தேரே இஷ்க் மே – விமர்சனம்
நடிப்பு: தனுஷ், கிருத்தி சனோன், பிரியன்ஷு பெய்ன்யூலி, பிரகாஷ்ராஜ், புஷ்பராக் (டோட்டா) ராய் சௌத்ரி, பரம்வீர் சிங் சீமா, விரேன் பார்மன், முகம்மது ஸீஷான் அய்யுப், சித்தரஞ்சன் திரிபாதி, ஜயா பட்டாச்சார்யா, கமல் பாத்ரா, ஆசிஷ் வர்மா, பசந்த் குமார், வினீத் குமார், ராமா திக்சித், மாஹிர் மோஹியுதீன், தனய் அவுல், சிவ்ராஜ் வல்வேகர், வர்லின் பன்வார், மெங் சி லியாவோ, செஞ்சாலியா வைதிகா மற்றும் பலர்
இயக்கம்: ஆனந்த் எல் ராய்
திரைக்கதை: ஹிமன்ஷு சர்மா, நீரஜ் யாதவ்
ஒளிப்பதிவு: துஷார் காந்தி ராய்
படத்தொகுப்பு: ஹேமல் கோதாரி, பிரகாஷ் சந்திர சாஹூ
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்கள்: தனுஷ், மஷூக் ரஹ்மான், சினேகன், பா.விஜய், விவேக்
ஸ்டண்ட்: சுனில் ரொட்ரிக்ஸ்
கலை: நிதின் ஜிஹானி சௌத்ரி
தயாரிப்பு: டி சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் – பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், ஆனந்த் எல் ராய், ஹிமன்ஷு சர்மா
பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்
2013ஆம் ஆண்டு ‘ராஞ்சனா’ என்ற காதல் காவியத்தை வெற்றிக் காவியமாகக் கொடுத்தது நடிகர் தனுஷ் – இயக்குநர் ஆனந்த் எல் ராய் கூட்டணி. அதே கூட்டணியின் அதே ’ராஞ்சனா யுனிவர்ஸில்’ உருவாகி தற்போது நேரடிப்படமாக இந்தியிலும், மொழிமாற்றுப் படமாக தமிழிலும் வெளிவந்திருக்கிறது ‘தேரே இஷ்க் மே’.
’Tere’ என்ற இந்தி சொல்லை தமிழில் ’உன்’, Ishq’ என்ற சொல்லை தமிழில் ‘காதல்’, ‘Mein’ என்ற சொல்லை தமிழில் ‘இல்’ என்று மொழிபெயர்க்கலாம் என்பதால், ’Tere Ishq Mein’ என்ற இந்தி தலைப்பை, பொருள் மாறாமல் ‘உன் காதலில்’ என்று தமிழிலேயே வைத்திருக்கலாம். முழு படத்தையும் தமிழில் மொழிமாற்றம் செய்தவர்கள், தலைப்பையும் தமிழ்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சரி… இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

இந்திய விமானப் படையில் விமானியாக பணிபுரியும் நாயகன் ஷங்கர் (தனுஷ்), தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், தனக்கு மேலே உள்ள அதிகாரிகளின் பேச்சைக்கூட கேட்காமல், தன் மனதிற்கு சரி என பட்டதை செய்து வருகிறார். கட்டுப்பாடுடன் ஷங்கர் செயல்பட வேண்டும் என்பதற்காக, உளவியல் மருத்துவரிடம் இவர் கவுன்சிலிங் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு உளவியல் மருத்துவரான நாயகி முக்தியிடம் (கிருத்தி சனோன்) செல்ல, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், தானே முன்வந்து ஷங்கருக்கு கவுன்சிலிங் தருவதாகக் கூறுகிறார். நாயகன் ஷங்கரும், நாயகி முக்தியும் சந்திக்க… முன்கதை (பிளாஷ்பேக்) தொடங்குகிறது.
ஷங்கரும், நோட்டரி வழக்கறிஞராக இருக்கும் அவருடைய தந்தை ராகவ்வும் (பிரகாஷ்ராஜ்) தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்குக் குடிபெயர்ந்தவர்கள்.
ஷங்கர், கல்லூரியில் படிக்கும்போது அடி – தடி, உதை என முன்கோபியாகவும் முரடராகவும் வலம் வருகிறார். அங்கு முனைவர் (பிஹெச்டி) பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் முக்தி. எப்படிப்பட்ட வன்முறையான மனிதனையும் நார்மலான மனிதனாக மாற்ற முடியும் என அவர் நம்புகிறார். இது தான் அவர் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வறிக்கையின் (thesis) மையக் கருத்து. அவர் தன்னுடைய பிஹெச்டி ஆராய்ச்சிக்காக, வன்முறையாளனான ஷங்கரை கோபதாபம் இல்லாத சாந்தமான நபராக மாற்ற நினைக்கிறார். அப்படி ஷங்கரை மாற்றிவிட்டால், முக்தியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும். இதற்காக அவர் ஷங்கருடன் பழக ஆரம்பிக்கிறார்.
இச்சூழலில் முக்தி மீது ஒருதலையாய் காதல் கொள்ளும் ஷங்கர், தன்னை முக்தி காதலித்தால், அவர் விரும்புகிற மாதிரி அவரது ஆய்வறிக்கைக்கு உதவுவதாகக் கூறுகிறார். அதற்கு முக்தி, “நான் இதை காதலாக பார்க்கவில்லை; நீ வேண்டும் என்றால் காதலித்துக் கொள்” என்கிறார். அவர்களுக்கு இடையிலான பழக்கம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ஷங்கர் மீது முக்திக்கு மெல்லுசாய் காதல் அரும்பியபோதிலும், ஒரு வன்முறையாளனை வாழ்க்கைத் துணையாக ஏற்பதா? என்று குழம்புகிறார். எனினும், தன் வீட்டுக்கு வந்து தன் தந்தையிடம் பேசுமாறு கூறுகிறார்.
அதன்படி, ஷங்கர் சென்று முக்தியின் தந்தை யஷ்வந்தை (புஷ்பராக் (டோட்டா) ராய் சௌதுரி) சந்திக்கிறார். ஒன்றிய அரசில் இணைச் செயலாளர் என்ற உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான யஷ்வந்த், “நான் UPSC Civil Service தேர்வில் Prelims, Mains, Interview ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்திருக்கிறேன். என் மகளை மணக்க விரும்பும் உன்னுடைய தகுதி என்ன? நீ என்ன வேலை செய்கிறாய்?” என்று ஷங்கரிடம் நக்கலாகக் கேட்கிறார். தடுமாறும் ஷங்கரிடம் “முடிந்தால், நீ UPSC Civil Service தேர்வில் தேர்ச்சி பெற்று வந்து என் மகளை திருமணம் செய்துகொள்” என்று சவால் விடுகிறார். இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் ஷங்கர், ”நானும் UPSC படிக்கிறேன்; அதில் Prelims, Mains, Interview முடித்து அதிகாரி ஆகி காட்டுகிறேன். அதுவரை காத்திரு” என்று முக்தியிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார்.
மூன்று வருடங்களுக்குப் பின், Prelims முடித்துவிட்டு முக்தியைப் பார்க்க வருகிறார் ஷங்கர். ஆனால், முக்தி இந்த இடைப்பட்ட காலத்தில் தனக்கான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டு விட்டார். அந்த காதலனுடன் அவருக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில், ஷங்கர் அங்கு வர, அவரது ஆத்திரத்தால் அங்கு மிகப் பெரிய கலவரம் ஏற்படுகிறது. இந்த கலவரத்தால் காவல் துறையால் கைது செய்யப்படுகிறார் ஷங்கர். இதனைத் தொடர்ந்து அவருடைய தந்தை ராகவ் விபத்தில் மரணமடைகிறார். ஒரு பக்கம் காதலிக்கு திருமணம், மறுபக்கம் தந்தையின் மரணம்… இதன்பின் என்ன நடந்தது? என்பதை எமோஷனலாக விவரிக்கிறது ’தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஷங்கராக தனுஷ் நடித்திருக்கிறார். உருகி உருகி காதல் செய்யும் இடங்களில் ரொமான்டிக் இளைஞராக கவரும் தனுஷ், ஆக்ஷன் களத்திலும் தன்னுடைய அக்மார்க் தடத்தைப் பதிக்கிறார். துள்ளல் மிகுந்த இளைஞர், இறுக்கமான முகம் காட்டும் விமானப்படை வீரர் என இரண்டு தோற்றத்திலும் தூள் பரத்தி, தானொரு நடிப்பு அசுரன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.
நாயகி முக்தியாக கிருத்தி சனோன் நடித்திருக்கிறார். நாயகனின் வன்முறைப் பக்கத்தை அழிக்க நினைப்பவராகவும், குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவிப்பவராகவும் நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டி ஹார்ட்டின்களை வாங்கிக் கொள்கிறார் கிருத்தி சனோன்.
நாயகனின் தந்தை ராகவ்வாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். மகனைக் கண்டிக்கும் ஸ்ட்ரிக்ட் தந்தையாக இருந்தாலும் ஆங்காங்கே மகனுக்காக அன்பானவராக மாறும் பிரகாஷ் ராஜ் நடிப்பால் பார்வையாளர்களுடன் ‘நம்ம வீட்டு அப்பா’ என இணக்கமாகிறார். மகனைக் காப்பாற்ற அத்தனை அவமானங்களைச் சந்திக்க நேரிடும் காட்சிகளில் நம் இதயங்களையும் கனமாக்கி விடுகிறார்.
காதலுக்கு கறார் காட்டும் நாயகியின் தந்தை யஷ்வந்தாக வரும் டோட்டா ராய் சௌத்ரி, கல்லூரியில் நாயகனின் ஹீரோயிச விஷயங்களுக்கு துணையாக இருக்கும் நண்பன் வேத்தாக வரும் பிரியன்ஷு பெய்ன்யூலி உள்ளிட்ட ஏனைய கதாபாத்திரங்களில் வருபவர்களும் நல்லதொரு பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள்.
இயக்குநர் ஆனந்த் எல். ராய் தனது வழக்கமான காதல் கதையில் மீண்டும் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக எமோஷனல் காட்சிகள் வெகுவாக கவர்கின்றன. கதாபாத்திரங்களைத் தாண்டி இயக்குநர் ஆனந்த் எல். ராய் திரைக்கதையில் அமைத்த காட்சிகளும் கவர்கின்றன. தமிழ் டப்பிங் சில இடங்களில் சொதப்பினாலும், அந்த காட்சியின் எமோஷன் நம்முள் கடந்துவிடுகிறது. கிளைமாக்ஸ் அனைவரையும் கலங்க வைத்துவிட்டது.
படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர். ரஹ்மான், தனது பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறார். காதல் கதைக்களத்தில் உருவாகும் படத்திற்கு உயிரே இசை என்பதால் அதை சிறப்பாக செய்து, இப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
எடிட்டிங், ஒளிப்பதிவு, VFX படத்திற்கு பலம்.
’தேரே இஷ்க் மே’ – உள்ளத்தை உருக்கும் மற்றுமொரு காதல் காவியம்!
ரேட்டிங்: 4/5
