கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தீர்ப்பு: நடிகர் திலீப் விடுவிப்பு!
கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் பல்சர் சுனி உள்பட 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதல் சிறப்பு அமர்வு நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் காலை 11 மணிக்கு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். பல்சர் சுனி என்ற சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ் விபி, சலீம் என்கிற வாடிவல் சலிம், பிரதீப் ஆகிய 6 பேரை குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வரிசையில் 8-வது இடத்தில் இருந்த நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிபதி அவரை விடுவித்துள்ளார்.
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள 6 பேருக்கும் என்ன தண்டனை என்பதை நீதிபதி வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அறிவிக்கிறார்.
திலீப் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டிருந்த அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். தீர்ப்பை எதிர்நோக்கி வழக்கறிஞர்களும் செய்தியாளர்களும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் திரண்டுள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நடிகர் திலீப் நன்றி:
“நான் தான் இந்த வழக்கில் உண்மையில் பாதிக்கப்பட்ட நபர்” என்று நடிகர் திலீப் கூறியுள்ளார்.
தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சேர்ந்து காவல்துறையினர் ஒரு கதையை உருவாக்கி அதை ஊடகங்கள் மூலம் பரப்பினர். இது எனது தொழில் மற்றும் நற்பெயரை அழிக்கும் நோக்கம் கொண்டது” என்று கூறினார்.
தனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். பின்னர் அவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
திருப்புமுனையான இயக்குநரின் சாட்சியம்:
இவ்வழக்கில் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகையின் உறவினர்கள் உட்பட 261 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முதலில் நடிகைக்கு ஆதரவாக சாட்சியம் கூறிய 28 பேர், அதன்பின்பு பிறழ் சாட்சிகளாக மாறினர். மொத்தம் 833 பேருடைய கைரேகைகள், தடயவியல் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்டன.
முதலில் 438 நாட்கள் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், மலையாளத் திரைப்பட இயக்குநர் பாலசந்திரகுமாரின் சாட்சியம் காரணமாக இந்த வழக்கு மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. மிகவும் உடல்நலக்குறைவுடன் இருந்த நிலையிலும் நீதிமன்றத்துக்கு வந்து அவர் அளித்த சாட்சியம், இந்த வழக்கின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
அதன்பின் 294 நாட்களுக்கு மீண்டும் விசாரணை நடந்தது. கோவிட் பேரிடர் காலத்தில் விசாரணை தடைபட்டதும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தனித்தனியாக மேல்முறையீடு செய்ததும் தீர்ப்பு தாமதமாக காரணம் என்று வழக்கறிஞர்கள் கூறினர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வந்துள்ள நிலையில், இயக்குநர் பாலசந்திரகுமார் தற்போது உயிருடன் இல்லை என்பதையும் பலர் நினைவுகூர்கின்றனர். பாலசந்திரகுமார் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி மரணமடைந்தார்.
நடிகை கடும் அதிர்ச்சி:
தீர்ப்புக்கு முன்னதாக, இந்த வழக்கில் நடிகை சார்பில் வாதாடிய வழக்கறிஞர் டி.பி.மினி ‘குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்படுவார்கள்’ என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
எர்ணாகுளம் நீதிமன்றத்திற்கு வருகை தந்த அவர், “சதி உள்பட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்கக்கூடிய நேரடி மற்றும் மறைமுக ஆதாரங்களை நாங்கள் சமர்பித்துள்ளோம். இன்று காலையில் நடிகையிடம் பேசினோம். அவர் கடும் அதிர்ச்சியில் உள்ளார்” என்று கூறினார்.
பெண் கலைஞர்களுக்கான அமைப்பு:
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு மலையாள திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பின்னரே டபிள்யூ.சி.சி. என்ற பெண் கலைஞர்களுக்கான சங்கம் உருவானது. மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கையும் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
பெண் கலைஞர்களுக்கான டபிள்யூ.சி.சி அமைப்பு ‘அவளுடன்’ என்று பொருள்படும் வகையில் ‘#Avalkoppam’ என்ற டேக்லைனில் ‘3215 நாட்களாக நீதிக்காக காத்திருப்பு’ எனகுறிப்பிட்டு “அவளுக்கும் அதுபோன்ற சிக்கலை எதிர்கொண்டு உயிர் பிழைத்தவர்களுக்கும் துணை நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ள அந்த நடிகை, 2017-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து கொச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
“அந்த நடிகையின் கார் பின்புறமிருந்து மற்றொரு வேனால் மோதப்பட்டது. அப்போது அவரது கார் ஓட்டுநர் மார்ட்டின் காரில் இருந்து இறங்கி தங்கள் கார் மீது மோதிய வேன் ஓட்டுநரிடம் இது குறித்து விசாரிக்கச் சென்றபோது, வேனில் இருந்த, நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் சுனில் என்பவரும் மற்ற இருவரும், நடிகையின் காருக்குள் புகுந்து, காரை சிறிது நேரம் ஓட்டுமாறு மார்ட்டினை வற்புறுத்தி, அந்த நேரத்தில் நடிகை மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தினர். அத்துடன், அந்த சம்பவத்தை வீடியோவாகவும் பதிவு செய்தனர்” என்பது புகார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த கேரள காவல்துறை, சுனில் குமார் என்ற பல்ஸர் சுனிலை முதலில் கைது செய்தது. பின்னர் நடிகையின் கார் ஓட்டுநர் மார்ட்டின், கோயம்புத்தூரைச் சேர்ந்த வாடிவால் சலீம் மற்றும் பிரதீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த திலீப்பை விசாரணைக்கு வரவழைத்த காவல்துறையினர், பின்னர் அவரை கைது செய்தனர்.
