இங்க நான் தான் கிங்கு – விமர்சனம்

நடிப்பு: சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ் காந்த், சுவாமிநாதன், மாறன், சேஷு, மனோபாலா, கூல் சுரேஷ் மற்றும் பலர்

இயக்கம்: ஆனந்த் நாராயண்

ஒளிப்பதிவு: ஓம் நாராயண்

படத்தொகுப்பு: எம்.தியாகராஜன்

இசை: டி.இமான்

தயாரிப்பு: சுஷ்மிதா அன்புச்செழியன்

வழங்குபவர்: ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ ஜி.என்.அன்புச்செழியன்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

”கொடுமை… கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்கே ரெண்டு கொடுமை கூத்தாடுச்சாம்…” என்ற சொலவடையை கேட்டிருக்கிறீர்களா? அதுபோல, சில லட்சம் கடன் வைத்திருக்கும் நீங்கள், ஒரு பணக்காரக் குடும்பத்துப் பெண்ணை மணந்து, அவரிடமிருந்து வரதட்சணையாகப் பணம் பெற்று இந்த கடனை அடைக்கலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் திருமணத்துக்குப் பிறகு தான் உங்களுக்குத் தெரிய வருகிறது… அந்த பணக்கார குடும்பம் ஏற்கெனவே பல கோடி கடன் பெற்று திவாலாகிக் கிடக்கிறது என்று! எப்படி இருக்கும் உங்களுக்கு! இதைக் கேட்கிற மற்றவர்களுக்கு எப்படி இருக்கும்! சிரிக்க மாட்டார்களா? இது தான் ‘இங்க நான் தான் கிங்கு’ நகைச்சுவைத் திரைப்படத்தின் ‘பேசிக் ஸ்டோரி’!

“ஏழு கழுதை வயசாகியும் இன்னுமா கல்யாணம் ஆகலே?” என்று கேட்பார்களே, அது நாயகன் வெற்றிவேலுக்கு (சந்தானம்) நூறு சதவிகிதம் பொருந்தும். ஆதரவற்றவரான அவருக்கு, 34 வயதாகியும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. திருமணத்துக்குப் பெண் தேடி அலைகிறார். அமையவில்லை. சென்னையில் சொந்த வீடு இருந்தால் தான் பெண் கிடைக்கும் என்ற நிலையில்,  25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஃபிளாட் வாங்குகிறார். தன்னை மணந்துகொள்ள பெண்ணும், தன் கடனை அடைக்க 25 லட்சம் ரூபாய் வரதட்சணையும் கொடுக்கக் கூடிய ஒரு பணக்கார குடும்பம் சிக்காதா என்று தேடுகிறார். சிக்கவில்லை.

தனது நண்பன் அமல்ராஜ் (விவேக் பிரசன்னா) நடத்தும் திருமணத் தகவல் மையத்திலேயே வேலைக்கு சேருகிறார் வெற்றிவேல். அப்போது கல்யாணத் தரகர் (மனோபாலா), ரத்னபுரி ஜமீன்தார் விஜயக்குமார் (தம்பி ராமையா) தன் மகள் தேன்மொழிக்கு (பிரியாலயா) மாப்பிள்ளை தேடுவது பற்றி சொல்கிறார். தன் கடனை அடைக்க கடவுள் வழி காட்டிவிட்டதாக ஆனந்தமடையும் வெற்றிவேல், உடனடியாக ஜமீன் மகளான தேன்மொழியைப் பெண் பார்த்து, பேசி, திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்துக்குப் பிறகுதான் அவருக்குத் தெரிய வருகிறது, அந்த ஜமீன்  குடும்பம் ஏற்கெனவே ரூ.10 கோடி கடன்பட்டு திவாலாகிக் கிடக்கிறது என்று! அதிர்ச்சி அடைகிறார்.

ஜமீன் விஜயக்குமார் தன் கடனுக்காக தன்னுடைய வீடு, அதில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் பிரித்துக் கொடுத்துவிடுகிறார். பின்னர் மகள் தேன்மொழியோடு ஜமீனும், அவரது மகன் சின்ன ஜமீன் பாலாவும் (பாலசரவணன் (வெற்றிவேலின் சென்னை வீட்டுக்கு ‘வீட்டோடு மாமனார் – மச்சானாக’ வந்து குடியேறிவிடுகிறார்கள் இப்போது மாமனாரையும், மச்சானையும் சேர்த்து பராமரிக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார் வெற்றிவேல்.

இந்த நிலையில், வெடிகுண்டு வைப்பதற்காக தீவிரவாத கும்பல் ஒன்று சென்னைக்குள் நுழைகிறது. அக்குழு மூலம் வெற்றிவேலுக்கு ரூ.50 லட்சம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.

 வெற்றிவேலுக்கு அந்த ரூ.50 லட்சம் கிடைத்ததா? தீவிரவாதிகள் திட்டமிட்டபடி, சென்னையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு நகைச்சுவையாக விடை அளிக்கிறது ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் வெற்றிவேலாக வரும் சந்தானம் தனது வழக்கமான நடிப்பாலும், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ‘ஒன்லைனர்’ காமெடி வசனங்களாலும் மொத்தப் படத்தையும் ஒற்றை ஆளாக அசால்ட்டாக தோளில் தாங்கியிருக்கிறார்.  காமெடியோடு, காதல், நடனம், ஆக்‌ஷன் என எல்லாவற்றையும் நிறைவாகச் செய்து கமர்ஷியல் கதாநாயகனாக ஜொலிக்கிறார். மாமனாராக வரும் தம்பி ராமையா, மச்சினனாக வரும் பால சரவணன் ஆகியோரிடம் மாட்டிக்கொண்டு அவர் முழிக்கும் இடங்களில் உடல்மொழியால் கலகலப்பூட்டுகிறார்.

நாயகி தேன்மொழியாக அறிமுக நடிகை பிரியாலயா நடித்திருக்கிறார்.  அழகாக இருக்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப, கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நடனம் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார்.

ஜமீன் விஜயக்குமாராக வரும் தம்பி ராமையா, அவரது மகன் சின்ன ஜமீனாக வரும் பால சரவணன், நாயகனின் நண்பன் அமல்ராஜாக வரும் விவேக் பிரசன்னா, கல்யாண தரகராக வரும் மனோபாலா, பாடி பல்ராமாக வரும் முனிஷ் காந்த், ரோலக்ஸாக வரும் லொள்ளுசபா மாறன், வினோத்தாக வரும் சேஷூ, சுவாமியாக வரும் சுவாமிநாதன் உள்ளிட்டோர் தங்களது தேர்ந்த நடிப்பால் கவனம் பெறுகின்றனர்.

எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தனின் எழுத்தும், இயக்குநர் ஆனந்த் நாராயணின் இயக்கமும் படத்தை போரடிக்காமல் கலகலப்பாக, நகைச்சுவையாக நகர்த்திச் சென்றுள்ளன. வரன் தேடி அலைவது, ஜமீன் வீடு பில்டப், அதையொட்டி நிகழும் ஏமாற்றம், தொடர்ந்து சில திருப்பங்கள் என படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் விரைந்து இடைவேளையைத் தொடுகிறது. இரண்டாம் பாதியும் வெவ்வேறு காமெடி குழுக்களின் காமெடி கலாட்டாக்களால் நிறைந்திருக்கிறது. அந்த காமெடிகளும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன.

டி.இமான் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் ‘குலுக்கு குலுக்கு’ பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை ஓ.கே ரகம்.

ஓம் நாராயணின் ஒளிப்பதிவும், எம்.தியாகராஜனின் படத்தொகுப்பும் தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.

‘இங்க நான் தான் கிங்கு’ – சிரிப்புக்கு நாங்க கியாரண்டி! நம்பிப் போய் பார்த்து, சிரித்து, மகிழலாம்!