தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக விளங்க அடித்தளம் இட்டவர்!

1966ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்களில் கோபி செட்டிப்பாளையத்தில் காலை 9 மணி துவங்கி அடுத்த நாள் காலை 8 மணி வரை, ஒரு நாள் சுற்றுப் பயணத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை 27.

இன்றைக்கு நடிகர் ஒருவரது ஒரு நாள் நிகழ்ச்சியை துதி பாடும் இளவல் கூட்டம் இதனை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

கோபி நகரில் தேர்தல் நிதியளிக்கும் கழகப் பொதுக்கூட்டமும், ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தத் தனிக் கூட்டமும் அன்றைய சூழலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, திமுக எதிர்கட்சியாக இருந்த சூழல். ஆளும் அரசை பகைத்துக் கொண்டு அண்ணாவின் கூட்டத்திற்கு இடம் தர எவரும் வர முன் வரவில்லை.

ஆனாலும் உடன்பிறப்புகள் எதற்கும் அசராதவர்கள், அஞ்சாதவர்கள். குறிப்பாக ஆங்கில உரைக்கான தனிக் கூட்டத்தினை ஏற்பாடு செய்து முடிக்க வேண்டும் என்று சிரமேற்கொண்டு அதனை நிகழ்த்திக் காட்டியவர், சிந்தனை செம்மல் வழக்குரைஞர் காலம் சென்ற கு.ச.ஆனந்தன் ஐயா அவர்கள்.

இடதுசாரி சிந்தனையுள்ள‌ “2 1/4 திரு பழனியப்பன்” அவர்கள் தன் வெற்றிடத்தைத் திடலாக பயன்படுத்த அனுமதி தந்த சூழலில், மிகச் சிறப்பாக அண்ணா அவர்களின் சிறப்பு தனி அரங்க கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒரு சில மணித் துளிகளுக்கு முன்பு கூட்ட அமைப்பாளர் கு.ச.ஆனந்தன் அவர்களிடம் “என்ன தலைப்பு” என அண்ணா கேட்டுள்ளார். அவர் “குடியாட்சி” என்று குறிப்பிட்ட உடன், அன்றைய மேடையில் ஆங்கிலத்தில் “We have got democratic apparatus not democratic sprit” (நாம் குடியாட்சி கருவிகளைத் தான் வைத்துக் கொண்டிருக்கிறோம், குடியரசின் உணர்வை நாம் பெறவில்லை) என்று தொடங்கி ஒன்றரை மணி நேரம் “கேட்டார்ப் பிணிக்கும் தகைமை” வாய்ந்த பேரூரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தி உள்ளார் அண்ணா.

பின்னாளில் 1967-ல் ஆட்சிக் கட்டிலில் ஏறிய அண்ணா, இந்தியாவிற்கு முன்னோடியாக விளங்கக் கூடிய வகையில் தமிழ்நாட்டினை மாற்றிக் காட்டிடும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து தந்தார். அத்தோடு கலைஞர் என்னும் தளபதியை நமக்கு விட்டுச் சென்றார்.

திராவிட தலைவர்களை படிக்காதவர்கள் போலச் சித்தரிப்பதில் பல ஆண்டுகளாக ஆங்கில சஞ்சிகைகள் துவங்கி இன்றைய சமூக வலைதளங்கள் வரை இன எதிரிகளின் சூழ்ச்சிகள் தொடர்கின்றது.
அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான், ”நேரம் கிடைக்கும்போது அண்ணாவின் பாராளுமன்ற ஆங்கில உரைகளை வாசித்துப் பாருங்கள். மேலும், திராவிட தலைவர்கள் எழுதிய உலக அரசியல் புத்தகங்களை வாசிக்க வேண்டுகிறேன். அத்தனை செறிவு நிறைந்தவை. இவைதான் இன்றைக்கும் திமுக என்னும் பேரியக்கத்தை கட்டிக் காத்து அரண் போல் நிற்க வைத்துள்ளது.

“கல்வி ஒன்றே சமூக பொருளாதார விடுதலை” என்று நம்பியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். இன்றைக்கு துவக்கக் கல்வி முதல் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வரை தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக விளங்க அடித்தளம் இட்டவர்.

இன்று செப்டம்பர் 15, பேரறிஞர் அவர்கள் பிறந்த நாள்.
வாழ்க அவரது புகழ்.
வெல்க திராவிடம்! வாழ்க தமிழ்நாடு!

(Ref: மலர்க மாநில சுயாட்சி, தொகுதி 1, கு. ச. ஆனந்தன். தங்கம் பதிப்பகம், கோவை.)

-பேராசிரியர் சுதாகர் பிச்சைமுத்து,
ஸ்காட்லாந்து, பிரிட்டன்
செப்டம்பர் 15, 2025

(Courtesy: facebook.com/sudhagar.pitchaimuthu)