தள்ளிப் போகிறது ரஜினியின் ‘காலா’ ரிலீஸ்!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு லைகா நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளதால், அந்நிறுவன்ம் வெளியிட உள்ள ரஜினியின் ‘காலா’ திரைப்படம் வருகிற (ஏப்ரல்) 27ஆம் தேதி வெளியாகாது என தெரிகிறது.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை புதிய படங்களை வெளியிடுவதில்லை என்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

“நாங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்திருக்கிறோம். அவர்களுடைய கோரிக்கைகளுக்கு முழுவதுமாக ஆதரவளிக்கிறோம். இந்த அமைப்பு சீரடையும் வரை, நாங்களும் அவர்களுடன் இணக்கமாக உள்ளோம்” என லைகா நிறுவனம் ட்விட்டரில் கூறியுள்ளது.

எனவே, திட்டமிட்டபடி வருகிற (ஏப்ரல்) 27 ஆம் தேதி ரஜினியின் ‘காலா’ ரிலீஸாவது சிக்கல் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.. காரணம், போராட்டம் முடிந்த பிறகு, ஏற்கெனவே தணிக்கைச் சான்றிதழ் வாங்கிய படங்களுக்குத் தான் வெளியீட்டில் முன்னுரிமை என தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து உள்ளதால், இன்னும் தணிக்கைக்கு அனுப்பப்படாத ‘காலா’ ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் என்கிறது அது.