பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இயற்கை எய்தினார்

ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலம் அடைந்துள்ள மயில்சாமி, இன்று (19-02-2023) அதிகாலை மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 57.

தாவணிக் கனவுகள், கன்னி ராசி, அபூர்வ சகோதரர்கள், தூள், தவசி, தலைநகரம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து பேரும் புகழும் பெற்ற நகைச்சுவை நடிகர் மயில்சாமி.

அவர் சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று இரவு சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மயில்சாமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக மயில்சாமி இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

மயில்சாமிக்கு கீதா என்ற மனைவியும், அன்பு, யுவன் என்ற மகன்களும் இருக்கிறார்கள்.

திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்களும், ரசிகர்களும் மறைந்த மயில்சாமிக்கு நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அஞ்சலியும், இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள்.