”விஜய்க்கு தலைமை பண்பே இல்லை”: சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்!

கரூரில் தொண்டர்கள், ரசிகர்கள், மக்களை அப்படியே விட்டுவிட்டு பொறுப்பற்ற முறையில் தவெக தலைவர் விஜய் வெளியேறியுள்ளார் என கண்டனங்களை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், கரூர் நிகழ்ச்சியின் தலைவருக்கு தலைமை பண்பே இல்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், எல்லா கட்சியினரும் கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த நிலையில் தவெகவினர் மட்டும் எங்கே சென்றார்கள் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கரூரை போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகளின் “ரோடு ஷோ” போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், “கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தவெக தலைவர் விஜய், குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர் கரூர் பிரச்சாரத்திற்கு 7 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த கரூர் கொடூரம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் இனி மேலும் நடக்காதபடி அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர், ரோடு ஷோவில் பேசுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தினேஷ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ”நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகின. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? நீதிமன்றம் கண் மூடி வேடிக்கை பார்க்க முடியாது.
வீடியோக்களை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது. ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, hit and run வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? வழக்குப் பதிவு செய்ய என்ன தடை? புகார் இல்லாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
கரூர் நிகழ்ச்சியில் தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் உள்ளிட்டோரை அப்படியே விட்டுவிட்டு பொறுப்பற்ற முறையில் தலைவர் வெளியேறியுள்ளார். கரூர் நிகழ்ச்சியின் தலைவர் விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை” என நீதிபதி கண்டித்தார். மேலும், “முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். ஆனால் தவெகவினர் எங்கே சென்றார்கள். கரூர் சம்பவம் நடைபெற்றதும் மற்ற கட்சியினர் உதவிக்கு விரைந்தபோது தவெக நிர்வாகிகள் காணாமல் போனது ஏன்?” என்றும் நீதிபதி செந்தில் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.