ஃபிரீடம் – விமர்சனம்

நடிப்பு: எம்.சசிக்குமார், லிஜோமோல் ஜோஸ், மு.ராமசாமி, சுதேவ் நாயர், மாளவிகா அவினாஷ், சரவணன், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: சத்யசிவா
ஒளிப்பதிவு: என்.எஸ்.உதயகுமார்
படத்தொகுப்பு: ஸ்ரீகாந்த் என்.பி
இசை: ஜிப்ரான் வைபோதா
தயாரிப்பு: ’விஜய கணபதி பிக்சர்ஸ்’ பாண்டியன் பரசுராமன்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சிவா (எய்ம்)
1990களின் முற்பாதியில் நடந்த ஓர் உண்மைக் கதையில், சில புனைவுக் கதாபாத்திரங்களையும், சில புனைவு சம்பவங்களையும் சேர்த்து, வீரத்துடன், தீரத்துடன் ‘ஃபிரீடம்’ படத்தை அற்புதமாகப் படைத்தளித்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.
சிங்கள வெறி பிடித்த இலங்கை அரசின் சித்ரவதைகளுக்கு அஞ்சி, அந்நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவுக்கு வந்து அகதிகளாக தஞ்சம் அடைந்தார்கள் ஈழத் தமிழர்கள். அவர்களை இங்குள்ள இந்திய அரசும், அதிகார வர்க்கமும் எப்படி நடத்தியதாம்? என்ற கேள்வியை மறைமுகமாக எழுப்பி, அதற்கான பதிலாக துணிச்சலுடன் இப்படத்தை வழங்கியிருக்கிறது படக்குழு.
1991ஆம் ஆண்டு. சிங்கள ராணுவத்தினர், சிங்கள காவல்துறையினர், சிங்கள காடையர்கள் எனப்படும் குண்டர்கள் ஆகியோரின் கொலைவெறித் தாண்டவத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், ஏராளமான ஈழத்தமிழர்கள், இலங்கையிலிருந்து தப்பித்து, கள்ளத்தோணி மூலம் கடல் மார்க்கமாக குடும்பம் குடும்பமாக ராமேஸ்வரம் கடற்கரையில் வந்து இறங்குகிறார்கள். அவர்களில் ஒருவர் நாயகன் மாறன் (சசிக்குமார்).
மாறனின் நிறைமாத கர்ப்பிணி மனைவியான செல்வி (லிஜோமோல் ஜோஸ்) சில மாதங்களுக்கு முன்பே ராமேஸ்வரம் வந்து, மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அவருடன் மாறனும் சேர்ந்துகொள்ள, அகதிகள் முகாமில் உள்ள ஓர் ஓலைக்குடிசையில் வசிக்க ஆரம்பிக்கிறார்கள்.

சில தினங்களுக்குப் பின், தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு வரும் முன்னாள் இந்தியப் பிரதமர், கையில் மாலையுடன் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி நடத்தியத் தாக்குதலில் கொடூரமாக கொல்லப்படுகிறார். இச்சம்பவத்தில் முன்னாள் பிரதமரோடு அப்பெண்ணும் இறந்துவிட்டநிலையில், இதற்கு ஈழத்தில் இயங்கும் தீவிரவாத இயக்கம் தான் காரணம் என்ற முடிவுக்கு வருகிறது இந்திய அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு. மனித வெடிகுண்டுப் பெண்ணுடன் ஒற்றைக்கண் சிவராசன் இருக்கும் புகைப்படம் ஒன்றைக் கைப்பற்றியிருக்கும் இந்த புலனாய்வுக் குழு, இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்து, அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கும், இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல் குழுவிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறது. இது தொடர்பாக சந்தேகத்துக்குரிய அகதிகளைப் பிடித்து விசாரிக்க முடிவு செய்கிறது புலனாய்வுக் குழு.
மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடந்த நாளில் ஒரு பொது தொலைபேசியிலிருந்து ஈழத்துக்கு போன் செய்தார் என்பதாலும், தற்காப்புக்காக கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்பதாலும் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து மாறனையும், இதுபோல் வேறு சிலரையும், திருச்சி முகாமிலிருந்து (மு.ராமசாமி, ஆண்டனி, ‘பாய்ஸ்’ மணிகண்டன் உள்ளிட்ட) சிலரையும் பிடித்துக் கொண்டுவந்து, அரண், அகழி என மிகுந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட வேலூர் கோட்டைக்குள் இருக்கும் சிறப்பு சிறையில் அடைக்கிறார்கள்.
இந்த ஈழத்தமிழ் கைதிகளை விசாரணை என்ற பெயரில் கொடூரமாக சித்ரவதை செய்கிறார், தமிழரல்லாத சிறை உயர் அதிகாரி (சுதேவ் நாயர்). மண்டபம் உள்ளிட்ட வெவ்வேறு ஊர்களின் அகதிகள் முகாம்களில் இருந்து கிளம்பி வரும் செல்வி, அவரது மகள் உள்ளிட்ட கைதிகளின் குடும்பத்தினர் கூட அவர்களைப் பார்க்க முடியாதபடி கொடுமைப்படுத்துகிறார். சிறுமைப்படுத்துகிறார். இந்த வலியையும், வேதனையையும் தாங்க முடியாமல் ஓர் இளைஞரான ஓவியர் (‘பாஸ்’ மணிகண்டன்) சிறைக்குள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
இந்த ஈழத்தமிழர்களுக்கு உதவ முன்வருகிறார், மனித உரிமை செயல்பாட்டாளரான ஒரு பெண் வழக்கறிஞர் (மாளவிகா அவினேஷ்). அவரது அறிவுரையை ஏற்று, முதலமைச்சரின் கருணையைக் கோரி, அவருக்கு உருக்கமாக மனுக்களை எழுதி தபால் பெட்டியில் போடுகிறார்கள் ஈழத்தமிழ் கைதிகள். ஆனால் அந்த மனுக்களையெல்லாம் தபால் பெட்டியிலிருந்து எடுத்து எரித்து சாம்பலாக்கி விடுகிறார் கொடூரனான உயர் அதிகாரி. இவரை எதிர்த்து அறவழியில் போராடி, விடுதலை பெறுவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வரும் ஈழத்தமிழ் கைதிகள், மாறனின் ஆலோசனைப்படி, அவரது தலைமையில் ஒன்று சேர்ந்து, தப்பிப்பதற்காக ரகசியமாக சுரங்கம் தோண்டத் தொடங்குகிறார்கள்.
அவர்கள் விரும்பியவாறு ரகசிய சுரங்கத்தை வெற்றிகரமாகத் தோண்டி முடித்தார்களா? அதைப் பயன்படுத்தி சாமர்த்தியமாகத் தப்பித்து தங்கள் விடுதலையை தாங்களே சாதித்தார்களா? இது தெரிந்து சிறை உயரதிகாரிகளும் அவரது சகாக்களும் வெகுண்டெழுந்து என்ன செய்தார்கள்? அதன்பிறகு என்ன நடந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு பரபரப்பான காட்சிகளில் விடை அளிக்கிறது ‘ஃபிரீடம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
1995ஆம் ஆண்டு ஆகஸ்டு 14ஆம் தேதி, வேலூர் கோட்டையில் உள்ள சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 43 ஈழத்தமிழ் கைதிகள், தங்கள் சிறை அறையிலிருந்து ரகசியமாக 47 மீட்டர் தூரத்துக்கு பூமிக்குள் சுரங்கம் தோண்டி, அதன் வழியே வெளியேறி தப்பித்தார்கள். அவர்களில் 21 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 22 பேர் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டனர். மயிர்கூச்செரியும் இந்த உண்மைக்கதையை அடிப்படைக் கதையாகக் கொண்டு, கொஞ்சம் கற்பனை கலந்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் சத்யசிவா. தமிழ் உணர்வைத் தட்டியெழுப்பும் வகையில் விறுவிறுப்பாக, அதே நேரத்தில் எந்த சமரசமும் இல்லாமல், ஈழத்தமிழர் பக்கம் நின்று இப்படத்தைத் திறம்பட நகர்த்திச் சென்றிருக்கிறார். பாராட்டுகள் இயக்குநர் சத்யசிவா.
மாறன் என்ற ஈழத்தமிழராக சசிகுமார் நடித்திருக்கிறார். புலனாய்வுத் துறையினரின் கொடூர நடவடிக்கைகளில் சிக்கித் துடிக்கும் ஈழத்தமிழர்களின் வலியையும், வேதனையையும் தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக, சிறப்பாக வெளிப்படுத்தி, பார்வையாளர்களை கலங்கச் செய்திருக்கிறார். சிறையிலிருந்து சக கைதிகளுடன் சேர்ந்து தப்பிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் பார்வையாளர்களின் இதயங்களை படபடவென அடிக்க வைக்கின்றன. அவர் பேசும் ஈழத்தமிழ் அச்சு அசலாய் அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் சசிகுமார்.
மாறனின் நிறைமாத கர்ப்பிணி மனைவி செல்வியாக லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். அவரைத் தவிர இந்த கதாபாத்திரத்தை இ த்தனை இயல்பாக யாராலும் பண்ண முடியாது என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
மாறனுடன் சக கைதிகளாக இருக்கும் மு.ராமசாமி, மணிகண்டன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள்.
சாந்தமான சிபிஐ அதிகாரியாக வரும் ரமேஷ் கண்ணா, கொடூரமான சிறை உயர் அதிகாரியாக வரும் சுதேவ் நாயர், மனித உரிமை வழக்கறிஞராக வரும் மாளவிகா அவினேஷ் என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்துக்கு பலம்.
‘’ஃபிரீடம்’ – அவசியம் பார்க்க வேண்டிய படம்!
ரேட்டிங்: 3.5/5