தீயவர் குலை நடுங்க – விமர்சனம்

நடிப்பு: அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு என்கேபிஎஸ், ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் மற்றும் பலர்

கதை & இயக்கம்: தினேஷ் லெட்சுமணன்

ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யு

படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்

இசை: பரத் ஆசிவகன்

கலை: அருண்சங்கர் துரை

ஸ்டண்ட்: காளி

தயாரிப்பு: ஜி.அருள்குமார்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அவலம் நம் சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நம் கமர்ஷியல் தமிழ் சினிமாவுக்கும் இப்பிரச்சனை மீது இப்போதெல்லாம் கவனமும், அக்கறையும் அதிகரித்து வருகிறது. அதனால் தான் ஒவ்வொரு வியாழன் / வெள்ளிக் கிழமைகள் தோறும் தவறாமல் ஒரு திரைப்படமாவது இப்பிரச்சனையை மையமாகக் கொண்டு வெளிவந்து, வெகுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், லாபம் ஈட்டவும் முயலுகிறது. அந்த வரிசையில் இந்த வெள்ளிக்கிழமை வெளிவந்திருக்கிறது ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம். இப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

நள்ளிரவை நெருங்கும் நேரம். ஆள் அரவமற்ற சென்னை புறநகரின் நெடுஞ்சாலையில், பிரபல எழுத்தாளர் ஜெபநேசன் (லோகு என்கேபிஎஸ்) ஏதோவொரு மனக்கலக்கத்துடன், தன் காரை தானே ஓட்டியபடி, தன்னந்தனியே சென்றுகொண்டிருக்கிறார். அப்போது படுவேகமாக வரும் ஒரு மோட்டார் சைக்கிள், எதிர்பாராத விதமாக குறுக்கே வர, தடுமாறும் கார் விபத்துக்குள்ளாகிறது. மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய, முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர், எழுத்தாளர் ஜெபநேசனை வலுக்கட்டாயமாகக் காரிலிருந்து வெளியே இறக்கி, அவரை கொடூரமாகக் கொலை செய்கிறார்.

இக்கொலை வழக்கைப் புலனாய்வு செய்து குற்றவாளியைப் பிடிக்கும் பொறுப்பை ஏற்கிறார், கேளம்பாக்கம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜூன்). இப்புலனாய்வில் தனக்கு உதவுவதற்காக கான்ஸ்டபிள் ஆறுமுகத்தை (தங்கதுரை) அவர் தேர்வு செய்துகொள்கிறார்.

மறுபுறம், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் நாயகி மீரா (ஐஸ்வர்யா ராஜேஷ்). குறட்டைக் கோளாறினால் அவதிப்படுவோரை நன்கு தூங்க வைக்கும் உயிர்க்காற்றுக் கருவியை, அவர்களது வீடுகளுக்கே சென்று அவர்களுக்குப் பொருத்தும் பணி செய்யும் ஆதி (பிரவீன் ராஜா), திருமண இணையதளம் (மேட்ரிமோனியல் சைட்) மூலம் பெண் தேடுவதை அறிந்த மீரா, அவருக்கு விருப்பம் தெரிவிப்பதோடு, அவருடன் காதலோடு நெருக்கமாகப் பழகத் தொடங்குகிறார்.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் மகுடபதியின் புலன்விசாரணை, எழுத்தாளர் ஜெபநேசனின் நெருங்கிய நண்பரும், கட்டுமானத் தொழில் செய்யும் பெரிய தொழிலதிபருமான ‘பில்டர்’ வரதராஜனை (ராம்குமார்) சந்தேகத்தின் பேரில் நெருங்குகிறது. அவரை மகுடபதி கிடுக்கிப்பிடி போட்டு கேள்விகள் கேட்கத் தொடங்கியதும், “எழுத்தாளர் ஜெபாவை கொன்றது யார் என்பது எனக்குத் தெரியும். இன்று இரவு நான் சொல்லும் இடத்துக்கு வாருங்கள். நான் விவரம் தருகிறேன்” என்கிறார் வரதராஜன்.

அன்று இரவு. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆட்களோ, விளக்குகளோ இல்லாத வெட்டவெளியில் வரதராஜனும், மகுடபதியும் சந்திக்கிறார்கள். வரதராஜன் விவரம் சொல்லத் தொடங்குவதற்கு முன்பே, முகமூடி அணிந்த மர்மநபர் தொலைதூர இருட்டிலிருந்து தனது கூர்மையான ஆயுதத்தை வீச, அது வரதராஜனின் கழுத்தை அறுத்து அவரை கொன்றுவிடுகிறது. உடனே தன் மோட்டார் சைக்கிளில் ஏறி, மின்னலெனப் பாய்ந்து தப்பிய மர்மநபர், வெகுதூரம் சென்ற பிறகு தன் முகமூடியைக் கழற்றுகிறார். அந்த முகமூடி மனிதர் வேறு யாரும் அல்ல; நாயகி மீரா தான்.

எழுத்தாளர் ஜெபநேசன், பில்டர் வரதராஜன் ஆகியோருக்கும் மீராவுக்கும் என்ன பிரச்சனை? சிறந்த ஆசிரியையான மீரா, இவர்களைக் கொன்றொழிக்கத் துணிந்தது ஏன்? மீரா தான் கொலைக்குற்றவாளி என்பதை இன்ஸ்பெக்டர் மகுடபதி கண்டுபிடித்தாரா, இல்லையா? மீராவுக்கு தண்டனை கிடைத்ததா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பும் எமோஷனும் கலந்து விடை அளிக்கிறது ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கொலைக் குற்றத்தை புலனாய்வு செய்யும் கேளம்பாக்கம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகுடபதியாக அர்ஜுன் நடித்திருக்கிறார். அவரது மிடுக்கான தோற்றமும், ஆர்ப்பாட்டம் இல்லாத அனுபவ நடிப்பும் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளன. குறுகலான லிஃப்ட்டுக்குள் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சியில் ‘நான் ஆக்ஷன் கிங்’ என்பதைக் காட்டியிருக்கிறார். சந்தேகத்தின் பேரில் மனைவியை விவாகரத்து செய்ய முயலும் கணவன் சம்பந்தப்பட்ட காட்சியில் அர்ஜூன் பேசும் வசனங்கள் கைதட்டலை அள்ளுகின்றன.

நாயகி மீராவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியின் ஆசிரியை, கொலைக் குற்றவாளி என்ற முரண்பட்ட இரு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சியிலும் தூள் பரத்தியிருக்கிறார். கிளைமாக்சில் அவர் பேசும் வசனம் அருமையான மெசேஜ்.

நாயகியின் தற்காப்புக் கலை ஆசிரியராகவும், நாயகி செய்யும் கொலைகளுக்கு உடந்தையாக இருப்பவராகவும் வரும் வேல ராமமூர்த்தி, நாயகியின் காதலர் ஆதியாக வரும் பிரவீன் ராஜா, எழுத்தாளர் ஜெபநேசனாக வரும் லோகு என்கேபிஎஸ், பில்டர் வரதராஜனாக வரும் ராம்குமார், ஆட்டிசம் பாதித்த சிறுமியாக வரும் பேபி அனிகா, அச்சிறுமியின் அம்மா கீதாவாக வரும் அபிராமி வெங்கடாசலம், கான்ஸ்டபிளாக வரும் தங்கதுரை, போலீஸ் உயர் அதிகாரியாக வரும் ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், பத்மன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தினேஷ் லெட்சுமணன். உள்ளத்தைப் பதறச் செய்யும் ஓர் உண்மை சம்பவத்தை கதைக்கருவாக எடுத்துக்கொண்டு, அதற்கு சஸ்பென்ஸ் மற்றும் சுவாரஸ்யம் கலந்த திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பான கிரைம் புலனாய்வு திரில்லர் ஜானரில் இப்படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். இன்றைய சமூகத்தில் நிலவும் முக்கிய அவலம் ஒன்றைச் சுட்டிக்காட்டி, பெண்குழந்தைகளைப் பெற்றவர்கள் உள்பட அனைவரையும் எச்சரிக்கும் படைப்பாக இதை உருவாக்கியதற்காக இயக்குநரை பாராட்டலாம்.

இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவும், லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பும் பார்வையாளர்களின் திரில் அனுபவத்தை அதிகரிக்க உறுதுணையாக இருந்துள்ளன.

‘தீயவர் குலை நடுங்க’ – பெண்குழந்தைகளைப் பெற்றவர்களும், மற்றவர்களும் விழிப்புணர்வு பெற அவசியம் பார்க்கலாம்; ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3/5