ஆர்யன் – விமர்சனம்
நடிப்பு: விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்ரி, கருணாகரன், அவினாஷ்.ஒய், ஸ்டில்ஸ் பாண்டியன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: பிரவீன் கே
கூடுதல் திரைக்கதை: மனு ஆனந்த்
ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்
படத்தொகுப்பு: சான் லோகேஷ்
ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா, பிசி ஸ்டண்ட்ஸ் பிரபு
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: ‘விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்’ சுப்ரா, ஆர்யன் ரமேஷ் & விஷ்ணு விஷால்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்), சிவா
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி 2018-ல் வெளியான ‘ராட்சசன்’ என்ற புலனாய்வு கிரைம் திரில்லர் மாபெரும் வெற்றி பெற்று, படக்குழுவுக்கு ஒரு மிகப்பெரிய அடையாளமாகத் திகழ்ந்து வருவதோடு, இந்தியாவின் அனைத்து திரைத்துறைகளிலும் அது அழுத்தமான தாக்கத்தையும் செல்வாக்கையும் செலுத்தி வருகிறது. அந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையிலும், தைரியத்திலும் விஷ்ணு விஷால் மற்றுமொரு புலனாய்வு கிரைம் திரில்லரான ‘ஆர்யன்’ திரைப்படத்தில் நடித்திருப்பதோடு, தனது ‘விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்’ மூலம் தயாரித்தும் இருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘ஆர்யன்’ எப்படி இருக்கிறது? பார்ப்போம்…
இது ஒரு ‘சீரியல் கில்லர்’ படம் தான். எனினும், இது வழக்கமான ‘சீரியல் கில்லர்’ படம் போன்றது இல்லை. வழக்கமான ’சீரியல் கில்லர்’ படங்களில் படுகொலை செய்யப்படும் நபர்கள் பெரும்பாலும் சமூக விரோதிகளாக, கொடூர கொடுமைகள் செய்தவர்களாக இருப்பார்கள். (உதாரணத்துக்கு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தை நினைவு கூர்ந்தால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்.) ஆனால், ‘ஆர்யன்’ படத்தில் படுகொலை செய்யப்படுகிறவர்கள் மிகவும் சாதாரணமான நபர்களாக – ரொம்பவும் நல்ல மனிதர்களாக – இருக்கிறார்கள். இதுதான் இந்த படத்தில் முக்கிய வித்தியாசம்; புதுமை.

தனக்கு – தன் உழைப்புக்கு; தன் திறமைக்கு – கிடைக்க வேண்டிய சமூக அங்கீகாரம் கிடைக்காததால், விரக்தியின் உச்சிக்கே செல்லும் எழுத்தாளர் அழகர் (செல்வராகவன்), பிரபல தனியார் தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் நுழைகிறார். அங்கு பார்வையாளர்கள் பலர் முன்னிலையில், நேரடி ஒளிபரப்பாகும் நேர்காணல் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் தொகுப்பாளர் நயனா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்). அவர், சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் இளம் நாயக நடிகரை பேட்டி எடுத்துக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்துக்குள் இருந்து திடீரென எழும் எழுத்தாளர் அழகர், அந்த இளம் நாயக நடிகரின் காலில் கைத்துப்பாக்கியால் சுட்டு, மிரட்டி, தொலைக்காட்சி நிலையம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, அங்குள்ள அனைவரையும் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொள்கிறார். பின்னர், உலகம் முழுவதும் தெரிந்து கொள்ளட்டும் என்று நேரலையில் தன்னைப் பற்றி சுருக்கமாக சொல்லிவிட்டு, “நான் எழுதியுள்ள கதையின்படி, அடுத்த ஐந்து நாட்களில் ஐந்து கொலைகள் நிகழ இருக்கின்றன. அவற்றில் முதல் கொலை இதோ… இப்போதே… இந்த அரங்கிலேயே நடக்கப் போகிறது” என்று அறிவித்துவிட்டு, தன் கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொள்கிறார் அழகர்.
கொலையாளியான அழகரே இறந்துவிட்ட பிறகு, மீதமுள்ள நான்கு கொலைகள் எப்படி நடக்கும்? என்று தெரியாமல் காவல்துறை திணறுகிறது. இச்சூழலில், மனைவியுடனான (மானசா சௌத்ரி) பிரச்சனை காரணமாக திருமண வாழ்க்கை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் உள்ள காவல்துறை அதிகாரி அறிவுடை நம்பியிடம் (விஷ்ணு விஷால்) இந்த சிக்கலான வழக்கு ஒப்படைக்கப்படுகிறது.

எழுத்தாளர் அழகர் அறிவித்தது போல் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறதா? ஆம் எனில், அவர் இறந்த பிறகு கொலைகள் எப்படி நடக்கின்றன? கொல்லப்படும் நபர்கள் யார்? அழகரின் நோக்கம் தான் என்ன? காவல்துறை அதிகாரி அறிவுடை நம்பியிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக விடை அளிக்கிறது ‘ஆர்யன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகனாக, காவல்துறை அதிகாரி அறிவுடை நம்பியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். காக்கி சீருடையில் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக மிடுக்கும் துடிப்புமாக வலம் வருகிறார். குடும்ப வாழ்க்கையில் குழம்பித் தவிக்கும் கணவராகவும், அதேநேரம் சிக்கலான வழக்கை சாதுர்யமாகக் கையாளும் புலனாய்வாளராகவும் சிறப்பாக, நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.
சீரியல் கில்லராக, எழுத்தாளர் அழகராக இயக்குநர் செல்வராகவன் நடித்திருக்கிறார். எடுத்துக்கொண்ட வேலையை செய்து முடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இயங்கும் கதாபாத்திரத்துக்குள் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, பார்வையாளர்களின் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்யும் வகையில் அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தில் அவர் வரும் முதல் காட்சியிலேயே தற்கொலை செய்துகொண்ட போதிலும், படம் முழுக்க அவரது தாக்கம் இருக்கும்படியாக திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு.
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் நயனாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், நாயகனுடன் கருத்து வேறுபாடு கொண்ட அவரது மனைவியாக வரும் மானசா சௌத்ரி, காவல்துறை உயர் அதிகாரியாக வரும் அவினாஷ்.ஒய், காவலாளியாக வரும் ஸ்டில்ஸ் பாண்டியன், மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்துக்கு பிரவீன் கே, மனு ஆனந்த் கூட்டாக எழுதியிருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும், திரில்லாகவும் இருப்பதோடு, புதுமையாகவும் இருக்கிறது.
பிரவின் கே இப்படத்தை இயக்கியிருக்கிறார். பார்வையாளர்களை நெளியவிடாமல் கட்டிப்போட்டு, புலனாய்வு கிரைம் திரில்லர் ஜானரில் கதை சொல்லும் வித்தை இந்த இயக்குநருக்கு இலகுவாகவே கைவரப் பெற்றிருக்கிறது என்பது இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் துலக்கமாகத் தெரிகிறது. பாராட்டுகள்.
படம் தொடங்கி சீரியல் கில்லர் அறிமுகமானதுமே ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டு விடுகிறது. அவர் தொலைக்காட்சி நிலையத்துக்குள் நுழைவது தொடங்கி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யும் வரையிலான காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் பார்வையாளர்களை மூச்சடைக்கச் செய்துவிடுகிறது. அதன்பிறகு வரிசையாக ஒவ்வொரு கொலை நடப்பதும், இறந்துபோன சீரியல் கில்லர், கொலைகளுக்கு முன்பு தோன்றுவதும் படுசுவாரஸ்யம். ஆனால் தான் செய்யும் கொலைகளை நியாயப்படுத்த சீரியல் கில்லர் சொல்லும் காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்பதோடு, சமூகத்துக்கு ஒவ்வாத இயக்குநரின் விபரீத கற்பனையாகவும் இருக்கிறது என்பது பலவீனம்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் வலிமை சேர்க்கிறது.
ஹிரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு, ஷான் லோகேஷின் படத்தொகுப்பு, ஸ்டண்ட் சில்வா, பிசி ஸ்டண்ட்ஸ் பிரபு ஆகியோரின் சண்டை அமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் உயர்ந்த தரத்தையும், நேர்த்தியையும் உத்திரவாதம் செய்துள்ளன.
’ஆர்யன்’ – அனைத்துத் தரப்பு ரசிகர்களும் கண்டு களிக்கலாம்!
ரேட்டிங்: 4/5.
