‘கிளாஸ் ஆஃப் கிளாஸ்’ கர்நாடக இசை நிகழ்ச்சி சென்னையில் 28ஆம் தேதி நடக்கிறது

முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், வெறும் இசையமைப்பாளர் மட்டும் அல்ல; பாடகர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர் மற்றும் படைப்பாளரும் ஆவார். அவர் பென் கிங்க்ஸ்லீ நடித்த ‘எ காமன் மேன்’ என்ற ஹாலிவுட் படத்திற்கு  இசையமைத்தவர். இந்திய பாரம்பரிய இசைக்கு ‘நொட்டேஷன்’ எனும் இசை வடிவங்களை உருவாக்கியவர். பக்தி பாடல்கள் முதல் ஃபியூஷன் வரை பல இசைப் படைப்புகளைப் படைத்தவர். ‘ராமானுஜன்’ திரைப்படத்திற்கு அவர் அமைத்த இசையை,  பெருமை மிக்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வெளியீடான ‘த கேம்ப்ரிட்ஜ் கம்பேனியன் டு ஃபிலிம் மியூசிக’ விவாதித்திருக்கிறது

இத்தனை திறமைகளும், சிறப்புகளும் கொண்ட முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகமும், 11 கர்நாடக இசைக் கலைஞர்களும் ஒன்று சேரும் ‘கிளாஸ் ஆஃப் கிளாஸ்’ எனும் கர்நாடக இசை நிகழ்ச்சி, சென்னை சேத்துப்பட்டு முக்தா வெங்கட சுப்பாராவ் ஹாலில் வரும் (ஜூலை) 28ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் ரமேஷ் விநாயகத்தின் கீர்த்தனைகளை  இவ்வருடசங்கீத கலாநிதி அருணா சாய்ராம், நித்யஸ்ரீ மகாதேவன், சிக்கில் குருசரண்,  அபிஷேக் ரகுராம், உன்னி கிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், காயத்ரி வெங்கட்ராகவன்,  அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீராம் பரசுராம், திருச்சூர் சகோதரர்கள் ஆகிய 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் பாடுகிறார்கள்.

இந்த அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரமேஷ் விநாயகம், “பாரம்பரிய இசை மெட்டுக்கள் மூலம் கதை சொல்லும் பாணியை இந்திய திரையுலகம் மட்டுமே முதலில் கையாள ஆரம்பித்தது. காலப்போக்கில், கதை சொல்லும் யுக்திகள் பல வளர்ந்தாலும், பாடல்கள் என்பது இயக்குனர்களுக்கு எப்போதுமே முக்கிய கருவியாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி முதல் பாம்பே ஜெயஸ்ரீ வரை, ஜி.என்.பாலசுப்ரமணியன் முதல் உன்னி கிருஷ்ணன் வரை, என்றும் தனக்கு இணையில்லாத பாபனாசம் சிவன் என எண்ணற்றோர் திரையுலகில் முத்திரை பதித்திருக்கின்றனர். மேலும், ஜி.ராமனாதன், எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்,  கர்நாடக ராகங்களில் அமைந்த இசையில் பாடல்களை உருவாக்கி திரைப்படங்களை அழகுபடுத்தியிருக்கின்றனர். இப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் கோலோச்சிய இந்த சினிமாவிற்கும், பாரம்பரிய இசைக்குமான உறவினை கொண்டாடுவதே ‘கிளாஸ் ஆஃப் கிளாஸ்’ எனும் 3 மணி நேர கர்நாடக இசை நிகழ்ச்சியின் நோக்கம்” என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கர்நாடக இசைப் பாடகர்கள் அருணா சாய்ராம், நித்ய ஸ்ரீ மகாதேவன், அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

c9