படையாண்ட மாவீரா – விமர்சனம்

நடிப்பு: வ.கௌதமன், பூஜிதா பொன்னாடா, சரண்யா பொன் வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, மன்சூர் அலிகான், மதுசூதன் ராவ், பாகுபலி பிரபாகர், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சாய் தீனா, கபீர்துஹான் சிங், தலைவாசல் விஜய், தமிழ் கௌதமன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: வ.கௌதமன்
ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்
படத்தொகுப்பு: ராஜா முகமது
பாடலிசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
பின்னணி இசை: சாம் சிஎஸ்
தயாரிப்பு: ‘விகே புரொடக்ஷன்ஸ்’ நிர்மல் சரவணராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
வடதமிழகத்தில் அதிகம் வாழும் வன்னியப் பெருங்குடி மக்களின் ’வன்னியர் சங்க’ தலைவராகவும், அச்சங்கத்தின் அரசியல் பிரிவான ‘பாட்டாளி மக்கள் கட்சி’யின் முன்னணித் தலைவர்களில் முக்கியமானவராகவும், இரு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்தவர், அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் பிறந்த ஜெ.குரு என்ற ஜெ.குருநாதன் என்ற காடுவெட்டி குரு. அவரது வாழ்க்கைக் கதையில் கொஞ்சம் உண்மையும், நிறைய கற்பனையும் கலந்து இயக்குநர் வ.கௌதமன் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘படையாண்ட மாவீரா’.
காடுவெட்டி குருவின் (வ.கௌதமன்) தாத்தா ரத்தினசாமி படையாச்சி, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்களின் கொடுமைகளில் இருந்து மக்களை காப்பாற்றுகிறார். தனது மகன் ஜெயராமன் படையாச்சியை (சமுத்திரக்கனி) பட்டாளத்தில் வேலை பார்க்க அனுப்புகிறார். பட்டாளத்து பணிக்காலம் முடிந்து சொந்த ஊரான காடுவெட்டிக்குத் திரும்பும் ஜெயராமன் படையாச்சி, அந்த ஊரின் கவுன்சிலர் ஆகிறார். ஒரு நாள் அவருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. இதனால் ஜெயராமன் படையாச்சியை கொலை செய்துவிடுகிறார்கள்.
தனது கணவரை கொன்றவரின் தலையை வெட்டி கோயில் சூலத்தில் சொருக வேண்டும் என்று ஜெயராமன் படையாச்சியின் மனைவி (சரண்யா பொன்வண்ணன்) சபதம் எடுக்கிறார். தனது தாயின் இ ந்த சபதத்தை நிறைவேற்றுகிறார் காடுவெட்டி குரு.
இதன்பின், கனிம வளங்களைத் திருடும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து மக்களின் நிலங்களை மீட்டுக் கொடுக்கிறார் காடுவெட்டி குரு. இதனால் கோபமுற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் காடுவெட்டி குருவை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சியிலிருந்து காடுவெட்டி குரு தப்பித்தாரா? அவர் எப்படி மரணித்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது, ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் மீதிக்கதைச் சுருக்கம்.
நாயகனாக, காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் வ.கெளதமன், விஜயகாந்த் சாயலில் இருப்பதாலோ என்னவோ, சண்டைக்காட்சிகள், நடனம் என அனைத்திலும் விஜயகாந்தை நகல் எடுத்து, அவரை போலவே நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் அசல் தன்மை இல்லை.
நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னாடாவுக்கு பெரிய வேலை இல்லை. சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சியில் தலை காட்டுவதோடு சரி.
நாயகனின் தந்தை ஜெயராமன் படையாச்சியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, குறைவான காட்சிகளில் வந்தாலும், தனது வழக்கமான பாணியிலான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
காடுவெட்டி குருவின் இளம்பருவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தமிழ் கெளதமன். பழிதீர்க்கும் தன் கோபத்தை கண்களில் மட்டும் இன்றி உடல்மொழியிலும் அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் உள்ளிட்ட ஏனையோரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
காடுவெட்டி குரு மீதான தவறான பிம்பத்தை உடைக்கும் விதமாக திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் வ.கெளதமன், காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களை ஒரு கதாசிரியராக கவர்ந்தாலும், கதை சொல்லல் மற்றும் ஒரு விசயத்தை காட்சி மொழியில் சொல்வதில் எந்தவித புதுமையையும் நிகழ்த்தாமல், ஒரு சாதாரண கமர்ஷியல் படமாக கொடுத்து சினிமா ரசிகர்களை சலிப்படைய செய்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் கமர்ஷியலாக இருப்பதோடு, சுமாராகவும் இருக்கிறது. சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசையில் சில இடங்களில் கவனம் ஈர்த்தாலும், பெரும்பாலான இடங்களில் பழைய படங்களை நினைவுப்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ராஜா முகமது பணியிலும் குறையில்லை.
’படையாண்ட மாவீரா’ – காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
ரேட்டிங்: 2.5/5