”எனது 25-வது திரைப்படமான ‘சிறை’ எனக்கு உணர்வுபூர்வமான திரைப்படம்!” – நடிகர் விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு –
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், இளைய திலகம் பிரபுவின் மகன் என்ற நடிப்புப் பாரம்பரியப் பெருமை கொண்டவர் மட்டுமல்ல…
சான்டியாகோவில் இருக்கும் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தவர். அங்கு படித்துக் கொண்டிருந்தபோதே ஒரு நாடகக் குழுவிலும் இணைந்து பணியாற்றியவர். எம்.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு, 2005ஆம் ஆண்டு, தனது குடும்பத்திற்குச் சொந்தமான ’சிவாஜி புரொடக்சன்ஸ்’, ரஜினிகாந்த் – பிரபு நடிப்பில் தயாரித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் உதவுவதற்காக சென்னை திரும்பியவர். பின்னர் 2009-ல் வெளியான ‘சர்வம்’ திரைப்படத்தில் இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு உதவியாளராகப் பணியாற்றி மேலும் அனுபவம் பெற்றவர். அதன்பிறகு, 2010-ல் மீண்டும் ‘சிவாஜி புரொடக்சன்ஸ்‘ தயாரித்த ‘அசல்’ திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளிலும் உதவியவர்.
இப்படி பாரம்பரியப் பெருமையால் மட்டுமல்ல, சுய உழைப்பாலும் முன்னேறியவரான விக்ரம் பிரபு, 2012-ல், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ திரைப்படத்தின் மூலம் நாயக நடிகராக திரையில் அறிமுகம் ஆனார். அவர் நாயகனாக நடித்த இந்த முதல் படமே மாபெரும் வெற்றி பெற்று, வசூலை வாரிக் குவித்து, அவருக்குப் புகழ் சேர்த்தது. இதனை தொடர்ந்து ‘அரிமா நம்பி’, ‘இது என்ன மாயம்’, ‘வாகா’, ‘வானம் கொட்டட்டும்’, ‘டாணாக்காரன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘லவ் மேரேஜ்’ என இவரது நடிப்பில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இவரது 25-வது படமான ‘சிறை’ இம்மாதம் (டிசம்பர்) 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

2025 ஆம் ஆண்டு… டிசம்பர் 25ஆம் தேதி… 25-வது திரைப்படம்… என எல்லாமே 25 ஆக இருப்பது குறித்து விக்ரம் பிரபு என்ன சொல்லுகிறார்?
“பொதுவாக நான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைக் கணக்கில் வைத்துக் கொள்வதில்லை. இருந்தாலும், 2025ஆம் ஆண்டில், இம்மாதம் 25ஆம் தேதி, எனது 25-வது படம் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை விதவிதமான பரிமாணங்களில் நடிப்பை வெளிப்படுத்தி, என் முன்னோரின் பெருமையை இன்னும் பறை சாற்றுவதே நோக்கம். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பேன். ஒரே மாதிரியான படத்தில் நடித்தால் எனக்கே போரடித்துவிடும்.”
வெளிவரவிருக்கும் ‘சிறை’ பற்றி…?
”சிறை’ எனக்கு உணர்வுபூர்வமான படம். இதில் எனக்கு போலீஸ் வேடம் என்றாலும், அருமையான கதாபாத்திரம். எனது ‘டாணாக்காரன்’ வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ், அவர் காவல்துறையில் பணி புரிந்தபோது உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, மாறுபட்ட களத்தில் ‘சிறை’ படக்கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் ராஜகுமாரி, இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மிகப் பெரிய பட நிறுவனமான ’செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். அவரது மகன் எல்கே.அக்ஷய்குமார் இப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். அவரும் உழைப்பைக் கொட்டி சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக அவர் நிறைய பயிற்சிகளை எடுத்துள்ளார். சிவகங்கைப் பகுதியில் தங்கி, அந்த பகுதி மக்களின் வாழ்வியலை சிரத்தையுடன் கற்று நடித்திருக்கிறார். ‘சிறை’ படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். இந்த கதை நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.”
’சிறை’ படத்தில் நடிப்பதற்காக விக்ரம் பிரபு சிறப்புப் பயிற்சி ஏதாவது எடுத்துக்கொண்டாரா?
“டாணாக்காரன்’ படத்திற்காக என் உடல் எடையைக் குறைத்தேன். ஆனால் ‘சிறை’ படத்திற்கு கொஞ்சம் கூடுதலாக எடை தேவைப்பட்டது. அதனால், அதற்கு ஏற்ற மாதிரி என் உணவுகளை மாற்றிக்கொண்டேன். இந்த படத்திற்காக நன்றாக சாப்பிட்டு, நன்றாக தூங்கினேன்.”
’பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு அப்பா பிரபுவுடன் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்…?
“நல்ல நேரமும், நல்ல கதையும் அமையும்போது நிச்சயம் அதுவும் நடக்கும்” என்றார் விக்ரம் பிரபு.
’சிறை’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அனந்தா நடித்துள்ளார். எல்.கே.அக்ஷய்குமாருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் கே. மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
‘சிறை’ திரைப்படம் வருகிற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறைக் கால கொண்டாட்டப் படமாக உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
