“மரங்கள் அழகாக இருக்கின்றன; ஆனால் காடு அழிந்து கொண்டிருக்கிறது…”

காங்கிரஸுக்கு எதிரான இயக்கங்களை கண்ட வரலாறு பிகாருக்கு உண்டு. கர்ப்பூரி தாகூர் தொடங்கி, மாணவர் போராட்ட இயக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயண் போராட்ட இயக்கம், பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான போராட்ட இயக்கம் என பலவற்றையும் கண்ட வரலாறும் பிகாருக்கு உண்டு. அத்தகைய பிகாரில் வெற்றிகரமாக பாஜக தற்போது கால் ஊன்றியிருக்கிறது.

பிகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு நேருவின் பிறந்தநாளை தேர்ந்தெடுப்பதில் இருந்து பாஜகவின் திட்டம் தொடங்குகிறது.

2023-ம் ஆண்டு இறுதியில் தேர்தல் ஆணையரை நியமிக்கும் முடிவை பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளடக்கிய குழுவின் பெரும்பான்மை முடிவு செய்ய வகை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ஞானேஷ் குமார் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே அமித்ஷாவின் துறையில் வேலை பார்த்தவர். ஜம்மு காஷ்மீரை பிரிக்கும் நடவடிக்கைகள் யாவும் அய்யாவின் கைங்கர்யம்தான்.

ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தல்கள் எட்டு. அவற்றில் ஐந்தில் பாஜக வெற்றி பெற்றது. குறிப்பாக அருணாச்சல பிரதேசம், ஹரியானா போன்ற இடங்களில் தேர்தலுக்கு முன் ஆட்சியில் இருந்த பாஜக, மீண்டும் அதிக இடங்களுடன் அங்கு வெற்றி பெற்ற சம்பவங்கள் அரங்கேறின. இந்த ஹரியானாவில்தான் Exit Poll கணிப்புகள் காங்கிரஸுக்கு வெற்றியை கணித்தும், வாக்காளர் பட்டியல் முறைகேடு உதவியுடன் பாஜக தேர்தலை அபகரித்து வெற்றி பெற்றதாக ராகுல் காந்தி சமீபத்தில் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

பிகார் வெற்றிக்கு பாஜகவின் கூட்டணி பலம் முக்கிய பங்கு வகித்தது. காங்கிரஸ் கூட்டணியை விட ஒப்பீட்டளவில் பாஜக கூட்டணி பலமாக இருந்தது. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான கட்சிகளை கூட்டணியில் வைத்திருந்தது பாஜகதான். மேலும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி, யாதவர்களுக்கான கட்சி என்கிற கருத்துருவாக்கத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடைக்கவே இல்லை. அக்கட்சி நிறுத்திய 90% வேட்பாளர்கள் யாதவர்கள்தான். இது, பாஜகவின் social engineering அரசியலுக்கு கொடுக்கப்பட்ட தீனி. மேலும் காங்கிரஸும் ஆர்ஜேடியும் நேரெதிராக பல இடங்களில் போட்டி போடும் நிலையை மக்களும் சரி, விமர்சகர்களும் சரி ரசிக்கவில்லை.

பிகாரில் EBC என்ற ‘மிக தீவிரமான பிற்படுத்தப்பட்ட சாதிகள்’ வகைமை உண்டு. கர்பூரி தாக்கூர் தொடங்கி பலரும் இவர்களுக்கான உரிமைகளுக்காக போராடி இருக்கின்றனர். இந்தப் போராட்டம்தான் பிற்காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் போராட்ட இயக்கமாக மாறியது. அதில் லாலு, யாதவ் சமூகத்தினரையும் நிதிஷ்குமார் EBC உள்ளிட்ட சமூகத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக தேர்தல் அரசியல் நிலைப்பெற்றது. இத்தகைய பின்னணியில் 30% வரை இருக்கும் EBC மக்கள், நிதிஷ்குமார் பக்கமும் ஒடுக்கப்பட்டோருக்கான கட்சிகள் இருக்கும் பாஜக அணி பக்கமும் சாயும் வாய்ப்பை காங்கிரஸ் கூட்டணி வழங்கியது.

தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபாய் கூடுதல் வாய்ப்பை பாஜக கூட்டணிக்கு வழங்கியது.

வாக்கு விகிதங்களின்படி பார்த்தால் ஐக்கிய ஜனதா தளம் பல தொகுதிகளில் குறைந்த வாக்கு எண்ணிக்கையில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. போலவே பாஜகவின் வழக்கமான விதிப்படி, கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள வெற்றியைத் தாண்டி பாஜக வெற்றி அடைந்திருக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் அடிப்படையில் பாஜக கூட்டணியை காட்டிலும் வாக்குகள் அதிகமாக பெற்றிருக்கிறது. ஆனால் வெற்றி தொகுதிகள் வெகுவாக குறைந்திருக்கிறது.

இதற்கு அர்த்தம், வெற்றி தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் அதிகமாக RJD பெற்றிருக்கிறது என்பதும் பாஜகவுக்கு வெற்றி சந்தேகமாக இருந்த இடங்களில் வாக்கு வித்தியாசத்தை தாண்டும் அளவிலான வாக்குகளை பாஜக பெற்றிருக்கிறது என்பதும்தான்.

கேரள காங்கிரஸின் பதிவுப்படி SIR வாக்கு நீக்கத்தில், பாஜகவுக்கு வெற்றி கிடைக்க முடியாத தொகுதிகளிலும் குறைவான வாக்கு வித்தியாசம் கிடைக்கும் தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் நீக்கப்பட்டிருக்கின்றனர்!

விளைவாக, 2023-ம் ஆண்டுக்கு முந்தைய தேர்தல்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகள், பாஜகவின் வாக்கு குளறுபடியை அப்பட்டமாக காட்டிக் கொடுத்ததை போன்ற நிலை தற்போது இல்லை. பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில்தான் பாஜக வென்றிருக்கிறது.

இதற்கு அர்த்தம் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பெரியளவில் நீக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். குறிப்பாக காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் 6 தொகுதிகளில், மூன்று வெற்றி 2000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பெற்றவை. அதிலும் இரண்டில் 1000-க்கும் குறைவான வித்தியாசம். அதிலும் ஒன்றில் 500-க்கும் குறைவான வித்தியாசம்.

இன்னொரு பக்கத்தில் பிரணாய் ராய், சுயேச்சை வேட்பாளர்களுக்கான வாக்குகள் கடந்த முறை இருந்ததை விட அதிகமாக NDA-வுக்கு சென்றிருப்பதாக கூறுகிறார். போலவே ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியின் வாக்குகள் பிரஷாந்த் கிஷோரின் கட்சியான ஜன் சுராஜுக்கு சென்றதாகவும் சொல்கிறார். இது முக்கியமான, ஆபத்தான உண்மையை சொல்கிறது. சிறு கட்சிகளையும் சுயேச்சைகளையும் மக்கள் நாடாமல், பெயர் தெரியும் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் ஆகியவற்றுக்குதான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்கிற ஆபத்துதான் அது.

கிட்டத்தட்ட அமெரிக்காவில் இருக்கும் இரு கட்சி முறை! இடதுசாரி சோரான் மம்தானியாகவே இருந்தாலும் ஜனநாயக கட்சி வேட்பாளராகிதான் அமெரிக்காவில் ஜெயிக்க முடியும்.

வாக்குரிமை பறிபோகும் கவலையோடு தேர்தலில் எவரும் போட்டி போடும் வாய்ப்பும் திட்டமிட்டு பறிக்கப்படுவது பற்றியும் நாம் கவலை கொள்ள வேண்டும்.

பிகாரில் பாஜக பெற்ற வெற்றிக்கு SIR காரணம் என சொல்ல முடியாது. இல்லை எனவும் சொல்லி விட முடியாது. வாக்கு இயந்திர குளறுபடி என சொல்லவும் முடியாது. இல்லை என்றிடவும் முடியாது. எதிர்க்கட்சியின் கூட்டணி குளறுபடி என சொல்ல முடியாது. ஆனால் அந்த விஷயத்தை புறம் தள்ளிவிடவும் முடியாது. தேர்தலுக்கு முன் கொடுக்கப்பட்ட 10,000 ரூபாய்தான் காரணம் என சொல்லி விடவும் முடியாது. மறுத்திடவும் சொல்ல முடியாது. இதுதான் பாஜக – ஆர்எஸ்எஸ்ஸின் நுட்பம்!

அசகாய திருடன் ஒருவன் இருக்கிறான் எனில், அவன் முதலில் Act of Deception-ல் கரை கண்டிருப்பான். அடுத்ததாக ஒரு திருட்டை நிகழ்த்த தேவையான எல்லாவற்றையும் யோசித்து, கனகச்சிதமாக செய்து முடித்திருப்பான். அவனுடைய பணியில், இரண்டையும் கலப்பதுதான் திருடனின் வெற்றியின் ரகசியம்! கிட்டத்தட்ட ஒரு Magician போல!

நம் கவனத்தை சம்பந்தமில்லாத ஒன்றில் குவித்து, வேறு பல விஷயங்களை திரைமறைவில் செய்து, இறுதியில் ‘ஜீபூம்பா’ என மாயாஜாலத்தை அரங்கேற்றுவான். அவனுடைய பணியில் அலட்சியம் என்பது துளியும் இருக்காது. இருக்க முடியாது. கரணம் தப்பினால் மரணம் என்கிற பதற்றம்தான் அவனது ஒவ்வொரு வித்தையின் வெற்றிக்கும் ரகசியமாக இருக்கும்.

அத்தகைய அரங்கேற்றம்தான் பாஜக பிகாரில் நிகழ்த்தியிருக்கிறது. பாஜக இத்தகைய வித்தையில் கில்லாடி. பாஜகவின் பல்லாயிரம் வருட சித்தாந்த பாரம்பரியமே அத்தகைய கனகச்சித திருட்டுத்தனம்தான்.

ஆனால் நமக்கு?

சில வருடங்களாக செயற்பாட்டாளர்கள் சொல்லி வரும் முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. மொத்த அரசு இயந்திரமும் பாஜகவால் கைப்பற்றப்பட்டுவிட்ட நிலையில், தேர்தல்களை கைவிட்டு எதிர்க்கட்சிகள் களம் காண வேண்டும் என்பதே அந்த விஷயம். பரகலா பிரபாகர் இதை சொல்லி இருக்கிறார். ஆனால் நம்மவர்களுக்கு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை!

பிகார் தேர்தல் முடிவுக்கு சற்று முன்பு ஆனந்த் டெல்டும்டே ஸ்க்ரால் இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பிகார் தேர்தல் முடிவுக்கு பின் என்ன நேருமென அவர் கணித்தாரோ அதேதான் நடந்திருக்கிறது. ஓர் அறிஞனின் மகத்துவம் இதுதான். எவருக்கும் முன்கூட்டியே சமூகப் போக்கை அவதானிக்கும். அந்த அவதானிப்பை மறுத்து அவைப்புலவர்களின் பாடல்களுக்கு மயங்கும்போது, பிகார் தோல்வி போன்றவைதான் நேரும்.

‘தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, தேர்தல் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் ஊடக சந்திப்புகளையும் கூட்டங்களையும் நடத்திவிட்டு, தேதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களை அறிவிப்பது என்பது, அந்த தேர்தல் முறைகேடுகளை எதிர்க்கட்சிகள் சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக புரிந்து கொள்ளப்படாதா?’ எனக் கேட்கிறார் ஆனந்த் டெல்டும்டே.

எதிர்க்கட்சிகள் ‘மரங்கள் இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார்களே தவிர, காடு அழிக்கப்படுவதை காணத் தவறுகிறார்கள்’ என்கிறார். இந்தியாவில் இன்னும் ‘ஜனநாயகம் இருப்பதாக நம்புவதுதான் எதிர்க்கட்சிகள் செய்யும் மன்னிக்க முடியாத தவறு’ என்கிறார் அவர்.

‘தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதே ஒரு மாபேரும் சமூக ஒத்துழையாமை இயக்கத்தை நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தியிருக்க வேண்டும்’ என்கிறார் டெல்டும்டே. அதிலும் சுவாரஸ்யமாக ’சமூக இயக்கங்களுடன் இணைந்து எதிர்க்கட்சிகள் நடத்த வேண்டும்’ என்கிறார் டெல்டும்டே.

தெரிந்தோ தெரியாமலோ ஏதோவொரு வகையில் பாஜகவின் பாசிசத்துக்கு நடைமுறைப்பூர்வமான ஏற்பை எதிர்க்கட்சிகள் வழங்கி வருகின்றன. அதற்கு அடிப்படையான காரணம், தேர்தலை தாண்டிய அரசியல் எது குறித்தும் எதிர்க்கட்சிகளுக்கு பார்வை இல்லை. அணுக்கம் இல்லை. இயக்க அரசியல்களை ஆதரிப்பதும் இல்லை.

ஆர்எஸ்எஸ் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வதை தேர்தல் அரசியல் கொண்டும், தேர்தல் அரசியலின் சிந்தையிலிருந்து பேசப்படும் அரங்கக் கூட்டங்களை கொண்டும் யூட்யூப் பதிவர்களை கொண்டும் சமூகதள களமாடல்களை கொண்டும் வீழ்த்தி விட முடியுமென நினைப்பது பேரபத்தம்.

பிகாரின் வரலாறு, சமூக இயக்கங்களுக்கும் போராட்ட இயக்கங்களுக்கும் சமூகநீதி இயக்கங்களுக்கும் பெயர் பெற்றது. அவை எல்லாவற்றையும் வெறுமனே தேர்தல் வெற்றியாகவும் தேர்தல் அரசியலாகவும் சுருக்க முயன்றதன் விளைவுதான் பாஜக பிகாரில் நிலைபெறும் வாய்ப்பு தற்போது உருவாகியிருப்பது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்பதெல்லாம் எப்படி ஆபத்தோ அதே போல ஒரே அரசியல் முறை என்பதும் ஆபத்தைத்தான் வரவழைக்கும் என்பதற்கு பிகார் முடிவு மற்றுமோர் சாட்சி.

அதிகாரவர்க்கம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் எல்லாமும் கைப்பற்றப்பட்ட பிறகு, தேர்தலில் போட்டியிடுவது என்பது சர்க்கஸ் கூண்டுக்குள் குச்சி ஆட்டுபவனின் தன்மைக்கு இயங்கும் சிங்கத்தை போல்தான் கட்சிகளை மாற்றும். ஒரு கட்டத்தில் எல்லா கட்சிகளையும் (மறைமுகமாகவேனும்) இயக்கும் கட்சியாக பாஜக நிலைபெறும்.

இப்போதும் கபில் சிபல் போன்றவர்கள் மக்களை சந்தித்து பாஜக பற்றிய விஷயங்களை அம்பலப்படுத்தும் தளம் உருவாக்க வேண்டும் என பேசுகிறார்கள். அவர்களும் நேரடியாக களத்தில் ஆர்எஸ்எஸ்ஸை எதிர்கொண்டு நிற்க வேண்டும் என்பதே நம் விருப்பமும் கூட.

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் ராகுல் காந்தி போராட்டம் நடத்தவிருப்பதாக சொல்லப்படுகிறது. அது தேர்தல் வெற்றிக்கா, இந்துத்துவ அழிப்புக்கா என்பதுதான் கேள்வி.

ஹிட்லர்கள் தேர்தல்களில் வீழ்த்தப்படுவதில்லை!

-RAJASANGEETHAN