ஸ்பெயின் கார் பந்தயத்தில் 3-வது இடம்: அஜித்குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!

ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்த நடிகர் அஜித்குமார் அணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் கார் பந்தயத்தில் அஜித் அணி ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதையொட்டி, அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:

பார்சிலோனாவில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இந்த வெற்றியின் மூலம் உலக அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும், தமிழகத்தையும் பெருமையடைய செய்த நடிகர் அஜித்குமாருக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள்.

மேலும், இந்த சர்வதேசப் போட்டியின்போது, கார், பந்தய உபகரணங்கள், ஜெர்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை பயன்படுத்தியதற்காக தமிழக அரசு சார்பில் அவருக்கும், அவரது குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அணி இன்னும் பல வெற்றிகளை குவிக்கட்டும்.

இவ்வாறு உதயநிதி தெரிவித்துள்ளார்.

அஜித்குமார் நன்றி:

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அஜித் குமார். “தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுக்கு அஜித் குமார் மற்றும் அவரது ரேஸிங் அணி தனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது. உங்களின் அன்பும், ஆதரவும் எப்போதும் எங்களுக்கு துணையாக இருந்து வந்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித் குமார் பங்கேற்கும் புகழ்பெற்ற சர்வதேச மோட்டார் விளையாட்டு போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசியன் லெ மான்ஸ் தொடர்: டிசம்பர் 13 மற்றும் 14ம் தேதி சேபாங், மலேசியா. 2026 ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ். பிப்ரவரி 7 மற்றும் 8-ம் தேதி அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.