பூமியின் அம்மா, மகனுக்குத் தெரியாமல் அதை விற்றுவிட்டு. அது காணாமல் போய்விட்டதாக மகனிடம் பொய் சொல்லிவிடுகிறார். நீலாவை வாங்கிச் சென்றவர்கள், காட்டு யானைகளைத் துரத்தப் பயன்படுத்தப்படும் ’கும்கி’ யானையாக மாற்ற அதற்கு பயிற்சி அளிக்கிறார்கள். தனது அன்புக்குரிய நீலா மாயமானதால் ஏங்கித் தவிக்கும் பூமி, தனது நண்பன் காளீஸுடன் (ஆண்ட்ரூஸ்) சேர்ந்து, காடு மேடெல்லாம் தேடி, மிகுந்த சிரமப்பட்டு அதைக் கண்டுபிடித்து தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.
இதனிடையே, எதிர்க்கட்சி வலிமை பெற்று வருவது கண்டு கலக்கமடையும் ஆளுங்கட்சித் தலைவர் (’கயல் பெரேரா) ஒரு சாமியாரின் தயவை நாட, அந்த சாமியாரோ, ”ஒரு யானையை ‘மிருகபலி’ கொடுத்து பூஜை செய்தால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்” என்கிறார். ஆளுங்கட்சித் தலைவர் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். அவரது ஆட்களிடம் நீலா சிக்கிக் கொள்கிறது. அடர்ந்த காட்டுக்குள் ’யானைபலி’ கொடுக்க ரகசியமாக ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதன்பிறகு என்ன நடந்தது? நீலாவைச் சூழ்ந்த ஆபத்தை பூமி அறிந்தாரா? நீலாவைக் காப்பாற்றினாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘கும்கி 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் பூமியாக மதி நடித்திருக்கிறார். அறிமுக நாயக நடிகர் போல் இல்லாமல், அனுபவம் வாய்ந்த நாயக நடிகர் போல் சிறப்பாக நடித்திருக்கிறார். யானையான நீலா மீது அன்பு செலுத்துவது, அது காணாமல் போன துயரத்தில் துடிப்பது, அது ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது அதை காப்பாற்ற ஆவேசம் கொள்வது என அனைத்து வகை உணர்வுகளையும் நேர்த்தியாக பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் மதி.
நாயகனுடன் படம் முழுக்க பயணிக்கும் அவரது நண்பர் காளீஸாக வரும் ஆண்ரூஸ், நாயகனின் அம்மாவாக வரும் சூசன் ஜார்ஜ், காட்டுக்குள் நாயகனுக்கு உதவும் சவுண்டு இஞ்சினியர் அனலியாக வரும் ஷ்ரிதா ராவ், நல்லவர் போல் நடிக்கும் இரக்கமற்ற வனத்துறை அதிகாரி பாரியாக வரும் அர்ஜுன் தாஸ், ஆளுகட்சித் தலைவராக வரும் ‘கயல்’ பெரேரா, அவரது அல்லக்கை சிக்கலாக வரும் ஆகாஷ், காவல்துறை அதிகாரியாக வரும் ஹரிஷ் பெராடி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் பிரபு சாலமன். காட்டுயிரிகளுக்கும், மனித உயிரிகளுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், யானை போன்ற காட்டுயிரிகளை நேசித்து பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை பிரபு சாலமன் அமைத்திருக்கிறார். இப்படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும்; அவர்களையும் இக்கருத்து சென்றடைய வேண்டும் என்பதற்காக காதலைத் தவிர்த்து, ரத்தம் கொப்பளிக்கும் ஸ்டண்ட் காட்சிகளைத் தவிர்த்து, கெட்டவர்களோடு யானை அதிரடியாக சண்டை போடும் காட்சிகளைச் சேர்த்து இப்படத்தை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றுள்ளார். நகைச்சுவைக் காட்சிகளையும், வசனங்களையும் இன்னும் சிறப்பாக வைத்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் வழக்கம் போல் காடு, மலை, அருவி உள்ளிட்ட இயற்கையின் அழகை தன் கேமராவில் அள்ளி வந்து கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப பாடலிசை அமைத்திருக்கிறார். அவரது பின்னணி இசை ஓ.கே ரகம்.
’கும்கி 2’ – குழந்தைகளோடு போய் பார்த்து மகிழலாம்!
ரேட்டிங்: 3/5
