நடிகர் ரவி மோகன் இயக்குநர் ஆனார்: ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ பிரம்மாண்ட தொடக்க விழாவில் அறிவிப்பு!

நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘ஆர்டினரி மேன்’ படத்தின் அறிமுகம், அவரது தயாரிப்பில் இயக்குநர் கார்த்தி யோகியின் “BROCODE” திரைப்பட்த்தின் அறிமுகம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர்.

இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீகௌரி பிரியா, மணிகண்டன், கண்ணா ரவி, அர்ஜுன் அசோக், மாளவிகா மனோஜ், ரித்தீஷ், ஜெனிலியா, பேரரசு என பலர் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர் & நடிகர் ரவி மோகன் பேசும்போது,
”என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த தருணத்தில் நான் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.
நான் இயக்குநர் ஆகி விட்டேன். நான் இயக்குநரானால் யோகி பாபுவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கான புரோமோவும் எடுத்துவிட்டேன். இன்று என்னுடைய இரண்டு படங்களின் பூஜையும் ஒரே நேரத்தில் நடப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
கார்த்தியும் நானும் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பின்போது தாய்லாந்தின் சாலையில் அவ்வப்போது பேசிக்கொண்டே நடந்து போவோம். அப்போது எங்களுடைய மீசை, தாடி, உடைகளை பார்த்து, இருவரும் அண்ணன் தம்பிகளா என்று பலர் கேட்டிருக்கிறார்கள். அந்த ப்ரோ கோட்-ம் அன்பும் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
சினிமா… கோடிக்கணக்கான மக்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சி. திரையரங்கில், யாரோ ஒருவரின் வசனமும் நடிப்பும் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும், கண்ணீர் சிந்தவும் செய்கிறது. பலரின் உழைப்பால் தான் ஒரு படம் உருவாகிறது. அந்தப் படங்களில் மக்களால் விரும்பப்பட்டவை வெற்றியை அடைகின்றன. பல நல்ல படங்கள் மக்களால் காலங்கள் கடந்தும் இன்னமும் கொண்டாடப்படுகின்றன.
ஒரு சாதாரண நபரை கூட, உலகம் கொண்டாடும் ஒரு பிரபல நட்சத்திரமாக மாற்றும் சக்தி சினிமாவுக்கே உண்டு. அதில் நானும் ஒருவன் தான்.
எனக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்தது என் ரசிகர்கள். அவர்கள் எனக்குக் கொடுத்த பரிசு – இந்த சினிமா. நடிப்பதைக் கடந்து, சினிமாவில் நான் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவது நிறைய இருக்கிறது. அது, நான் நீண்ட நாட்களாகக் கனவு காண்பதும்கூட.
அதில் ஒன்று தான் ரவி மோகன் ஸ்டுடியோஸ் – என் சொந்த தயாரிப்பு நிறுவனம். என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படியாக, என் மனசுக்கு பிடித்த இரண்டு முக்கிய விஷயங்களை வைத்திருக்கிறேன்.
ஒன்று – இயக்குநர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நான் நடிக்கும் ப்ரோ கோட் படம். இன்னொன்று – நம்ம யோகிபாபுவை வைத்து, நான் முதன்முறையாக இயக்கவிருக்கும் மற்றொரு படம்.
முக்கியமாக உங்களிடம் சொல்ல வேண்டிய விஷயம் இன்னும் இருக்கு. ரவி மோகன் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டது, என்னுடைய படங்களை தயாரிப்பதற்காக மட்டுமல்ல. பலரின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கத் தான்.
அதில், முதல் முறையாக திரைப்படம் இயக்கவிருக்கும் புதிய இயக்குநர்கள், இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, முன்தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதோடு, ஓடிடி தளங்களில் கற்பனை மற்றும் ஆவணப்படத் தொடர்கள் என பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
மேலும், சரியான முறையில், நல்ல உள்ளடக்கத்துடன் உருவாக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களுக்கு ஆதரவளிக்க எப்போதும் ஒரு துணைக் கை இருக்கும். நல்ல கைத்திறமைகளுக்கு, திரை கதவுகள் திறக்கப்படும்!
புது புது பாடல்களை உருவாக்கும் சுயாதீன இசைத் திறமையாளர்களுக்கு அடையாளம் கொடுக்கவும் இதே நிறுவனம் பங்கெடுக்கிறது.
சினிமா துறையில் ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் நடிகர்களாகவும், இயக்குநர்களாகவும். அவர்களில் பலர் ஏற்கனவே ரவி மோகன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர். இன்னும் பல நண்பர்களுடன் சேர்ந்து நல்ல படங்கள் செய்ய வேண்டும்.
இதுவே எங்களின் முக்கிய நோக்கம். இது ஒரு நீண்ட பயணம். தனி ஒருவரின் உழைப்பையும் கனவையும் தாண்டி வெற்றியை அடைவதற்கு, இதில் பயணிக்கப்போகும் உங்களின் 200% பங்களிப்பும் உறுதியும் இருக்கும் என்பதே நம்பிக்கை. அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எல்லாரும் பயன் அடைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
சிவராஜ் அண்ணா எனக்காக இங்கு வந்து இந்த அளவிற்கு பேசுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மிக்க நன்றி அண்ணா. நான் உங்க வீட்டிற்கு வந்தேன் நீங்கள் சாப்பாடு போட்டீர்கள். உங்கள் வீட்டு உப்பை சாப்பிட்டு இருக்கிறேன். அந்த நன்றி எனக்கு எப்போதும் இருக்கும்.
கன்னடத்தில் சிவா அண்ணன் படம் தான் சூப்பர் ஹிட் ஆகும். அவருடைய படங்களை எனது தந்தை வாங்கி தெலுங்கில் வெளியிடுவார். அப்போது இருந்தே நான் சிவா அண்ணனை பார்த்து தான் வளர்ந்தேன். அவருடன் ஒரு காட்சியில் நடித்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் நன்றாக வளர்ந்த பிறகு நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கு அவர் விருப்பப்படி வாய்ப்பு கிடைக்கும்.
இன்று இன்னொரு இன்ப அதிர்ச்சி. நான் இயக்குனராக முடியும், தயாரிப்பாளராக முடியும் என்ற நம்பிக்கையோடு, உன்னால் பாடலாசிரியராகவும் ஆக முடியும் என்று கெனிஷா நம்பிக்கை கொடுத்தார். அந்த நம்பிக்கையில் நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். அவர் அம்மாவை பற்றி எழுத சொன்னார். ஆனால், நான் என் அம்மாவை மனதில் நினைத்து எழுதினேன். அம்மா என்பது உறவு அல்ல, உணர்வு என்று அப்போதுதான் புரிந்தது. நான் எழுதிய பாடல் வரிகளுக்கு கெனிஷாவே இசையமைத்து பாடியுள்ளார்” என்று பேசினார்.