“பேய் படத்தில் நடிக்க மாட்டேன்”: அரவிந்த்சாமி திட்டவட்டம்!

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமியும்,. இவருக்கு ஜோடியாக அமலாபாலும் நடித்திருக்கிறார்கள்.. இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோரும், மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானியும் நடித்துள்ளார்கள்.

அம்ரேஷ் இசையமைத்துள்ளார். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ‘பரதன் பிலிம்ஸ்’ தமிழகம் முழுவதும் வருகிற மே 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளது.

சென்னையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்ரா லட்சுமணன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0a1c

இந்த நிகழ்ச்சியில் அரவிந்த்சாமி பேசுகையில், “இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகியுள்ளது. அதில் சில மாற்றங்கள் செய்து தமிழில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது.

வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்தேன். அப்படத்தை தொடர்ந்து அந்த கதாபாத்திரம் போல்வே 15 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், நான் நடிக்க மறுத்துவிட்டேன்..

ஹீரோ, வில்லன் என்று இல்லாமல், நல்ல கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான். பேய், பிசாசு போன்ற அமானுஷ்ய சக்திகள் பற்றிய ஹாரர் படங்களைப் பார்த்தால் எனக்கு பயம் வராது. சிரிப்புத் தான் வரும். ஆகவே அப்படிப்பட்ட படங்களை நான் பார்க்க மாட்டேன். நடிக்கவும் மாட்டேன்.

பேய் இருக்கிறதா, இல்லையா என்று தேடுவதற்குமுன், முதலில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்களா? எங்கே இருக்கிறார்கள்? என்று தேடுவோம். அதன்பிறகு பேயை தேடிக்கொள்ளலாம்.

கடவுள் விவகாரத்தைப் பொறுத்தவரை, நான் ஆத்திகவாதியும் அல்ல, நாத்திகவாதியும் அல்ல. யதார்த்தவாதி (agnostic). கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு “தெரியாது” என்பது தான் என் பதில்” என்றார் அரவிந்த்சாமி.