தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்

நடிப்பு: ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜென்சன் திவாகர், ஜெய்வந்த், சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனுராஜ், ஷரத், சாவித்திரி மற்றும் பலர்

இயக்கம்: நித்திஷ் சகாதேவ்

எழுத்து: சஞ்சோ ஜோசப், நித்திஷ் சகாதேவ் மற்றும் அனுராஜ் ஓபி

கூடுதல் வசனம்: விஜயகுமார் சோலைமுத்து

ஒளிப்பதிவு: பப்லு அஜு

படத்தொகுப்பு: அர்ஜுன் பாபு

இசை: விஷ்ணு விஜய்

கலை இயக்கம்: சுனில் குமரன்

சண்டை அமைப்பு: பிரபு ஜாக்கி

தயாரிப்பு: ‘கேஆர் குரூப்’ கண்ணன் ரவி

இணை தயாரிப்பு: தீபக் ரவி

பத்திரிகை தொடர்பு: சதீஷ் S2 மீடியா

கம்பம் அருகே இருக்கும் மாட்டிப்புதூர் என்ற கிராமத்தின் ஊராட்சித் தலைவராக இருப்பவர் ஜீவரத்தினம் (ஜீவா). ஊரில் யாருக்கு, என்ன பிரச்சனை என்றாலும், உடனே அதில் தலையிட்டு தீர்த்து வைக்கும் செல்வாக்கு மிக்க மனிதர் அவர். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வேறு நடக்க இருப்பதால், தனது கட்சிக்கு அதிக வாக்குகள் பெறும் முனைப்பில், நல்லது கெட்டது எல்லா விஷயங்களிலும் ஆஜராகி, முன்நின்று காரியங்களை நல்லபடியாக முடித்துக் கொடுத்து ஊர்மக்களிடம் நற்பெயரை அதிகம் சம்பாதித்து வருகிறார்.

அந்த ஊரில் வசிக்கும் இளவரசுவின் (இளவரசு) மகள் சௌமியாவுக்கு மறுநாள் காலை பத்தரை மணிக்குத் திருமணம். அதற்கான வேலைகளை ஊராட்சித் தலைவர் ஜீவரத்தினம் முன்நின்று ஓடியோடி கவனிக்கிறார். தனது சேவை தன் கட்சிக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பதோடு, சௌமியாவைத் தன் தங்கை போல் அவர் கருதுவதாலும், இத்திருமண விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்று மிகுந்த ஈடுபாடு காட்டுகிறார்.

இளவரசுவுக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரரான மணிக்கும் (தம்பி ராமையா) முன்பகை இருந்து வருகிறது. எனவே, சௌமியாவின் திருமணத்துக்காக இளவரசுவின் வீடு விழாக்கோலம் பூண்டிருப்பது மணிக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், உடல்நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்த மணியின் அப்பா காலமாகிறார்.

ஒரு வீட்டில் திருமணம், பக்கத்துப் பகை வீட்டில் இழவு என்கிற இக்கட்டான நிலையை சுமுகமாகத் தீர்க்க முயற்சி செய்கிறார் ஜீவரத்தினம். காலை பத்தரை மணிக்கு சௌமியாவின் திருமணம் என்பதால், அதற்கு முன்போ அல்லது பின்போ மணியின் அப்பாவின் இறுதிச் சடங்குகளை முடித்து விடலாம் என்று ஆலோசனை கூறுகிறார் ஜீவரத்தினம். ஆனால் மணியோ, தனது அப்பாவின் இறுதி ஊர்வலத்தை, (சௌமியாவின்) முகூர்த்த நேரத்தில் தான் நடத்துவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். சௌமியாவின் திருமணத்தை இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாமா? என்றால், வெளியூரிலிருந்து மாப்பிள்ளை வீட்டாரெல்லாம் ஏற்கெனவே கிளம்பி வந்து லாட்ஜில் தங்கியிருப்பதால், குறிப்பிட்ட நேரத்தில் தன் மகளின் திருமணம் தனது வீட்டில் நடந்தே ஆக வேண்டும் என்று இளவரசு ஒற்றைக்காலில் நிற்கிறார்.

இருதலைக் கொள்ளி எறும்பாக ஜீவரத்தினம் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று மணமகள் சௌமியா காணாமல் போகிறார். அதன்பிறகு என்ன நடந்தது? சௌமியா எங்கே போனார்? என்ன ஆனார்? இளவரசுவுக்கும், மணிக்கும் இடையிலான முன்பகைக்கு காரணம் என்ன? ஊராட்சித் தலைவர் ஜீவரத்தினம் விரும்பியபடி இரு வீட்டு நிகழ்வுகளும் சுமுகமாக நடந்தேறியதா? என்பன போன்ற கேள்விகளுக்கு கலகலப்பூட்டும் காமெடி சிதறல்களுடன் விடை அளிக்கிறது ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கிராம ஊராட்சித் தலைவர் ஜீவரத்தினமாக ஜீவா நடித்திருக்கிறார். காதல் இல்லை; டூயட் இல்லை; அதிரடி ஆக்சன் காட்சிகள் இல்லை. என்றாலும், கதைக்குள் நாயகனாக கச்சிதமாகப் பொருந்தி ரசிக்க வைத்திருக்கிறார். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவருடைய வீம்புக்கு இடையில் சிக்கிக் கொள்வதோடு, எதிர்க்கட்சி நபரின் தொந்தரவுக்கும் உள்ளாகும்போது ஜீவா படும் பாடு சிரிப்பலையை வரவழைக்கிறது. வழக்கமாக நகைச்சுவை நாயக கதாபாத்திரத்தில் எளிதாக ஸ்கோர் செய்யும் ஜீவா, இந்தப் படத்தில் நகைச்சுவையைத் தாண்டி, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் சிறப்பாக நடித்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது போன்ற கதைகளையும், கதாபாத்திரங்களையும் எதிர்காலத்தில் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடித்தால், அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.

இளவரசு என்ற கதாபாத்திரத்தில் இளவரசு நடித்திருக்கிறார். மகளின் திருமணம் நின்றுவிடுமோ, பக்கத்து வீட்டு மணி நினைத்ததைச் சாதித்துவிடுவாரோ என்ற பயத்தில் பதைபதைப்புடன் சுற்றும் இளவரசு அவருக்கென வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்திப் போயிருக்கிறார்.

மணி என்ற கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடித்திருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரரிடம் பகை கொண்டு ரகளைகள் செய்வது, நாக்கை துருத்திக்கொண்டு சாமியாடுவது என தன் அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்தைச் சுவாரஸ்யமாக்கி இருக்கிறார்.

மணமகள் சௌமியாவாக பிரார்த்தனா நாதன் நடித்திருக்கிறார். சுற்றியிருக்கும் ஆண்கள் கொடுக்கும் அழுத்தத்தினால் பாதிக்கப்படும் பெண்ணாக நல்லதொரு பங்களிப்பைத் தந்திருக்கிறார். ”எனக்குக் கல்யாணம் நடக்கிறது உங்களுக்கு முக்கியமில்ல. உங்களுக்கு உங்க பகைதான் முக்கியம்” என உடைந்து வசனம் பேசுமிடத்தில் படம் பேசும் மையக்கருவை உணர்த்தி சிந்திக்கவும் வைக்கிறார்.

எதிர்க்கட்சிக்காரராக வந்து, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக வில்லத்தனம் செய்யும் ஜென்சன் திவாகர், மணமகனாக வரும் சுபாஷ் கண்ணன், கன்னியாகுமரி வட்டார வழக்கில் சரளமாகப் பேசும் சர்ஜின் குமார், மற்றும் ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சரத், சாவித்திரி உள்ளிட்டோரும் தத்தமது பங்குக்கு சிரிக்க வைத்து, ரசிக்க வைக்கிறார்கள்.

சஞ்சோ ஜோசப், நித்திஷ் சகாதேவ் மற்றும் அனுராஜ்.ஓ.பி ஆகியோரது திரைக்கதை எளிமையான கதைக்கருவுக்கு மிகப்பெரிய வலிமை சேர்த்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான வகையில் வசனங்கள் எழுதப்பட்டிருப்பது கவனிக்கத் தக்க சிறப்பம்சமாகும். படம் முழுவதும் நகைச்சுவையாக இருந்தாலும், அதில் பேசப்பட்டிருக்கும் சில விசயங்கள் சிந்திக்க வைக்கிறது.

இயக்குநர் நித்திஷ் சகாதேவ், எதார்த்தமான வாழ்வியல் சம்பவங்களை மிக நேர்த்தியான காட்சிகள் மூலம் நகைச்சுவையாக சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, படம் முழுவதையும் மலையாளப் படம் போன்று கையாண்டது தமிழ் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

பப்லு அஜுவின் ஒளிப்பதிவு, அர்ஜுன் பாபுவின் படத்தொகுப்பு, விஷ்ணு விஜய்யின் பாடலிசை மற்றும் பின்னணி இசை ஆகியவை முக்கியத் தூண்களாக நின்று, இந்தப் படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளன.

’தலைவர் தம்பி தலைமையில்’ – நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவா நடிப்பில் வெளியாகியிருக்கும் சிறந்த பொழுதுபோக்கு வெற்றிப்படம்; குடும்பத்துடன் அவசியம் கண்டு களித்து, பொங்கல் விடுமுறையை மகிழ்வுடன் கொண்டாடலாம்!

ரேட்டிங்: 4.25/5.