குமார சம்பவம் – விமர்சனம்

நடிப்பு: குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம்.குமார், குமரவேல், பாலசரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, ஷிவா அரவிந்த், கௌதம் சுந்தர்ராஜன், அர்ஜெய், சார்லஸ் வினோத், விஜய் ஜாஸ்பர், சரவணன், கே.கோபால், டெலிபோன் ராஜ், சக்தி பாலாஜி கிருஷ்ணராஜ், வி.தாரணி, கவிதா, ஷரவண் ராமகிருஷ்ணன், யாஷ்வான் ரமேஷ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: பாலாஜி வேணுகோபால்
ஒளிப்பதிவு: ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி
படத்தொகுப்பு: ஜி.மதன்
இசை: அச்சு ராஜாமணி
’தயாரிப்பு: வீனஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட்’ கே.ஜே.கணேஷ்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
பண்டைய இந்தியாவில், கி.பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில், குப்தப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த பிரபல கவிஞரும், நாடக ஆசிரியருமான காளிதாசர் ‘குமார சம்பவம்’ என்ற பிரசித்தி பெற்ற காவியத்தைப் படைத்தார். அக்காவியத்தின் தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு, இயக்குநர் பாலாஜி வேணுகோபால், சொந்த கற்பனையில் முற்றிலும் மாறுபட்ட கதை எழுதி, விஜய் தொலைக்காட்சியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற நெடுந்தொடர் நடிகரான குமரன் தங்கராஜனை ஹீரோவாக வைத்து இந்த ‘குமார சம்பவம்’ திரைப்படத்தைப் படைத்திருக்கிறார். இப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்ற பெருங்கனவுடன் பல தயாரிப்பாளர்களைச் சந்தித்து கதை சொல்லி வருகிறார் நாயகன் குமரன் (குமரன் தங்கராஜன்). சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர், அம்மா, தங்கை மற்றும் தாத்தா சுப்பையா பிள்ளை (ஜி.எம்.குமார்) ஆகியோருடன் தாத்தா வீட்டின் கீழ்போர்ஷனில் வசித்து வருகிறார்.
தாத்தா சுப்பையா பிள்ளை தனது வீட்டின் மேல்போர்ஷனை சமூக செயற்பாட்டாளரான வரதராஜனுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். சமூக நலன் சார்ந்த பல பிரச்சனைகளுக்காக தனிமனிதராக தெருவில் இறங்கி போராடுவது, நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி பொதுநல வழக்குத் தொடுப்பது என்று தீவிர இயங்கிக் கொண்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர் வரதராஜனும், தாத்தா சுப்பையா பிள்ளையும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால் சுப்பையா பிள்ளையின் பேரன் குமரனுக்கு, ஆரம்பத்திலிருந்தே வரதராஜனைப் பிடிப்பதில்லை.
இந்நிலையில், பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லியும் காரியம் கைகூடாததால், தன் படத்தை தானே தயாரிக்க முடிவு செய்கிறார் குமரன். இதற்காக தாத்தாவிடம் வீட்டை விற்கச் சொல்லுகிறார். பேரனின் திரைப்பட இயக்குநர் கனவை நனவாக்க சொந்த வீட்டை விற்க முன்வரும் தாத்தா சுப்பையா பிள்ளை, அப்படி விற்று கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கை சமூக செயற்பாட்டாளர் வரதராஜனுக்குக் கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதி வைக்கிறார். இதனால் குமரன் கோபத்தில் கொந்தளிக்கிறார்.
இச்சூழலில், வரதராஜன், தான் வசித்து வந்த மேல்போர்ஷனில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரை கொலை செய்தது குமரனாகத் தான் இருக்கும் என்று சந்தேகிக்கும் போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையைத் துவக்குகிறார்கள். ஆனால் குமரனோ, வரதராஜன் தனது சமூக செயல்பாட்டால் பல பெரும்புள்ளிகளின் பகையைச் சம்பாதித்திருப்பதால், அத்தகைய பெரும் புள்ளிகளில் ஒருவர் தான் வரதராஜனை கொலை செய்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் நண்பர்களோடு சேர்ந்து சொந்த முயற்சியில் புலன்விசாரணையில் இறங்குகிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது? வரதராஜன் கொலை செய்யப்பட்டார் என்றால், உண்மையில் அவரை கொலை செய்தது யார்? அவர் கொலை செய்யப்படவில்லை என்றால் அவர் உயிரிழந்தது எப்படி? இறுதியில், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற குமரனின் கனவு நனவானதா? என்பன போன்ற கேள்விகளுக்கு பல திருப்பங்களுடன் நகைச்சுவை கலந்து விடை அளிக்கிறது ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதை நாயகனாக, திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்ற இலட்சியத்துடன் வலம் வரும் குமரனாக குமரன் தங்கராஜன் நடித்திருக்கிறார். டிவி தொடரில் நன்றாக நடித்து, நல்ல நடிகர் என்று ஏற்கெனவே பெயர் பெற்றிருக்கும் இவர், தன் முதல் படத்திலேயே அசால்டாக தன் கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். காதல், காமெடி, ஆக்சன் என அனைத்திலும் சிறப்பாக ஸ்கோர் செய்து, தமிழ்த் திரையுலகுக்கு தானொரு ‘நம்பிக்கை வரவு’ என நிரூபித்திருக்கிறார்.
நாயகி பவித்ராவாக பாயல் ராதாகிருஷ்ணா நடித்திருக்கிறார். பார்க்க அழகாக இருக்கிறார். அழகாக நடிக்கவும் செய்கிறார்.
நாயகனின் தாத்தா சுப்பையா பிள்ளையாக வரும் ஜி.எம்.குமார், சமூக செயற்பாட்டாளர் வரதராஜனாக வரும் குமரவேல் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
நாயகனின் நண்பன் சத்யாவாக வரும் பாலசரவணனும், போலி சி.பி.ஐ அதிகாரியாக வரும் வினோத் சாகரும் காமெடியில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.
திரைப்பட தயாரிப்பாளராக வரும் லிவிங்ஸ்டன், அமுதனாக வரும் வினோத் முன்னா, வக்கீலாக வரும் கௌதம் சுந்தர்ராஜன், அமர்நாத்தாக வரும் சார்லஸ் வினோத், அக்பர் பாஷாவாக வரும் விஜய் ஜாஸ்பர், அந்தோணி ஆசீர்வாதமாக வரும் சரவணன், நந்தினியாக வரும் வி.தாரணி, சரஸ்வதியாக வரும் கவிதா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் தத்தமது பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால். மெல்லுசான ஒரு கதையைத் தேர்வு செய்து, வித்தியாசமான, கலகலப்பான காட்சிகளுடன் கூடிய திரைக்கதையை வலுவாக அமைத்து, பொருத்தமான நடிப்புக் கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களை சாமர்த்தியமாக வேலை வாங்கி, படத்தை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். படத்தின் முதல் பாதியில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கதைக்களத்தையும் கதாபாத்திரங்களையும் நிறுவும் இயக்குநர், படத்தின் இரண்டாம் பாதியில் பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் பெரிய காமெடி டிராமாவையே அசத்தலாக நடத்திக் காட்டியிருக்கிறார். வரதராஜன் எப்படி இறந்தார் என்ற முடிச்சை அவிழ்க்கும் விதம் புதுமை; அட்டகாசம். பாராட்டுகள் பாலாஜி வேணுகோபால்.
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் இசையும், ஜி.மதனின் படத்தொகுப்பும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.
‘குமார சம்பவம்’ – பார்த்து, சிரித்து, மகிழத் தக்க ‘காமெடி சம்பவம்’
ரேட்டிங்: 3.5/5