கடாவர் – விமர்சனம்

நடிப்பு: அமலா பால், ஹரீஷ் உத்தமன், ரித்விகா, முனீஸ் காந்த், நிழல்கள் ரவி, வேலு பிரபாகரன், அதுல்யா ரவி மற்றும் பலர்

இயக்கம்: அனூப் எஸ்.பணிக்கர்

தயாரிப்பு: அமலா பால்

ஒ.டி.டி தளம்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

மக்கள் தொடர்பு: ஸ்ரீவெங்கடேஷ்

படத்தின் தலைப்பான கடாவர் (Cadaver), எடுத்த எடுப்பில் நமக்கு எந்த உணர்வையும் ஏற்படுத்துவதில்லை. காரணம், அச்சொல்லுக்கு என்ன பொருள் என்பது நமக்குத் தெரியாதது தான். பொருள் தெரிந்தாலோ ஒருவகை பீதி நம்மைப் பற்றிக்கொள்ளும். ஆம்… கடாவர் என்றால் ‘உயிரற்ற உடல்’ என்று பொருள்.

சென்னையை அடுத்துள்ள படப்பை காட்டுக்குள், காருடன் சேர்த்து எரிக்கப்பட்ட சடலம் ஒன்று கிடைக்கிறது. முற்றிலும் உருக்குலைந்த அந்தச் சடலம் யாருடையது என்பதை போலீஸ் சர்ஜனும் தடயவியல் நிபுணருமான பத்ராவின் (அமலா பால்) உதவியோடு அடையாளம் காண்கிறது காவல்துறை.  பிரபல மருத்துவரான சலீம் ரஹ்மான் தான் கொலை செய்யப்பட்ட நபர் என தெரிந்ததவுடன், கொலையாளி யார், கொலைக்கான நோக்கம் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடி விசாரணை நடக்கிறது.

சலீம் ரஹ்மான் கொலைக்கும், சிறையில் இருக்கும் வெற்றிக்கும் (திரிகுன்)  தொடர்பு இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவருகிறது. ஆனால், சிறையில் இருக்கும் வெற்றியால் எப்படி கொலை செய்ய முடியும்? வெற்றிக்கு வெளியில் இருந்து உதவும் அந்த மர்ம கொலைகாரன் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

0a1bமார்ச்சுவரியில் பிணங்களுக்கு மத்தியில் மிகவும் கேஷுவலாக உணவு உண்ணும் டாக்டர் பத்ராவாக அறிமுகமாகிறார் அமலா பால். படிய வாரிய தலை, நெற்றியில் விபூதிக்கீற்று என கதாபாத்திரத்திற்காகத் தோற்றத்தில் மட்டுமல்லாமல், நடிப்பிலும் நல்ல ட்ரான்ஸ்ஃபர்மேஷனைக் காட்டியுள்ளார் அமலா பால். கதையின் நாயகியாகத் தனது முதற்படத் தயாரிப்பில் அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார்.

மனைவி ஏஞ்சலையும், கர்ப்பத்தில் இருந்த குழந்தையையும் இழந்து, பொய்யான கொலை குற்றச்சாட்டிற்காக சிறையில் இருக்கும் வெற்றியின் கதாபாத்திரத்தில் திரிகுன் நடித்துள்ளார். சிறையில் இருந்தவாறே எப்படி எல்லாக் கொலைகளையும் திட்டமிடுகிறார் என்ற சஸ்பென்ஸைத் தன் நடிப்பால் அதிகப்படுத்தியுள்ளார். அவரது காதல் மனைவி ஏஞ்சலையாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

காவல்துறை ஏ.சி. விஷாலாக வரும் ஹரிஷ் உத்தமன், தன் கம்பீரமான ஸ்க்ரீன் ப்ரெஸன்சால் ஈர்க்கிறார். தனது மகன் சலீம் ரஹ்மானை கொலைகாரனிடம் பறி கொடுத்த தந்தை அலி ரஹ்மானாக இயக்குநர் வேலு பிரபாகரன், நர்ஸ் பிரியாவாக ரித்விகா, இரண்டு இளம்பெண்களுக்குத் தந்தையாக மாறுபட்ட கேரக்டரில் ராட்சசன் வினோத், காவல்துறை அதிகாரி மைக்கேலாக முனிஷ்காந்த் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இயக்குநர் அனூப் எஸ்.பணிக்கருடன் இணைந்து அபிலாஷ் பிள்ளை சுவாரசியமான திரைக்கதையை அமைத்துள்ளார். படத்தில் வரும் சில திருப்பங்கள் நன்றாக இருக்கிறது. திரைக்கதையில் இருந்ததை இயக்குனர் அனூப் பணிக்கர் முடிந்த அளவு சிறப்பாகவே படமாக்கியிருக்கிறார்.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது. அதுபோல், சஸ்பென்ஸைத் தக்கவைக்க உதவும் ரஞ்சின் ராஜினுடைய பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

’கடாவர்’ – உயிரோட்டமுள்ள கிரைம் திரில்லர்; நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்!

 

Read previous post:
L7
”தமிழ் இயக்குநர்கள் பா.இரஞ்சித், வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜுடன் பணிபுரிய ஆசை!” – விஜய் தேவரகொண்டா

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து  Puri connects நிறுவனம்  தயாரிக்க,  பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில்  பான் இந்திய நடிகர்

Close