’தெருநாய் பிரச்சினை’யில் சிக்கி சீரழிந்த நடிகர் படவா கோபி, நடிகை அம்மு அளித்துள்ள விளக்கங்கள்!

தெருநாள் பிரச்சினை தொடர்பான நிகழ்ச்சிக்கு குவிந்த கிண்டல்களால் நடிகர் படவா கோபி மற்றும் நடிகை அம்மு ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
தெருநாய் ஆதரவு, எதிர்ப்பை முன்வைத்த ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஆகஸ்ட் 31-ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் தெருநாய்க்கு ஆதரவாக பேசிய அம்மு மற்றும் படவா கோபி இருவருடைய கருத்துகள் இணையத்தில் வைரலானது. பலரும் இருவரையும் கடுமையாக விமர்சித்தார்கள். இவர்கள் இருவரது பேச்சையும் வைத்து பல்வேறு கேள்விகள், ட்ரோல்கள் என அதிகரித்தன. இந்த விவகாரம் தொடர்பாக படவா கோபி மற்றும் அம்மு இருவருமே விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக படவா கோபி வெளியிட்ட விளக்கத்தில், ”அனைவரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட நிகழ்ச்சி. இப்படி எடிட் செய்து விஜய் டிவி ஒளிபரப்புவார்கள் என நினைத்து பார்க்கவே இல்லை. வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கும் போதுதான் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். அப்போதே வாதங்கள் வைக்கும் நிகழ்ச்சியாக இருந்தால் வரவில்லை என்றேன். நாய்களின் மீது அன்பு கொண்டவராக கருத்துச் சொல்லுங்கள் என்றார்கள்.
எனது வேண்டுகோள் என்னவென்றால், விஜய் தொலைக்காட்சி அந்த நிகழ்ச்சியினை எடிட் செய்யாமல் மொத்தமாக ஒளிபரப்ப வேண்டும். மக்கள் கொந்தளித்து ஏதோ ஏதோ கருத்துகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எதிராகவும், தெருநாய்கள் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. நாய்கள் மீது அன்பு கொண்ட அடிப்படையில் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
அந்த நிகழ்ச்சியில் 3 விஷயங்கள் பேசினேன். நாய்களின் குணம், மக்களின் நடத்தை மற்றும் அதற்கு தீர்வு. இதில் தீர்வையும், நடத்தையும் அவர்கள் ஒளிபரப்பவே இல்லை. மக்கள் பார்த்தது ஒரு சினிமாதான். அதில் அனைவருடைய எதிர்வினைகளை மட்டுமே போட்டுள்ளார்கள். நாய்க்காக பேச வந்த அனைவருமே தற்போது கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்கள். இப்படியொரு விவாத நிகழ்ச்சி இருக்கக் கூடாது என்பதுதான் என் எண்ணம். ஏனென்றால் விவாத நிகழ்ச்சி என்றால் அதில் ஒரு தீர்வு இருக்க வேண்டும். டிஆர்பி-க்காக உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியினால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.
மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையை இந்த நிகழ்ச்சியின் மூலம் வன்முறையைத் தூண்டுகிறார்ளோ என்பது என் எண்ணம். எடிட் செய்யப்படாத நிகழ்ச்சியினை முழுமையாக வெளியிட்டால் என்ன பேசினோம் என்பது அனைவருக்கும் தெரியும். இறுதியாகத்தான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அதற்கு முன்பு என்ன பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. தீர்வாக ஒரு நிகழ்ச்சியினை போடாமால், தற்போது பிரச்சினையாக மாறியிருக்கிறது.
ஆகையால் யாருமே என்னை தவறாக எண்ண வேண்டாம். எனது பேச்சு ஒருவேளை யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். மனிதர்கள் மற்றும் நாய்கள் இருவரது மீதிருக்கும் அன்பினால் மட்டுமே அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன்” என்று தெரிவித்துள்ளார் படவா கோபி.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக அம்மு கூறும்போது, “நீயா நானா நிகழ்ச்சியினை வைத்து பலரும் என்னை தவறாக கிண்டல் செய்து வருகிறீர்கள். 8 மணி நேரம் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியினை 45 நிமிடங்கள் எடிட் செய்து ஒளிபரப்பி இருக்கிறார்கள். அதன் எடிட் செய்யப்படாத நிகழ்ச்சியினை பார்த்தீர்கள் என்றால் என்ன நடந்தது என்பது தெரியவரும். தெருநாய் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என்று தான் நிகழ்ச்சி தொடங்கினார்கள். ஆனால், எதிர்தரப்பினருக்கு தான் அதிகமாக பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
எங்கெல்லாம் தெருநாயால் பிரச்சினை வந்ததோ அவர்களை அழைத்து பேச வைத்த கோபிநாத் அவர்கள், எங்கள் பக்கத்தில் எதற்காக வேண்டும் என்று பேச வந்ததை கேட்கவில்லை. எப்போது எல்லாம் பேச வேண்டும் என்று கேட்டோமோ, அப்போது எல்லாம் உங்கள் வாய்ப்பு வரும்போது பேசுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். எதிர் தரப்பில் அப்பாவி மக்களை அழைத்து வந்து பேச வந்தார்கள். எங்கள் தரப்பில் பேச அவ்வளவு விஷயங்கள் இருந்தது.
இரண்டு தரப்பினரையும் மோதவிட்டு அழகு பார்க்க ஆசைப்பட்டார்களா என்று தெரியவில்லை. டி.ஆர்.பி-க்காக எதற்காக இப்படியொரு அசிங்கமான விளையாட்டு விளையாடி இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இதனால் பாதிக்கப்படப்போவது அந்த வாயில்லாத ஜீவனும், நாங்களும்தான். ஒரு இடத்தில் பேசியதை மற்றொரு இடத்தில் போட்டு மொத்தமாக மாற்றியிருக்கிறீர்கள். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
மக்களே, வாயில்லாத ஜீவன்களும் நியாயம் கிடைக்க வேண்டும். மக்களாகிய நாமும் அவற்றிடம் கடி வாங்காமல் தோழமையோடு இருக்க முடியும் என்பதற்காக மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு போய் உட்கார்ந்தோம். யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பதும் நோக்கமல்ல. நான் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணமே மக்களாகிய நீங்கள் தான். அப்படியிருக்கும் போது நீங்கள் பாதிக்கப்பட வேண்டும் என்று எப்படி நான் ஆசைப்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்.