இயற்கை விவசாயத்தின் அவசியத்தை சொல்லும் ‘குகன்’ 22ஆம் தேதி ரிலீஸ்!

கிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் ‘குகன்’ என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அழகப்பன்.சி. இவர் தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற ‘வண்ணத்துப்பூச்சி’ படத்தை இயக்கியவர்.

‘வண்ணத்துப்பூச்சி’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இளைஞர்களின் மன ஓட்டத்தை அறிந்து கலகலப்பாக எடுக்கப்பட்ட படம்தான் ‘குகன்’.

கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டர் ரகுராம், கலா குடும்பத்திலிருந்து அறிமுகமாகிறார் அரவிந்த் கலாதர். கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த நேத்ரா என்கிற சுஷ்மா அறிமுகமாகியுள்ளார். இவர்களின் யதார்த்தமான காதல் பின்னணியில் இன்றைய முக்கியத் தேவையான இயற்கை விவசாயத்தின் அவசியத்தை கதைக்களமாக வைத்து கதை சொல்லியுள்ளார் இயக்குனர்.

இதற்காகவே இயற்கை விவசாயத்தை தனது மூச்சாகக் கொண்டுள்ள திருநெல்வேலி ராஜா அய்யா அவர்களின் நூறு ஏக்கரில் அமைந்துள்ள இடத்திலும், இயற்கை சூழல்கொண்ட சிங்கத்தாகுறிச்சி என்ற இடத்திலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

மோகனப்பிரியா, ஓவியர் அர்ஸ் ஆகிய இருவரும் கதாநாயகனின் பெற்றோராக நடித்துள்ளனர். இதில் அர்ஸ் படத்திலும் ஓவியராகவே நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், பஞ்சு சுப்பு, சிங்கம் புலி நடித்துள்ளனர். மேலும் அருள்மணி, யுவான் சுவாங் நடிக்க, புதுமுகங்களாக நால்வர் அறிமுகம் ஆகின்றனர்.

வாலிப வயதில் உள்ள பிள்ளைகளை புரிந்துகொள்ளாத பெற்றோர்களுக்கு, பிள்ளைகள் தங்கள் உணர்வுகள், ஆசைகளை எடுத்துச்சொல்ல முற்படுவதும், அதை புரிந்துகொள்ளாத பெற்றோர் பிள்ளைகளை ரோட்டில் புரட்டிப் புரட்டி அடித்து துரத்துவதும் இன்றைய நிலைமை. இதிலிருந்து விடுபட்டு ஓடுகிற கதாநாயகனை கிராமம் அரவணைக்கிறது. அவனது திறமையை மதித்து கொண்டாடுகிறது. காதலும் அப்படியே ஊடாடி வர கதாநாயகன் இறுதியில் பெற்றோரிடம் செல்கிறானா, இல்லையா என்பதே படத்தின் கிளைமாக்ஸாக அமைகிறது.

இன்றைய பெண்கள் எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் பழகலாம், அது இன்றைய நாகரிகம்; அதை கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை எனும் புரட்சிகரமான பெண்ணாக சிறப்புத் தோற்றத்தில் கல்லூரிப் பெண்ணே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பழனிபாரதி, அண்ணாமலை, அழகப்பன்.சி ஆகியோர் பாடல்களை எழுத, கானா பாலா, அனந்து, ஸ்ரீஷா, ஸ்ரீநிஷா ஆகியோர் பாடல்களைப் பாட, குரு – கல்யாண் இரட்டையர் இசையமைத்துள்ளனர்.

பி.அருண்செலவன் ஒளிப்பதிவாளராக, ஜெய்சங்கர் படத்தொகுப்பாளராக, சங்கர் மற்றும் ஸ்ரீதர் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக நிகில். லைன் புரடியூசர் – ர.குணசீலன்.

திரைப்படத் தணிக்கை குழுவால் பாராட்டுப் பெற்று, அரசின் வரி விலக்கு பெற்று, ஏப்ரல் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘குகன்’.