கிஸ் – விமர்சனம்

நடிப்பு: கவின், ப்ரீத்தி அஸ்ரானி, விடிவி கணேஷ், ஆர்ஜே விஜய், பிரபு, தேவயானி, கௌசல்யா, ஷக்தி, ராவ் ரமேஷ் மற்றும் பலர்

இயக்கம்: சதீஷ் கிருஷ்ணன்

ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்

படத்தொகுப்பு: ஆர்.சி.பிரணவ்

இசை: ஜென் மார்ட்டின்

தயாரிப்பு: ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

முன்னொரு காலத்தில் ஆலாலகண்டன் என்றொரு அரசன். அவனுக்கு காதலே பிடிக்காது. அவனுடைய நாட்டில் யாரும் காதலிக்கக் கூடாது என்பது கண்டிப்பான சட்டம். அதையும் மீறி காதலிக்கும் ஒரு ஜோடியை, கம்பத்தில் கட்டி வைத்து, உயிரோடு தீ வைத்து எரிக்கிறான். தீயில் எரியும்போது அந்த காதலர்கள், “நீயும் ஒரு பெண்ணைக் காதலிப்பாய். அவளும் உன் கண் முன்னால் துடிதுடித்து இறப்பாள். இந்த பாவம் உன்னை ஏழேழு ஜென்மத்துக்கும் துரத்தும்” என்று சாபமிட்டு விட்டு சாம்பலாகி விடுகிறார்கள். இது குறித்து அக்காலத்திலேயே ஒரு புத்தகம் எழுதப்படுகிறது.

அந்த பழங்காலத்துப் புத்தகம் தற்காலத்தில் நாயகன் கவின் கையில் தற்செயலாகக் கிடைக்கிறது. அது கைக்கு வந்த பிறகு, கவின் கண் எதிரே காதலர்கள் யாராவது கிஸ் அடித்தால், அவர்களது வருங்கால வாழ்க்கையில் நடக்கப்போகும் துயரமான விபரீதங்கள் கவினுக்கு காட்சிகளாக முன்கூட்டியே வந்து போகின்றன. இதனால் காதலே பிடிக்காமல் போகிறது கவினுக்கு.

இப்படிப்பட்ட கவின் மீது நாயகி ப்ரீத்தி அஸ்ரானிக்கு காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் ப்ரீத்தி அஸ்ரானி மீது கவினுக்கும் காதல் வருகிறது. அதை அவர் வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையில், திடீரென்று ஒருநாள் கவினுக்கு முத்தம் கொடுத்து விடுகிறார் ப்ரீத்தி அஸ்ரானி. உடனே அவர்களது எதிர்கால விபரீதங்கள் கவினுக்கு காட்சியாக வந்து போகின்றன. அதனால் அவர் ப்ரீத்தி அஸ்ரானியை விட்டு விலகுகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? நாயகனும் நாயகியும் மீண்டும் இணைந்தார்களா? அல்லது நிரந்தரமாகவே பிரிந்துவிட்டார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘கிஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக கவின் நடித்திருக்கிறார். காதலை வெறுப்பது, பின்னர் தனக்குள்ளே காதல் வயப்படுவது, இருந்தும் தான் காதலிக்கும் பெண்ணை நிராகரிக்க வேண்டிய நிலையில் இருப்பது ஆகிய மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வலிமையான கதாபாத்திரத்தை ஏற்று எல்லாவற்றையும் நிறைவாகச் செய்திருக்கிறார் கவின்.

நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார். அவருக்கும் அழுத்தமான வேடம். அதை சரியாகச் செய்திருக்கிறார். அழகும் இளமையும் ததும்ப நடித்து ரசிகர்களை ஈர்க்கிறார்.

நாயகனின் நண்பனாக வரும் ஆர்ஜே விஜய்யும், ஆர்ஜே விஜய்யின் அப்பாவாக வரும் விடிவி கணேஷும் ஆங்காங்கே வாய்விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

நாயகனின் அப்பாவாக வரும் ராவ் ரமேஷ், அம்மாவாக வரும் தேவயானி, சிறப்புத் தோற்றத்தில் வரும் பிரபு, கெளசல்யா உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

நடன இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் சதீஷ் கிருஷ்ணன் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். மாறுபட்ட கதை, இளமை ததும்பும் திரைக்கதை ஆகியவற்றோடு நல்ல துவக்கத்துடன் இயக்குநராய் களமிறங்கியிருக்கிறார். தலைப்பு ‘கிஸ்’ என்றிருந்தாலும், துளியும் ஆபாசமில்லாமல் ரசிக்கும்படியாக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார்.

ஜென் மார்ட்டினின் இசை, ஹரீஷ் கண்ணணின் ஒளிப்பதிவு, ஆர்.சி.பிரணவின் படத்தொகுப்பு உள்ளிட்ட நேர்த்தியான தொழில் நுட்பங்கள் படத்துக்கு பலம்.

‘கிஸ்’ – ரசனையான, வித்தியாசமான காதல் படம்!

ரேட்டிங்: 3/5.