வங்காள விரிகுடா – விமர்சனம்

நடிப்பு: குகன் சக்கரவர்த்தியார், அலினா ஷேக், பொன்னம்பலம், வாசு விக்ரம், வையாபுரி மற்றும் பலர்

இயக்கம்: குகன் சக்கரவர்த்தியார்

இசை: குகன் சக்கரவர்த்தியார்

தயாரிப்பு: குகன் சக்கரவர்த்தியார்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

நாயகன் குகன்சக்ரவர்த்தியார், தற்கொலை செய்துகொள்ளப் போகும் முன்னாள் காதலியைக் காப்பாற்றி அவரோடு குடும்பம் நடத்துகிறார். அதற்காக ஒரு கொலையும் செய்கிறார். அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. அவை என்னென்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதை விவரிக்கும் படம்தான் ’வங்காள விரிகுடா’.

வங்காள விரிகுடா என்று பெயர் வைக்கக் காரணம்,பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் துயிலும் இடம் என்பதுதான்.

நாயகனாக நடித்திருக்கும் குகன் சக்ரவர்த்தியார், தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகர்களை நினைவுபடுத்தும்படி நடித்திருக்கிறார். ஆடல், பாடல், சண்டை என எல்லாவற்றிலும் கலந்துகட்டி அடித்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருப்பது மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டைப்பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணிப் பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புறப் படப்பிடிப்புத் தள நிர்வாகி, தயாரிப்பு, இயக்கம் ஆகிய அனைத்தையும் அவரே செய்திருக்கிறார். அதனால் அவர் விரும்பியதை எல்லாம் செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அலினா ஷேக், முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் பொன்னம்பலம், வையாபுரி, வாசுவிக்ரம் ஆகியோரும் கொடுத்த வேலையைக் குறைவின்றி செய்து படத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர்,எம்.ஜி.ஆர்,அப்துல்கலாம் ஆகியோரைப் பற்றிய பாடல் இடம்பெற்று கவனம் ஈர்க்கிறது. இசையமைத்து பாடல் எழுதி பாடியிருப்பதும் குகன் சக்ரவர்த்தியாரே.

கதை,திரைக்கதையிலும் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். அனுபவஸ்தர்களே தயங்கக்கூடிய திரைக்கதையை தன்னம்பிக்கையுடன் எழுதி கையாண்டிருக்கிறார். ஒரு நல்ல காதல்கதையாகத் தொடங்கி மர்மம், திகில் ஆகியனவற்றில் பயணிக்கிறது திரைக்கதை. ஒரு சில சறுக்கல்கள் இருந்தாலும் திரைக்கதையில் இருக்கும் திருப்பங்கள் நிமிர வைக்கின்றன.
அப்துல்கலாமின் ’கனவு காணுங்கள்’ எனும் கருத்தை மையமாகக் கொண்டு அண்ணா,கலைஞர்,ஸ்டாலின்,அப்துல்கலாம் போல் அனைவரும் வாழுங்கள் என்கிற கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் குகன் சக்ரவர்த்தியார்.

‘வங்காள விரிகுடா’ – ஒருமுறை பார்க்கலாம்!

ரேட்டிங் 2.75/5