இட்லி கடை – விமர்சனம்

நடிப்பு: தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு, கீதா கைலாசம் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: தனுஷ்

ஒளிப்பதிவு: கிரண் கௌஷிக்

படத்தொகுப்பு: ஜி.கே.பிரசன்னா

ஆக்ஷன்: பீட்டர் ஹெய்ன்

கலை: ஜாக்கி

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

தயாரிப்பு: ’டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் & ’வுண்டர்பார் ஃபிலிம்ஸ் (பி) லிட்’ தனுஷ்

தமிழக வெளியீடு: ’ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இன்பன் உதயநிதி

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹமது – சதீஷ் எய்ம்

தனது தனித்துவமான நடிப்பால் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல, பாலிவுட், ஹாலிவுட் போன்ற திரையுலகுகளிலும் பிரகாசித்துக் கொண்டிருப்பதோடு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ள தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம்; ஏற்கெனவே ‘பவர் பாண்டி’, ‘ராயன்’, ‘ நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய திரைப்படங்களை எழுதி, இயக்கி, திறமையான இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கும் தனுஷ் இயக்கியுள்ள நான்காவது திரைப்படம்; கவனம் ஈர்க்கும் தலைப்பு, அட்டகாசமான பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ள திரைப்படம் போன்ற காரணங்களால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘இட்லி கடை’. தற்போது திரைக்கு வந்திருக்கும் இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

இப்படக்கதை பெருமளவு தேனி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் என்ற அழகிய சிற்றூரிலும், சிறிதளவு தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கிலும் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
சங்கராபுரத்தில் இட்லி கடை நடத்தி வருகிறார், அகிம்சை மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட எளிய மனிதரான சிவனேசன் (ராஜ்கிரண்). மேலே கீற்றுக் கூரை, கீழே இரண்டு மரபெஞ்சு இவற்றால் ஆனது தான் அவர் உயிருக்கு உயிராக நேசிக்கும் எளிமையான அவரது இட்லி கடை; என்றாலும் அது அந்த ஊரிலும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களிலும் பிரசித்தி பெற்ற இட்லி கடையாக விளங்குகிறது. காரணம், கிரைண்டரைப் பயன்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி ஆட்டுரலில் அரைத்த மாவில் சுட்ட இட்லி, மிக்ஸியைப் பயன்படுத்தாமல் அம்மியில் அரைத்த சட்னி மற்றும் மசாலா, வாசனையால் ஊரையே அழைக்கும் ருசியான சாம்பார் இவற்றை சிவனேசன் தன் கைப்பட பக்குவமாகத் தயாரித்து, கனிவுடன் சப்ளை செய்து வருவது தான். தனது கடை வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியில் மனநிறைவு காணும் அவருக்கு அவருடைய மனைவியும் (கீதா கைலாசம்), பள்ளியில் படிக்கும் மகன் முருகனும் தொழிலில் ஒத்தாசையாக இருந்து வருகிறார்கள்.

சிறுவயதிலிருந்தே அப்பா சமைப்பதைப் பார்த்து வளர்ந்த முருகன் (தனுஷ்), கல்லூரியில் கேட்டரிங் படிப்பு படித்து முடிக்கிறார். மகன் சொந்த ஊரில் தன்னுடனே இருந்து, தன்னுடைய தொழிலையே செய்துவர வேண்டும் என்று சிவனேசன் விரும்புகிறார். ஆனால் அவரது விருப்பத்துக்கு மாறாக, முருகன் வாதாடி, சம்மதம் பெற்று, தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் செல்கிறார். அங்கு பெரும் செல்வந்தரான விஷ்ணு வர்தனுக்கு (சத்யராஜ்) சொந்தமான ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாரண்டில் வேலைக்குச் சேருகிறார். அவரது திறமைக்கு பாராட்டுகளும், விரைவிலேயே ‘சீனியர் செஃப்’ என்ற பதவி உயர்வும் கிடைக்கின்றன.

ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாரண்டின் உரிமையாளர் விஷ்ணு வர்தனின் மகள் மீரா (ஷாலினி பாண்டே), தங்கள் ரெஸ்டாரண்டின் சீனியர் செஃப் முருகன் மீது காதல் கொள்கிறார். அந்த காதலை, இனம் புரியாத சில தயக்கங்களுடன் முருகனும் ஏற்றுக்கொள்கிறார். விஷ்ணு வர்தனின் ‘குட் புக்’கில் ஏற்கெனவே முருகன் இடம் பெற்றிருப்பதால், அவர் மீரா – முருகன் காதலுக்கும், திருமணத்துக்கும் மகிழ்ச்சியுடன் ஓ.கே சொல்லி விடுகிறார். ஆனால், அவரது மகனும் ஊதாரியாய் திரிபவருமான அஸ்வின் (அருண் விஜய்) இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவருக்கு முருகனை சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒரு வேலைக்காரனுக்கு தன் தங்கையை திருமணம் செய்து கொடுப்பதா? கூடாது என்று முரண்டு பிடிக்கும் அஸ்வினிடம், “முருகன் திறமையானவன். அவன் உனக்கு மைத்துனனாக இருந்தால், எதிர்காலத்தில் நம் தொழிலைத் தொடர்ந்து திறம்பட செய்ய உனக்கு அவன் பக்கபலமாக இருப்பான்” என்கிற ரீதியில் விஷ்ணு வர்தன் விளக்கிய பின் அஸ்வினும் சம்மதம் தெரிவிக்கிறார்.

மகள் திருமணத்துக்கு தேதி குறிக்கும் விஷ்ணு வர்தன், உலக அளவில் பிரசித்தி பெற்ற பெரிய புள்ளிகளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவரும் நிலையில், முருகனின் சொந்த ஊரில் அவரது அப்பா சிவனேசன் இறந்துவிட்ட தகவல் கிடைக்கிறது. முருகன் அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறார். உடனடியாக புறப்பட்டு சங்கராபுரம் வருகிறார். துயரத்துடன் அப்பாவுக்கு இறுதிச்சடங்குகள் செய்கிறார். அப்பா இறந்தது முதல் புத்தி பேதலித்தது போல் இருந்த அம்மா மறுநாளே இறந்துபோகிறார்.

அடி மேல் அடி விழுந்ததால் இடிந்துபோயிருக்கும் முருகனுக்கு, பள்ளியில் படிக்கும்போது நெருங்கிய தோழியாக இருந்த கயல் (நித்யா மேனன்) ஆதரவாக இருக்கிறார். பெற்றோர் வாழ்ந்த வீட்டையும், அப்பா நடத்திய இட்லி கடையையும் கை கழுவிவிட்டுச் செல்ல மனமில்லாமல் முருகன் தவித்துக் கொண்டிருக்கையில், காதலி மீராவும் அவரது அப்பா விஷ்ணு வர்தனும் செல்பேசியில் தொடர்பு கொண்டு, குறித்த நாளில் தவறாமல் திருமணம் நடக்க வேண்டும் என்று நெருக்குகிறார்கள். இனி சொந்த ஊரில் அப்பாவின் இட்லி கடையைத் தொடர்ந்து நடத்துவது என்று தீர்க்கமாய் முடிவெடுக்கும் முருகன், மீராவுடனான திருமணம் வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறிவிடுகிறார்.

திருமணத்தை நிறுத்தியதன் மூலம் தன் அப்பாவுக்கும், தங்கைக்கும் முருகன் பெருத்த அவமானம் ஏற்படுத்திவிட்டதாக ஆவேசப்படும் அஸ்வின், முருகனைப் பழி வாங்கும் வெறியுடன், கைத்துப்பாக்கி மற்றும் பவுன்சர்கள் சகிதம் முருகனைத் தேடி அவரது ஊருக்கு வருகிறார்.

தீராப்பகை கொண்ட அஸ்வினுக்கும், அப்பா கற்றுக்கொடுத்த அகிம்சை மீது நம்பிக்கை கொண்ட முருகனுக்கும் இடையே சங்கராபுரத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் என்ன? அவற்றின் விளைவுகள் என்ன? முருகன் மீது மீரா கொண்ட காதல் என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு புத்தம் புது அணுகுமுறையுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘இட்லி கடை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் முருகனாக தனுஷ் நடித்திருக்கிறார். எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே தத்ரூபமாக மாறி, சிறந்த நடிப்பை தனித்தன்மையோடு வெளிப்படுத்துவதில் வல்லவர் என்ற பெயரை ஏற்கெனவே பெற்றுள்ள தனுஷ், இந்த படத்திலும் அந்த பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ளார். மாணவப் பருவத்தில் ஒரு கெட்டப், பாங்காக்கில் ஒரு கெட்டப், இட்லி கடை உரிமையாளராக அப்பா பாணியில் ஒரு கெட்டப் என மூன்று காலகட்டங்களில் மூன்றுவித தோற்றங்களில் வந்து கலக்கியிருக்கிறார். சமூக ஏணியில் ஏறி சரசரவென உயரே செல்ல வேண்டும் என்ற இக்கால இளைஞருக்குரிய வேட்கையில் அப்பாவிடம் முதலில் வாதம் செய்யும்போதும் சரி, அப்பாவின் மரணத்துக்குப் பின் அவருடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சொந்த ஊரிலேயே இருந்துவிட முடிவு செய்யும்போதும் சரி, தனது கதாபாத்திரத்தை நெருடல் இல்லாமல் நடிப்பால் நியாயப்படுத்தியிருக்கிறார் தனுஷ். பணக்காரப் பெண்ணான மீராவை சிறு சங்கடத்துடன் காதலிப்பது, கிராமத்துப் பெண்ணான கயலை மனம் நிறைய காதலிப்பது என இரண்டு காதல்களிலும் உள்ள வித்தியாசத்தை நடிப்பால் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அஸ்வின் வெறிகொண்டு தாக்கும்போது, ”அகிம்சையே சிறந்த ஆயுதம்” என்ற அப்பாவின் வாழ்க்கை நெறியைப் பின்பற்றி பொறுமையாக இருப்பதும், பின்னர் “பொறுமைக்கும் எல்லை உண்டு” என்ற முதுமொழிக்கேற்ப பொங்கி எழுந்து பொளந்து கட்டுவதும் ரசிப்புக்கு உரியது. இப்படி காட்சிக்குக் காட்சி வித்தியாசமான நடிப்பை வழங்கி, பல இடங்களில் அப்ளாஸ் அள்ளுகிறார் தனுஷ்.

கதையின் நாயகி கயலாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இவருக்கும், தனுஷுக்குமான கெமிஸ்ட்ரி ‘திருச்சிற்றம்பலம்’ வெற்றிப்படத்தில் நன்றாக வொர்க் அவுட் ஆனதைப் போல இந்தப்படத்திலும் சிறப்பாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. தனுஷ் தன் அப்பா பெயரிலான இட்லி கடையைத் தொடங்கவும், நடத்தவும் உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தை ரொம்ப இயல்பாக கையாண்டிருக்கும் நித்யா மேனன், சின்னதாய் சிரிப்பது, மெல்லுசாய் கோபிப்பது, ஜாடையாய் காதலிப்பது என்பன போன்ற க்யூட் ரியாக்‌ஷன்கள் மூலம் நிறைய ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகனின் அப்பாவாக, இட்லி கடை நடத்தும் சிவனேசனாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார். இவர் படத்தில் வருவது சிறிது நேரம் தான்; என்றாலும், கதைக்கு பலமான அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் வலிமையான கேரக்டரில் அழுத்தமாக நடித்திருக்கிறார். அவரது தோற்றத்தில் அல்லது அசைவில் அல்லது பேச்சில் என ஏதோ ஒன்றில் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தந்தையை கண்டு புல்லரிப்பது நிச்சயம்.

ஈகோ தலைக்கேறிய பணக்கார வீட்டுப்பிள்ளையாக, வில்லன் அஸ்வினாக அருண் விஜய் நடித்திருக்கிறார். கதையை நகர்த்திச் செல்லும் தனது எதிர்மறை கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து, ஸ்டைலிஷ் வில்லனாக வந்து, நாயகனுடன் ஆக்ரோஷமாக மோதி பிரமாதப்படுத்தியிருக்கிறார். படம் முடியும் தறுவாயில் அவருக்கு அகிம்சாவாதி கொடுக்கும் நூதன தண்டனை எதிர்பாராதது; சுவாரஸ்யமானது.

பாங்காக் ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் விஷ்ணு வர்தனாக வரும் சத்யராஜ், அவரது மகள் மீராவாக வரும் ஷாலினி பாண்டே, இவர்களது மேனேஜர் ராமராஜனாக வரும் இளவரசு, நாயகனின் அம்மாவாக வரும் கீதா கைலாசம், கிராமத்து புரோட்டா கடைக்காரராக வரும் சமுத்திரக்கனி, போலீசாக வரும் பார்த்திபன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருப்பதோடு, இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தனுஷ். முந்தைய படங்களைக் காட்டிலும் இந்த படத்தில் இயக்குநருக்கான திறமை மேலும் பட்டை தீட்டப்பட்டிருக்கிறது என்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் பளிச்சிடுகிறது. படம் ஆரம்பித்த 20 நிமிடங்களுக்குள் சிவனேசன் பற்றியும், அவர் உயிரென நேசிக்கும் அவரது இட்லி கடை பற்றியும், கதை பயணிக்கவிருக்கும் திசை பற்றியும் ஷார்ப்பாகவும், ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகவும் விவரித்து சபாஷ் பெறுகிறார் இயக்குநர் தனுஷ். அதன்பிறகு கதைக்குள் நம்மையும் எளிதாக நடத்திக்கொண்டு போகிறார். தன்னுடைய கதாபாத்திரத்தைப் போலவே ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிரத்தையுடன் அழகாகவும், அர்த்தம் உள்ளதாகவும் வடிவமைத்திருக்கிறார். அப்பா – மகன் சென்டிமென்ட், நாயகனின் வளர்ச்சி, சத்யராஜ் குடும்பத்துடனான நாயகனின் உறவு என படத்தின் முதல்பாதி எமோஷனலாகவும் விறுவிறுப்பாகவும் செல்லும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். இரண்டாம் பாதியை நாயகனுக்கும் வில்லனுக்குமான தொடர் மோதல்களாக பரபரவென நகர்த்திச் சென்றுள்ளார். அகிம்சை தத்துவத்தின் மகிமையை இடையில் புகுத்தி, நல்ல விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறார். தானொரு தரமான, திறமையான இயக்குநர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் தனுஷுக்கு நம் பாராட்டுகள்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பட்டிதொட்டி எங்கும் ஹிட். பின்னணி இசை, உயிரோட்டம் உள்ள காட்சிகளுக்கு மேலும் உரமேற்றுகிறது.

கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவு, ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பு, பீட்டர் ஹெய்னின் சண்டை அமைப்பு, ஜாக்கியின் கலை இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் உயர்வான தரத்துக்கும், இயக்குநரின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘இட்லி கடை’ – ’பூஜா’ விடுமுறை நாட்களுக்கு ஏற்ற அருமையான குடும்பப் படம்! குடும்பத்துடன் சென்று குதூகலமாய் பார்த்து மகிழலாம்!

ரேட்டிங்: 4.25/5