தணல் – விமர்சனம்

நடிப்பு: அதர்வா முரளி, லாவண்யா திரிபாதி, அஸ்வின் காக்குமனு, ஷா ரா, அழகம் பெருமாள், பரணி, சோனியா, போஸ் வெங்கட், செல்வா, லட்சுமி பிரியா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ரவீந்திர மாதவா
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
படத்தொகுப்பு: ஆர்.கலைவண்ணன்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
தயாரிப்பு: ‘அன்னை பிலிம்ஸ்’ எம்.ஜான் பீட்டர்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
அதர்வா முரளி நடிப்பில் வெளியான ‘டிஎன்ஏ’ திரைப்படத்தின் வெற்றி ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளுக்கு இடையே, அவரது அடுத்த படமான ‘தணல்’ திரைக்கு வந்திருக்கிறது. பிரச்சனைகள் காரணமாக நீதிமன்றம் சென்றதால் குறித்த நேரத்தில் வர இயலாமல், எல்லாம் சரியான பின்னர் சற்று காலதாமதமாக வெளிவந்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…
ஒரு கட்டிடத்துக்குள் பதுங்கியிருக்கும் வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேரை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்கிறது போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட் தலைமையிலான போலீஸ் படை. இதைக் கண்டு கோபம் கொள்ளும் முன்னாள் ராணுவ வீரரான அஸ்வின் காக்குமனு, அந்த போலீஸ் படையினர் ஏறிச்செல்லும் ஜீப்பை டிரான்ஸ்பார்மரில் மோத வைத்து, போஸ் வெங்கட் உள்ளிட்ட அனைவரையும் கொலை செய்கிறார். ஆனால், அவர்கள் விபத்தில் டிரான்ஸ்பார்மரில் மோதி உயிரிழந்ததாக போலீஸ் டிபார்ட்மெண்ட் நம்புகிறது.
இது நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மேற்படி போலீஸ் படையினர் பணியாற்றிய போலீஸ் ஸ்டேஷனுக்கு, நாயகன் அதர்வா முரளி, பரணி, ஷாரா உள்ளிட்ட ஆறு பேர் புதிதாக கான்ஸ்டபிள் பணியில் சேருவதற்காக வருகிறார்கள். அவர்கள் பணியில் சேர்ந்ததற்கான கடிதம் வழங்குவதற்கு முன்பே, அவர்களை அங்குள்ள போலீஸ் அதிகாரி ‘இரவு ரோந்து’ பணிக்கு அனுப்புகிறார்.
அப்படி நாயகன் அதர்வா முரளி உள்ளிட்ட அந்த ஆறு புதிய கான்ஸ்டபிள்களும் ‘ராத்திரி ரவுண்ட்ஸ்’ போய்க் கொண்டிருக்கும்போது, பாதாள சாக்கடையின் மூடியை திறந்துகொண்டு ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் வெளியே வருகிறான். அவன் இந்த கான்ஸ்டபிள்களைக் கண்டதும் வேகமாக ஓடுகிறான்.ஏதோ தவறு நடக்கிறது என்று அறிந்து கொண்ட இ ந்த கான்ஸ்டபிள்கள் துரத்துகிறார்கள்.
அவன் தெருக்களின் புகுந்து, வளைந்து, நெளிந்து, மதில் தாண்டி குதித்து ஓட, இவர்கள் துரத்த, கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் காணாமல் போகிறான்.அவன் காணாமல் போன பகுதி, கைவிடப்பட்ட குடிசைப் பகுதி போல் இருக்கிறது. அங்கு ஆள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது. போன வழி தெரியாமலும், திரும்பும் வழி அறியாமலும் இவர்கள் திகைக்கிறார்கள். அங்கே முன்னாள் ராணுவ வீரரான அஸ்வின் காக்குமனு நிற்கிறார்.
அஸ்வின் காக்குமனுவை இவர்கள் போலீஸ் பாணியில் விசாரிக்க செல்கிறார்கள். அப்போது அஸ்வின் காக்குமனு ஒரு கான்ஸ்டபிளை கத்தியால் வெட்டி விடுகிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியாகும் எஞ்சிய ஐவரும் அங்கிருந்து தப்பிக்க ஓடுகிறார்கள்.இவர்களைப் பிடிக்க அஸ்வின் காக்குமனு ஆட்கள் துரத்துகிறார்கள். இவர்கள் ஓடி ஒளிந்து தப்பிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
அஸ்வின் காக்குமனு தலைமையிலான அந்த சமூக விரோதக் கும்பல், சுரங்கப் பாதை வழி சென்று வங்கிகளைக் கொள்ளையடிக்கவும், மொத்த போலீஸ் படையையும் தந்திரமக சுரங்கப் பாதைக்கு வரவழைத்து, கூண்டோடு போட்டுத் தள்ளவும் திட்டமிட்டு இருப்பது அதர்வா முரளிக்கு தெரிய வருகிறது.
ஒரு முன்னாள் ராணுவ வீரரான அஸ்வின் காக்குமனு, வெறியுடன் மொத்த போலீஸ் படையையும் அழித்தொழிக்க நினைப்பது ஏன்? அவரது பின்னணி என்ன? அவரது சதியை முறியடிக்க சாதாரண கான்ஸ்டபிளான நாயகன் அதர்வா முரளியால் முடிந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘தணல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, புதிய கான்ஸ்டபிளாக அதர்வா முரளி நடித்திருக்கிறார். வசனக் காட்சிகளில் அளவான நடிப்பையும், ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டலான நடிப்பையும் வழங்கியிருக்கிறார். உயிர் பிழைப்பதற்காக வில்லனின் ஆட்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகளில் உயிர் பயத்தையும், அதே நேரத்தில் சக கான்ஸ்டபிள்களை காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தையும் தன் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வில்லனாக, முன்னாள் ராணுவ வீரராக, அஸ்வின் காக்கமனு நடித்திருக்கிறார். திரைக்கதையில் அவருக்கு நாயகனுக்கு சமமான இடம் அளிக்கப்பட்டிருப்பதை புரிந்துகொண்டு, வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அருமையாக நடித்திருக்கிறார்.
நாயகியாக லாவண்யா திரிபாதி நடித்திருக்கிறார். அவருக்கு
பெரிய வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
ஷா ரா, அழகம் பெருமாள், பரணி, சோனியா, போஸ் வெங்கட், செல்வா , லட்சுமி பிரியா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரவீந்திர மாதவா. உண்மையில் நடந்த ஓர் என்கவுண்ட்டர் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, புனைவுகள் சேர்த்து, விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லராக இதை படைத்திருக்கிறார். படம் தொடங்கி சுமார் 20 நிமிடங்களில் கதைக்குள் அழைத்துச் செல்பவர், அதிலிருந்து இறுதிக் காட்சி வரை, பார்வையாளர்களின் முழு கவனமும் திரையில் மட்டுமே இருக்கும்படியான திருப்பங்களோடு, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தன் பின்னணி இசை மூலம் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார். சக்தி சரவணனின் ஒளிப்பதிவும், கலைவண்ணனின் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை உயர்த்த உதவியுள்ளன.
‘தணல்’- விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளுக்காகப் பார்க்கலாம்!
ரேட்டிங்: 3/5.