வா வாத்தியார் – விமர்சனம்
நடிப்பு: கார்த்தி, கிருத்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், கருணாகரன், ஷில்பா மஞ்சுநாத், ரமேஷ் திலக், நிழல்கள் ரவி, யார் கண்ணன், நிவாஸ் ஆதித்தன், பி.எல்.தேனப்பன், வித்யா மற்றும் பலர்
கதை & இயக்கம்: நலன் குமாரசாமி
ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ISC
படத்தொகுப்பு : வெற்றி கிருஷ்ணன்
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் : விவேக், முத்தமிழ், கெலிதீ, துரை
நடன அமைப்பு : சாண்டி / எம். ஷெரிப்
கலை இயக்கம் : டி.ஆர்.கே.கிரண்
தயாரிப்பு : ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா
இணை தயாரிப்பாளர் : நேஹா ஞானவேல்ராஜா
பத்திரிகை தொடர்பு : யுவராஜ்
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில், குறைந்த எண்ணிக்கையில் திரைப்படங்கள் இயக்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பார்வையையும் தன் பக்கம் இழுத்தக்கொண்ட சாதனையாளர் இயக்குநர் நலன் குமாரசாமி. ஆரம்பத்தில் சிறுசிறு குறும்படங்களை இயக்கி, கவனம் ஈர்த்த அவர், 2013-ல் வெளிவந்த தனது முதல் திரைப்படமான ‘சூது கவ்வும்’ திரைப்படத்தில் ‘டார்க் காமெடி’ பாணியை அறிமுகப்படுத்தி, புதிய டிரெண்டை உருவாக்கி, ட்ரெண்ட் செட்டர் என்ற பெயரோடு பெரும் வெற்றி பெற்றார். அதேபோல், அவரது இயக்கத்தில் 2016-ல் வெளிவந்து, அனைத்துத் தரப்பினராலும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட ‘காதலும் கடந்து போகும்’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான ஃபீல் குட் படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்த இரண்டே இரண்டு படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நலன் குமாரசாமி, 9 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் தான் ‘வா வாத்தியார்’. கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் இந்தப்படம், பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி பொங்கல் ரிலீஸாக தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
’சூப்பர் ஹீரோ’ என்ற கான்செப்டை வைத்து படம் எடுக்க எண்ணிய இயக்குநர் நலன் குமாரசாமி, அதற்காக வேற்றுகிரகவாசியான ‘சூப்பர் மேன்’, சிலந்தியின் குணநலன்கள் கொண்ட ‘ஸ்பைடர் மேன்’ போன்ற அதீத கற்பனைப் பாத்திரங்களைத் தொடாமல், தமிழ்நாட்டில், தமிழ் திரையில், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் பராக்கிரமசாலியாக, அசகாய சூரனாகத் திகழ்ந்து, அவர்களது உணர்வில் கலந்துவிட்ட ’சூப்பர் ஹீரோ’ எம்.ஜி.ஆரை புத்திசாலித்தனமாகக் கையில் எடுத்திருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் வைத்த செல்லப் பெயர் தான் ’வாத்தியார்’. மீண்டும் ’வாத்தியார்’ ஏதோவொரு வடிவத்தில் திரும்பி வந்து சூப்பர் ஹீரோவாக சாகசங்கள் புரிந்தால் எப்படி இருக்கும்? என்ற நலன் குமாரசாமியின் கற்பனையே ‘வா வாத்தியார்’ திரைப்படம். மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்…

மாசிலா என்ற (கற்பனை) நகரத்தில் பூமிப்பிச்சை (ராஜ்கிரண்), அவரது மகன் ஜெய் கணேஷ் (பி.எல்.தேனப்பன்), ஜெய் கணேஷின் மனைவி வித்யா (சுசிலா), பூமிப்பிச்சையின் நண்பர் பாபு (ஆனந்தபாபு) உள்ளிட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பூமிப்பிச்சையும், பாபுவும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள்.
1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆரின் உடல்நலம் குன்றி வருவதாகக் கேள்விப்படும் இந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கவலை கொள்கிறார்கள். எம்.ஜி.ஆரின் முகத்தைப் பார்த்தாவது ஆறுதல் அடையலாம் என்று நினைக்கும் இவர்கள், அவர் நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தின் ரீலை வாங்கி வந்து, உள்ளூர் திரையரங்கில் கொடுத்து, திரையிடச் சொல்லி படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு இரண்டு தகவல்கள் கிடைக்கின்றன. ஒன்று, எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார் என்ற துயரமான தகவல். மற்றொன்று, எம்.ஜி.ஆர் இறந்த அதே நேரத்தில் பூமிப்பிச்சைக்கு ஒரு பேரன் பிறந்திருக்கிறான்; அவனது உள்ளங்காலில் எம்ஜிஆரின் உள்ளங்காலில் இருப்பதைப் போலவே மச்சம் இருக்கிறது என்ற மகிழ்ச்சியான தகவல். இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் பூமிப்பிச்சை, எம்.ஜி.ஆர் தான் தனக்குப் பேரனாகப் பிறந்திருப்பதாக நினைத்துப் பூரித்து, அக்குழந்தைக்கு ’ராமேஸ்வரன்’ (சுருக்கமாய் ‘ராமு’) என பெயர் சூட்டி, அதை திரையில் பார்த்த எம்.ஜி.ஆர் போலவே நேர்மை தவறாத போலீஸ் அதிகாரியாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்.
தாத்தாவின் விருப்பப்படியே வளர்ந்து ஆளாகும் ராமேஸ்வரன் (எ) ராமு (கார்த்தி) போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறார். அதே நேரத்தில் தாத்தா விரும்புகிறபடி எம்.ஜி.ஆர் வழியில் நேர்மையாக நடந்தால், வசதியாக வாழ முடியாது என்ற முடிவுக்கு வரும் இன்ஸ்பெக்டர் ராமு, தாத்தாவுக்குத் தெரியாமல் ‘நம்பியாராக’ மாறி, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் போன்ற தீய வழிகளில் பயணித்து பெரிய அளவில் பணம் சம்பாதிக்கிறார். விளைவாக, ஒரு கட்டத்தில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
ராமுவின் உண்மை முகம் தாத்தா பூமிப்பிச்சைக்குத் தெரிய வர, அவர் மனமுடைந்து இறந்துபோகிறார். இந்த சமயத்தில், மறைந்த எம்.ஜி.ஆரின் தரிசனம் திடீரென்று ராமுவுக்குக் கிடைக்கிறது. அதன்பிறகு என்ன நடந்தது? ராமுவுக்குள் புகுந்த எம்.ஜி.ஆர் என்னென்ன சாகசங்கள் செய்தார்? எந்தெந்த தீமைகளை விரட்டியடித்தார்? இவற்றை மற்றவர்கள் எப்படி புரிந்து கொண்டார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு மெய்சிலிர்க்கும் வண்ணம் அட்டகாசமான ஃபேண்டஸி பாணியில் விடை அளிக்கிறது ‘வா வாத்தியார்’ என்ற வித்தியாசமான திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் ராமேஸ்வரன் (எ) ராமுவாக கார்த்தி நடித்திருக்கிறார். அவர் இதுவரை ஏற்காத அற்புதமான வேடம். பின்னி பெடலெடுத்திருக்கிறார். கொஞ்சம் வில்லத்தனமான சாயல் உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. அதனால், முதல் பகுதியில் வரும் நம்பியார்தனமான காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆர் கெட்டப்பும், அவரது சாகசங்களும் கூட கார்த்திக்குக்கு மிகவும் பொருத்தமாக இருப்பது மகிழ்வைத் தரும் ஆச்சரியம் தான். வழக்கமான தன் சுட்டித்தனம், தெனாவட்டு உடல்மொழி என கலகல முகத்தில் கவர்வதோடு, எம்.ஜி.ஆரின் உடல்மொழி, முக பாவனை, நடனம், சண்டை போன்றவற்றிலும் கூடுதல் மெனக்கெடலைப் போட்டு, அக்கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார் கார்த்தி. எம்.ஜி.ஆரின் ஸ்டைலை அப்படியே காப்பி அடிக்காமல், அவருக்குள் எம்.ஜி.ஆரின் ஆவி புகுந்தால், எப்படியெல்லாம் இயங்குவாரோ அப்படியெல்லாம் நடித்து தனது கதாபாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் நியாயம் செய்திருக்கிறார்.
நாயகி ’வூ’வாக கிருத்தி ஷெட்டி நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். ஆவிகளுடன் பேசும் சாமர்த்தியமான பெண்ணாக வருகிறார். அவர் வரும் காட்சிகளின் எண்ணிக்கை குறைவு; என்றாலும், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.
நாயகனின் தாத்தா பூமிப்பிச்சையாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக, எம்.ஜி.ஆர் கெட்டப்பிலேயே வரும் அவர், பேரனை நேர்மை தவறாத மனிதனாக வாழ வைக்க ஆசைப்பட்டு, அது முடியாமல் போகவே, நொந்துபோய் இறக்கும் காட்சியில் நம் மனதைத் தொடுகிறார்.
பெரிய தொழிலதிபர் பெரியசாமியாக வரும் சத்யராஜ், அவரது மகள் மாலினியாக வரும் ஷில்பா மஞ்சுநாத், முதலமைச்சராக வரும் நிழல்கள் ரவி, ராஜ்கிரணின் நண்பர் பாபுவாக வரும் ஆனந்தராஜ், மணியாக வரும் ஜி.எம்.சுந்தர், கோவிந்த ராமனாக வரும் கருணாகரன், ரமேஷாக வரும் ரமேஷ் திலக், மதி சோழனாக வரும் யார் கண்ணன், நிவாஸாக வரும் நிவாஸ் ஆதித்தன் உள்ளிட்டோர் தத்தமது தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நலன் குமாரசாமி. அவரது முந்தைய படங்களைப் போல இந்தப்படமும் அதன் மையக்கருத்திற்கு உண்மையாகவே உள்ளது. தனக்கே உரித்தான டார்க் காமெடித் தளத்தில், எம்.ஜி.ஆர் என்ற சூப்பர் ஹீரோவையும், அவருடைய பாப்புலரான மேனரிசங்களையும் பயன்படுத்தி, கார்த்தி மற்றும் புதுமையான காட்சிகள் மூலம் ரசிக்கத் தக்க, கற்பனைக்கு எட்டாத ஒரு பிரமாண்ட படைப்பைப் படைத்திருக்கிறார் இயக்குநர். சண்டைக் காட்சிகளில் கூட இக்கால ரத்தச்சகதிகளைப் புகுத்தாமல், எம்.ஜி.ஆர் பாணியில் வரையறைக்கு உட்பட்ட ரத்தம் சிந்தா மோதல்களைக் காட்சிப்படுத்தியிருப்பது இயக்கநரின் கூர்மையான ஆய்வுப்பணிகளை கோடிட்டுக் காட்டுகிறது. அவரது முந்தைய படங்களைப் போல இந்தப்படமும் தமிழ்த்திரை வரலாற்றில் தனித்துவத்துடன் நிச்சயம் நிலைத்து நிற்கும்.
சந்தோஷ் நாராயணன் இசையில், ”கிரேட்டஸ்ட் ஆஃப் தி கிரேட்டஸ்ட்”, ”யார் மனிதன்” ஆகிய பாடல்கள் கதையோடு பயணிக்கின்றன. சண்டைக் காட்சிகள் உட்பட முக்கியமான காட்சிகளில் தனது தரமான பின்னணி இசையால் அட்டகாசம் செய்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன், எம்.ஜி.ஆர் படப்பாணி இசையும் கதைக்குப் பக்கபலம். குறிப்பாக, ”ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…” ரீமிக்ஸ் பாடலுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது. அதுபோல், “உன்னை அறிந்தால்…”, “நான் உங்கள் வீட்டுப்பிளை…” பாடல்களின் ரீ-மிக்ஸும் பிரமாதம்.
ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு, புதுமையான ஃபிரேம்களுடன் தேவையான ரகளையான பங்களிப்பைச் செய்திருக்கிறது. கச்சிதமான படத்தொகுப்பால் காட்சிகளுக்கு செறிவூட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் வெற்றி கிருஷ்ணன்.
’வா வாத்தியார்’ – அருமையான கதைக்கரு, அதை ஹ்யூமர் கலந்து சிறப்பாக விரிவாக்கிய விதம், கார்த்தியின் அட்டகாசமான நடிப்பு, ரீ-மிக்ஸில் எம்.ஜி.ஆரின் எவர்கிரீன் பாடல்கள், தரமான தொழில்நுட்ப நேர்த்தி போன்ற காரணங்களால் நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 3.5/5
