“உங்கள் தேவைக்கு அல்ல, உங்கள் வேலைக்கு சம்பளம் கேளுங்கள்”: நடிகர்களுக்கு ராதாரவி அறிவுரை

இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அண்ணனுக்கு ஜே’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்குமார் இயக்கியுள்ளார் .இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக இப்படத்தில் அறிமுகமாகி உள்ளார். ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

a1

இந்நிகழ்ச்சியில் நாயகன் தினேஷ் பேசுகையில், “இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குனர் ராஜ்குமாருக்கும், இயக்குனர் வெற்றி மாறனுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் என் கேரியரில் முக்கியமான இடத்தை நிச்சயம் பிடிக்கும். மஹிமா அருமையாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் அரோல் கரோலி 7 பாடல்களுக்கும் நன்றாக இசையமைத்துள்ளார். ராதாரவியுடன் நடித்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்” என்றார்.

இயக்குனர் ராஜ்குமார் பேசுகையில், “முதலில் வெற்றி மாறனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் இப்படத்திற்கு அவர் மிகப்பெரிய பக்கபலமாக இருந்துள்ளார். தினேஷூக்கு முழுக் கதையைச் சொல்லாமலேயே அவரை நடிக்க வைத்தேன்.  மஹிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருக்கிறார். மயில்சாமி, வையாபுரி – இருவரும் எபபோதும் நகைச்சுவை நடிகர்களாக பல படங்களில் நடித்து இருப்பார்கள் ,இந்தப்படத்தில் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது ஒரு அரசியல் சட்டையர் படம். நம் நாட்டில் அரசியல் கட்சிகள் எந்த லட்சணத்தில் இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக இதில் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் அரோல் கரோலி பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த வெற்றி மாறனுக்கும், ராஜ்குமாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது மற்ற படங்களை விட இந்தப் படத்துக்கு சற்று வித்தியாசமான முறையில் இசையமைத்துள்ளேன். 7 பாடல்களும் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசமாக இருக்கும்” என்றார்.

நாயகி மஹிமா நம்பியார் பேசுகையில், வெற்றி மாறன் போன்ற பெரிய இயக்குனரின்  தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிப்பது சந்தோசமாக உள்ளது. இந்தப்படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன். மேலும் இந்த படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளேன்” என்றார்.

வெற்றி மாறன் பேசுகையில், “நடிகர் தினேஷ் தனது முழு எனர்ஜி வாய்ந்த  நடிப்பைத் தந்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். இயக்குனர் ராஜ்குமார் நல்ல படத்தைத் தந்துள்ளார். படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என்றார்.

ராதாரவி பேசுகையில், “வெற்றி மாறனிடம் நான் டப்பிங் கலைஞராக முன்பு ‘ஆடுகளம்’ படத்துக்கு சம்பளம் வாங்கினேன். இந்தப் படத்தில் தயாரிப்பாளராக அவரிடமிருந்து சம்பளம் வாங்கியிருக்கிறேன். மேலும், ‘வடசென்னை’ படத்தி்ல் அவரது இயக்கத்திலேயே நடித்தும் வருகிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.

இப்போதெல்லாம் நடிகர்கள் சம்பளம் கேட்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது. அவரவர் தேவைக்காக சம்பளம் கேட்கிறார்கள். பெரிய வீடு கட்ட வேண்டும், பெரிய கார் வாங்க வேண்டும் என்று நினைத்து, இந்த தேவைகளுக்காக சம்பளம் கேட்கிறார்கள். இது ரொம்ப தப்பு. ஒரு படத்தில் அவர்கள் செய்த வேலைக்கு ஏற்பத்தான் சம்பளம் கேட்க வேண்டும். அது தான் நியாயமும்கூட. அந்தப் படத்தில் நீங்கள் என்ன கேரக்டரில் நடிக்கிறீர்கள், எத்தனை காட்சிகளில் நடிக்கிறீர்கள், எத்தனை நாட்கள் நடிக்கிறீர்கள் என்பதையெல்லாம் யோசித்து அதற்கேற்ப சம்பளம் கேளுங்கள். அப்போது தான் தயாரிப்பாளர்கள் நன்றாக இருப்பார்கள். அவர்கள் நன்றாக இருந்தால் தான் நடிகர்களும், தொழிலாளர்களும் நன்றாக இருக்க முடியும்” என்றார்.