டியர் ரதி – விமர்சனம்
நடிப்பு: சரவண விக்ரம், ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலசந்திரன், சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்ரமணியன், பசுபதி ராஜ், சரவணன் பழனிசாமி, தமிழ்செல்வன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: பிரவீன் கே மணி
ஒளிப்பதிவு: லோகேஷ் இளங்கோவன்
படத்தொகுப்பு: பிரேம் பி
இசை: எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்
கலை: ஜெய் ஜே திலீப்
தயாரிப்பு: ’இன்சோம்னியாக்ஸ் டிரீம் கிரியேஷன்ஸ் எல்எல்பி & லாக்லைன் பிக்சர்ஸ்’ மோகன மஞ்சுளா எஸ்.
வெளியீடு: உத்ரா புரொடக்ஷன்ஸ்
பத்திரிகை தொடர்பு: சக்தி சரவணன்
நாயகன் மதன் (சரவணன் விக்ரம்), சிறுவயது முதல் பெண்கள் என்றாலே பயம் – பதற்றம் மற்றும் கூச்சம் காரணமாக தலைதெறிக்க ஓடுபவர். இந்த சுபாவம் காரணமாக, அவருடைய வாழ்க்கையில் ஏற்கெனவே இரண்டு காதல் தோல்விகள் நிகழ்ந்து முடிந்துவிட்டன.
பெண்கள் விஷயத்தில் மதனுக்கு இருக்கும் எதிர்மறையான சுபாவத்தைப் போக்கும் நல்ல எண்ணத்துடன், பாலியல் தொழில் நடக்கும் ‘மசாஜ் பார்லர்’ ஒன்றுக்கு அவரை அழைத்துச் செல்லுகிறார் அவரது நண்பர் ராம் (தமிழ்செல்வன்). அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ரதி (ஹஸ்லி அமான்) அவருக்கு அறிமுகம் ஆகிறார்.
ரதியைப் பார்த்ததும் மதனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு, பரவசம் வந்துவிடுகிறது. அவருடன் இணைந்து ஒருநாள் முழுவதும் செலவழிக்க விரும்புகிறார் மதன். “அதற்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் தர வேண்டும். தவிர, வாயோடு வாய் வைத்து முத்தம் தரக் கூடாது” என்று ரதி நிபந்தனை விதிக்க, அதை மதன் ஏற்றுக்கொள்ள, இருவரும் இணைந்து ’ஒருநாள் பயண’த்தைத் தொடங்குகிறார்கள்.
இந்நிலையில், ரதியை ஒரு பெரும் கூட்டம் வெறி கொண்டு துரத்துகிறது. அவர்கள் ஏன் ரதியைத் துரத்துகிறார்கள்? ரதியின் பின்னணி என்ன? இந்த ’ஒருநாள் பயண’த்தில், பெண்கள் விஷயத்தில் மதனுக்கு இருந்த பயம் – பதற்றம் மற்றும் கூச்ச சுபாவம் நிரந்தரமாக மறைந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘டியர் ரதி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் மதனாக சரவண விக்ரம் நடித்திருக்கிறார். தொலைக்காட்சித் தொடரில் நடித்த அனுபவம் அவருக்கு ஓரளவு கைகொடுத்திருக்கிறது. ஒருசில இடங்களில் தடுமாறினாலும், ஒருவாறு சமாளித்து நடித்து, தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக, பாலியல் தொழிலாளி ரதியாக ஹஸ்லி அமான் நடித்திருக்கிறார். எளிமையான அழகு மூலமாகவும், கண்கள் மூலமாகவும் கவர்ந்திழுக்கிறார். தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை திறம்பட வழங்கியிருக்கிறார்.
காமெடி கலந்த வில்லன் வரதனாக ராஜேஷ் பாலச்சந்திரன் நடித்திருக்கிறார். அவர் தனது குழுவினருடன் சேர்ந்து பிளாக் காமெடி பண்ண முயற்சித்திருக்கிறார். சிரிப்பு தான் வர மறுக்கிறது.
நாயகனின் நண்பர் ராம் கதாபாத்திரத்தில் வரும் தமிழ்செல்வன், காட்வின் கதாபாத்திரத்தில் வரும் சாய் தினேஷ் பத்ராம், ஷெரிப் கதாபாத்திரத்தில் வரும் யுவராஜ் சுப்பிரமணியம், கிருபாகரன் கதாபாத்திரத்தில் வரும் பசுபதி ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் கதாபாத்திரத்தில் வரும் சரவணன் பழனிசாமி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திர வடிவமைப்புக்கு ஏற்ப நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
’ரொமாண்டிக் காமெடி’ ஜானரில் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரவீன் கே மணி. சில இடங்களில் குழப்பமாக இருந்தாலும், காதலைப் பற்றி சில இடங்களில் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். காதலைச் சொல்ல வருகிறேன் என்று தொடங்கி, காமம், பாலியல் தொழில், அதன் வரலாறு, பிரிட்டிஷ் கால சட்டங்கள் என வகுப்பு எடுப்பது போல விவரிக்காமல், காதலைப் பற்றி மட்டுமே பேசியிருந்தால் படம் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்திருக்கும். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி செதுக்கியிருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்க முடியும்.
எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை சில காட்சிகளை வலிமையுடன் தாங்கிப் பிடித்திருக்கிறது.
லோகேஷ் இளங்கோவனின் வண்ணமயமான ஒளிப்பதிவு, சில புதுமையான கோணங்கள் மூலம் படத்திற்கு உயர்ந்த தரத்தைக் கொடுத்திருக்கிறது.
இயக்குநர் சொல்ல நினைத்ததை திரையில் கொண்டு வருவதற்கு படத்தொகுப்பாளர் பிரேம்.பி கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது.
‘டியர் ரதி’ – படத்தின் நல்ல நோக்கங்களுக்காக ரசித்துப் பார்க்கலாம்!
ரேட்டிங்: 3/5.
