சாய் பாபா பற்றிய ‘அனந்தா’ படத்தின் விழாவில் துர்கா ஸ்டாலின்: டிரைலரை வெளியிட்டார்!
கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ’அனந்தா’. புட்டப்பருத்தி சாய் பாபா பற்றிய இப்படத்தில் ஜெகபதிபாபு, சுகாசினி, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் அடுத்த (ஜனவரி) மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது துர்கா ஸ்டாலின் முன்னிலையில் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும்போது,
“அனைவருக்கும் வணக்கம். இந்த படவிழாவிற்கு துர்கா ஸ்டாலின் வந்தது பாபாவின் அருள். 12 வருடங்களுக்கு முன்னால் பா.விஜய் எனக்கு போன் செய்து கலைஞரைப் பற்றி கேட்டார். அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னேன். உடனடியாக கலைஞரிடம் போனை கொடுத்து பேச சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கலைஞர் கோபாலபுரம் வர முடியுமா என்று கேட்டார், உடனடியாக அங்கு சென்றேன். முதல் முறையாக அவரை அங்கு சந்தித்தேன். பாட்ஷா படம் பார்த்து மிகவும் ரசித்துள்ளேன் என்று சொன்னார். பாட்ஷா படத்தின் ஸ்கிரீன் பிளே, ரஜினிகாந்தின் ஆக்டிங் போன்றவற்றை பற்றி பேசினார். அடுத்த ஆறு மாதம் அவருடன் பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இயக்குனர்களுக்கு வேண்டிய மரியாதையை கொடுப்பவர் கலைஞர் கருணாநிதி. என்னுடைய சங்கமம் படத்தை பார்த்துவிட்டு மு.க.ஸ்டாலின் என்னை வெகுவாக பாராட்டினார். துர்கா ஸ்டாலின் இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி திடீரென என்னை தொடர்பு கொண்டு பாபாவைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். பாட்ஷா, அண்ணாமலை போன்று இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2009ஆம் ஆண்டு பாபாவை முதல் முறையாக சந்தித்தபோது, இவ்வளவு நாள எங்கிருந்தாய்? ஏன் வரவில்லை? என்று கேட்டார். அப்போது எனக்கு புரியவில்லை, ஆனால் இன்று அதன் அர்த்தம் எனக்கு புரிகிறது. ’அனந்தா’ படத்திற்கு ஒரு தனி எனர்ஜி உள்ளது. ஒவ்வொரு நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். தேவா பிரமாதமான இசையை கொடுத்துள்ளார். பா. விஜய் சிறப்பாக வசனங்கள் எழுதியுள்ளார். இந்த படம் முழுவதும் ஒரு அதிசயம் அனைவருக்கும் நடந்தது.
ரத்னாகர் இந்த படத்தைப் பார்த்து என்ன சொல்கிறார் என்பதை கேட்க ஆவலுடன் இருந்தேன். அவர் இல்லாமல் இந்த படம் தயாராகி இருக்காது. படத்தைப் பார்த்துவிட்டு பியூட்டிஃபுல் பிலிம் என்று சொன்னார். இன்று ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும். அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். லாபத்திற்காக இந்த படத்தை எடுக்காமல் பாபாவின் மீது உள்ள அன்பினால் இந்த படத்தை எடுத்துள்ளார் தயாரிப்பாளர் கிரிஷ். எனது ஆருயிர் நண்பர் ஒய்.ஜி.மகேந்திரன் இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நன்றி” என்றார்.
மல்லிகா ஸ்ரீனிவாசன் பேசும்போது,
“அனைவருக்கும் வணக்கம். பாபாவின் நூறாவது பிறந்தநாளை கொண்டாட உள்ளோம். இதற்காக உலகம் முழுவதிலிருந்தும் அவருடைய பக்தர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்த மனித குலத்திற்காக பாபா நிறைய நல்லது செய்து இருக்கிறார். அனந்தா படத்தின் டிரைலரை பார்க்கும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. எங்களது அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வந்ததற்கு துர்கா ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிரிஸ் கிருஷ்ணமூர்த்தி அவருடைய முழு ஆன்மாவையும் இந்த படத்திற்காக அர்ப்பணித்துள்ளார். அனந்தா படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டுள்ளேன். நன்றி” என்றார்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் துர்கா ஸ்டாலின் படக்குழுவினரின் முன்னிலையில் அனந்தா படத்தின் டிரைலரை வெளியிட்டார். அனந்தா படம் ஜனவரி மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
