418 – விமர்சனம்
நடிப்பு: சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்யராஜ் வீரபத்தினி, ப்ரீத்தி பகடலா, ஷஷாங்க் பாட்டீல், ஸ்ரீவைஷ்ணவ், ரமேஷ் இந்திரா மற்றும் சிலர்
இயக்கம்: கீர்த்தன் நடாகௌடா
ஒளிப்பதிவு: தினேஷ் திவாகரன்
படத்தொகுப்பு: அகுல் அவினாஷ்
இசை: வெங்கி ஜிஜி
தயாரிப்பு வடிவமைப்பு: உல்லாஸ் ஹைதூர்
தயாரிப்பு: ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ ரவிசங்கர் யலமஞ்சிலி, நவீன் யெர்னேனி
வழங்குபவர்: பிரசாந்த் நீல்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா (டி’ஒன்), அப்துல் நாசர்
2020ஆம் ஆண்டு. ’கோவிட்’ தொற்றுநோய் அபாயகரமாகப் பரவுவதைத் தடுக்கும் ஓர் முயற்சியாக ஒன்றிய அரசு ’பொதுமுடக்கம்’ (Lockdown) அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாக, கர்நாடக மாநிலத்தின் கடலோரப் பகுதியில் உள்ள வேதகிரி என்ற தொலைதூர ஊரில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள ‘VIMS’ என்ற மருத்துவக் கல்லூரியில், இப்படக்கதை துவங்குவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
முதலாமாண்டு படிப்பில் சேர்ந்திருக்கும் புதிய மாணவர்கள் இந்த மருத்துவக் கல்லூரிக்கு முதன்முதலாக வருகிறார்கள். அவர்களில், வெளியூரிலிருந்து அம்மா, அப்பாவுடன் வந்திருக்கும் விவேக் சங்கர் (சூர்ய ராஜ் வீரபத்தினி) என்ற மாணவரும் ஒருவர்.
வழக்கமான ‘பாய்ஸ் ஹாஸ்டல்’ வெளியூர் மாணவர்களால் நிரம்பிவிட்டதால், முன்பு மனநலக் காப்பகமாக இருந்து, பயங்கரமான கொலைச் சம்பவம் காரணமாக பல ஆண்டுகள் மூடப்பட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில், இட பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக இப்போது ’திடீர் பாய்ஸ் ஹாஸ்டல்’ ஆக மாற்றப்பட்டிருக்கும் பழைய கட்டிடத்தின் 417ஆம் எண் அறையில், விவேக் தங்கிப் படிப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த திடீர் பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் மாணவர்களின் அம்மாக்கள் உட்பட பெண்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாது என்பது காவலாளிக்கு கல்லூரி நிர்வாகம் விதித்திருக்கும் கண்டிப்பான உத்தரவு. அதனால் விவேக்கின் அம்மா, மெயின்கேட்டுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டுவிட, விவேக் மட்டும் விடை பெற்றுக்கொண்டு உள்ளே போகிறார்.
விவேக்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 417ஆம் எண் அறை, மாணவர் ரோஹித்துக்கும் (சரண் லக்கராஜு) ஒதுக்கப்பட்டிருப்பதால், இருவரும் அறைத் தோழர்கள் ஆகிறார்கள். இவர்களது அறைக்கு அடுத்த அறையான 418ஆம் எண் அறை பூட்டப்பட்டிருக்கிறது. “கடந்த 15 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் அந்த அறையைத் திறக்கவோ, உள்ளே நுழையவோ, முயற்சி செய்யக் கூடாது” என்று இவர்களுக்கு கல்லூரியின் ஆலோசகர் (ரமேஷ் இந்திரா) கண்டிப்புடன் எச்சரித்திருக்கிறார்.
இந்நிலையில், இரவில், பக்கத்து அறையில், அதிர்ந்து நடக்கும் ஒரு பெண் அணிந்திருக்கும் சலங்கைகளின் சத்தம், ஒரு தாயின் ஏக்கம் நிறைந்த தாலாட்டுப் பாட்டு போன்ற அமானுஷ்ய நிகழ்வுகள் உள்ளிட்ட மர்மமான அனுபவங்கள் விவேக்குக்கு ஏற்படுகின்றன. அங்கு அச்சமூட்டும் அமானுஷ்ய சக்தி இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கும் விவேக், இது குறித்து தன் அறைத்தோழர் ரோஹித்திடம் சொல்லுகிறார். ஆனால், ரோஹித் இதை நம்பவில்லை. எனினும், உண்மையைக் கண்டறியத் தீர்மானித்த விவேக், இந்த விஷயத்தைத் தொடர்கிறார். இதனால் நிஜத்திற்கும் மாயத்தோற்றங்களுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் அவர், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.
ஒரு கட்டத்தில் விவேக்கும், ரோஹித்தும் அவர்களது நண்பர்களும் இணைந்து அந்தப் பூட்டிய ‘அறை எண் 418’ கதவைத் திறக்கும்போது ஒரு கொடூரமான விபரீதம் உருவாகிறது…
இந்த அமானுஷ்யங்களின் பின்னணியைத் தேடும்போது, 2005-ல் பலியான தேவிகா (சைத்ரா ஆச்சார்) என்ற நாட்டுப்புற நாடகக் கலைஞரின் திடுக்கிடும் மர்மப் பின்னணி தெரிய வருகிறது.
தேவிகாவின் பின்னணி என்ன? அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? அவர் எப்படி இறந்தார்? ஆவியான பிறகும் எதற்காக இங்கேயே இருக்கிறார்? அவரால் விவேக், ரோஹித், அவர்களது நண்பர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்பட்டன? என்பன போன்ற கேள்விகளுக்கு திகிலூட்டும் திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘418’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகி தேவகியாக சைத்ரா ஆச்சார் நடித்திருக்கிறார். நாட்டுப்புற நாடகக் கலைஞராக, ஒரு செல்வந்தர் வீட்டு இளைஞரை காதல் திருமணம் செய்துகொண்டவராக, குழந்தை பாக்கியம் தள்ளிப்போவதால் பிள்ளைப்பேறுக்காக ஏங்கும் தாயாக, இந்த மன உளைச்சலில் அவதியுறும் மனநல நோயாளியாக, பின்னர் கொலைவெறி தாண்டவமாடும் பேயாக… என பல பரிமாணங்களைக் கொண்ட தனது கதாபாத்திரத்தில் சிறப்பாகவும் தத்ரூபமாகவும் நடித்து, மொத்தப் படத்தையும் ஒற்றை நபராகப் பொறுப்பாகத் தாங்கிப் பிடித்திருக்கிறார்.
அமானுஷ்ய மர்மத்தைத் தேடிப் போகும் மாணவர் விவேக் சங்கராக சூர்ய ராஜ் வீரபத்தினி நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, பல்வேறு உணர்வுகளுக்கு ஆட்படக் கூடியவராக அருமையாக நடித்திருக்கிறார்.
பூட்டிக்கிடக்கும் 418ஆம் எண் அறைக்குள் போயே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து, அதனால் பல சிக்கல்களைச் சந்திக்கும் சாய்ஷாவாக நடித்திருக்கும் ப்ரித்தி பகடலா, பார்வையாளர்களின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்.
ரோஹித்தாக வரும் சரண் லக்கராஜு, கல்லூரி ஆலோசகராக வரும் ரமேஷ் இந்திரா, மற்றும் ஷஷாங்க் பாட்டீல், ஸ்ரீவைஷ்ணவ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
நாட்டுப்புற நாடகக் கலைஞர், குழந்தைப் பேறு பிரச்சனை ஆகிய இரண்டு விசயங்களை பிரதானமாக வைத்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் கீர்த்தன் நடாகௌடா. படத்தின் மையமான பெண்ணை நாட்டுப்புற நாடகக் கலைஞர் என்று வைத்திருப்பதால் பல காட்சிகளை நியாயப்படுத்த முடிகிறது. எல்லா பேய்க் கதைகளைப் போலவே இதுவும் முற்றிலும் நம்ப முடியாத கதை; என்ற போதிலும், இது போன்ற கதைகள் ஏராளமாக நாட்டுப்புறங்களில் புழங்குகின்றன என்பதை இப்படம் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
பல இந்திய திகில் படங்களைப் போலவே, ‘418’ படமும் அநீதி இழைக்கப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி பழிவாங்க அல்லது நீதிக்காகத் திரும்புவதை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதைக்கரு இயல்பாகவே ஒரு பிரச்சனையல்ல. எந்த மொழியிலும் உள்ள சில சிறந்த திகில் படங்கள் இதன் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த ஆவியின் நோக்கத்தின் சிக்கலான தன்மையை படம் முழுமையாகக் கையாளும்போது மட்டுமே இந்தக் கதைக்கரு வேலை செய்கிறது. தேவிகாவின் ஆவி நீதியைத் தேடுகிறதா? பழிவாங்கலையா? அமைதியையா? அவர் ஒரு பாதிக்கப்பட்டவரா? அல்லது கொடூரமானவராக மாறிவிட்டாரா? என்பதை முழுமையாக தெளிவுபடுத்தாதது இப்படத்தில் பெருங்குறை.
இசையமைப்பாளர் வெங்கி ஜிஜி, ஒளிப்பதிவாளர் தினேஷ் திவாகரன், படத்தொகுப்பாளர் அகுல் அவினாஷ் உள்ளிட்டோர் ஒரு திகில் படத்துக்குத் தேவையான நேர்த்தியான தொழில் நுட்பங்களை வழங்கியிருக்கிறார்கள்.
‘418’ – திகில் கதை விரும்பிகளுக்கு நிச்சயம் பிடிக்கும்!
ரேட்டிங்: 3.5/5
