தேஜாவு – விமர்சனம்

நடிப்பு: அருள்நிதி, மதுபாலா, அச்சுத குமார், ராகவ் விஜய், சேத்தன், ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட், மைம் கோபி மற்றும் பலர்

இயக்கம்: அரவிந்த் சீனிவாசன்

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: முத்தையா

மக்கள் தொடர்பு: சதீஷ் (டீம் எய்ம்)

திரில்லர் ஸ்பெஷலிஸ்டாக – த்ரில்லர் படங்களின் ஸ்பெஷல் ஹீரோவாக – வெற்றிகரமாக பரிணமித்திருக்கும் அருள்நிதியின் மற்றொரு கிரைம் திரில்லர் இந்த ’தேஜாவு’.

தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக இருப்பவர் மதுபாலா. இவருடைய மகள் ஸ்ருதி வெங்கட்டை சிலர் கடத்தி விடுகிறார்கள். அதைப் பற்றி விசாரிப்பதற்காக அருள்நிதி அண்டர்கவர் ஆபீஸராக வருகிறார்.

இதனிடையே, எழுத்தாளர் அச்சுத குமார் தனது கிரைம் கதையில் எழுதும் ஒவ்வொரு வரியும் அதன்பின் நிஜத்தில் அப்படியே நடக்கிறது. இதை கண்டு அருள்நிதி மற்றும் மதுபாலா அதிர்ச்சி அடைகிறார்கள்.

பின்னால் நிஜத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை அச்சுத குமார் முன்கூட்டியே எப்படி கதையாக எழுதுகிறார்? கடத்தப்பட்ட ஸ்மிருதி வெங்கட் என்ன ஆனார்? இவற்றை எல்லாம் அண்டர் கவர் ஆபீசரான அருள்நிதி எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பது படத்தின் மீதி கதை.

நாயகன் அருள்நிதி வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர். அந்த வகையில் இந்த படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அண்டர் கவர் ஆபீஸராக நடித்திருக்கும் அருள்நிதி தனது நடிப்பில் கம்பீரத்தை காட்டியிருக்கிறார்.

உயர் அதிகாரியாக வரும் மதுபாலா நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். எழுத்தாளராக வரும் அச்சுத குமார் நடிப்பும், அவருக்கு மிகச் சரியாகப் பொருந்தும் எம்.எஸ்.பாஸ்கரின் பின்னணிக் குரலும் சிறப்பு.

காளி வெங்கட்,ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், மைம் கோபி உள்ளிட்டோர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்..

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. கிளைமாக்ஸ் அசத்தல். வித்யாசமான  திரில்லர் படத்தை கொடுத்த இயக்குனர் அரவிந்த் சீனிவாசனுக்கு பாராட்டுக்கள்.

 இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை பக்கபலமாக அமைந்துள்ளது.

முத்தையாவின் ஒளிப்பதிவு அருமை.

’தேஜாவு’ – கிரைம் த்ரில்லர் பிரியர்களுக்குப் பிடிக்கும்.